விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மன நிம்மதி தரும் சந்நிதி!

சிற்றாறு பாயும் செண்பக மலர்கள் நிறைந்த வனப் பகுதி. அந்தப் பகுதியை ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். சிறந்த சிவபக்தனான அவன், லிங்கம் நிறுவி செண்பக மலர்களால் பூஜை செய்து வழிபட்டு வந்தான். காலம் சென்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

மயில் வாகனன்

சிற்றாறு பாயும் செண்பக மலர்கள் நிறைந்த வனப் பகுதி. அந்தப் பகுதியை ஆண்டு வந்தான் குலசேகர பாண்டியன். சிறந்த சிவபக்தனான அவன், லிங்கம் நிறுவி செண்பக மலர்களால் பூஜை செய்து வழிபட்டு வந்தான். காலம் சென்றது. பின்னாளில் அந்த இடம் கவனிப்பாரின்றி பாழ்பட்டது.

அந்தப் பகுதியில் கோட்டை அமைத்து பாண்டிய அரசை விரிவாக்கினான் மன்னன் பராக்கிரமன். அவனுக்கு காசி விஸ்வநாதர் மீது மிகுந்த பக்தி. வருடம் ஒரு முறையேனும் காசி சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். அரசை குறையின்றி நடத்த வேண்டுமானால், அவன் ராஜ்ஜியத்திலேயே இருக்க வேண்டும் என்று சிவபெருமான் எண்ணம் கொண்டார். ஒரு நள் இரவு அவன் கனவில் வந்த அவர், அவனது முன்னோர் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் இருப்பதாகவும், அந்த லிங்கத்தின் இருப்பிடத்தை கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பின்தொடர்ந்தால் காணலாம் என்றும் உணர்த்தினார்.

விழித்து எழுந்த மன்னன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். தன் காலடியில் இருந்து கிளம்பிச் சென்ற எறும்புகள் பின்னே சென்றான். செண்பக வனத்தில் ஓர் இடத்தில் சிவலிங்கம் இருந்தது கண்டு மகிழ்ந்தான். அங்கே புதர்களை அகற்றி, சிவபெருமானுக்கு கோயில் எழுப்பினான். தனக்கு விருப்பமான அந்த சுவாமிக்கு, காசி விஸ்வநாதர் என்றே பெயர் சூட்டினான்.

வடக்கில் காசியில் அருளும் விஸ்வநாதர் தென் திசையான இங்கே கோயில் கொண்டதால் இந்தத் தலம், தட்சிண காசி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் தென்காசி என மருவியது.

காசியில் அருளும் விசாலாட்சி, இங்கே உலகைக் காப்பவளாக உலகம்மன் என்ற பெயரில் அருள் புரிகிறாள்.

மன்னன் குலசேகர பாண்டியனுக்கு புத்திரப்பேறு இல்லை. மன வருத்தத்தில் இருந்த அவனுக்கு, ஒரு மகிழ மரத்தடியில் குழந்தையாகத் தவழ்ந்து காட்சி தந்தாள் அம்பிகை. அந்தக் குழந்தை அம்பிகையே என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

குழந்தைக்கு குழல்வாய்மொழி நாயகி எனப் பெயரிட்டான். சிறந்த சிவ பக்தையாக வளர்ந்த அவள், சிவனையே எண்ணித் தவமிருந்து, சிவபெருமானையே மணாளனாக அடைந்தாள். உலகை ஆட்சி செய்யும் விசாலாட்சி இங்கே உலக நாயகியாக, உலக அம்மனாகக் கோயில்கொண்டாள். இதை அடுத்து அங்கே உலக அம்மைக்கு சந்நிதி எழுந்தது. இந்தக் கோயிலும் உலகம்மன் கோயில் என்றே மக்களின் மனதில் குடி கொண்டது. இன்றும் இக்கோயிலை உலகம்மன் கோயில் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

இந்தக் கோயிலைக் கட்டியபோது மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு உதவ, சிவபெருமானே அடியாரின் வேடத்தில் வந்து, கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை கூறினாராம். எனவே அடியாராக வந்த சிவபெருமானுக்கு சதுரமான பீட வடிவில் சந்நிதி உள்ளது.

நெடிதுயர்ந்த கோபுரத்தின் கீழ் மகிஷாசுரமர்த்தினி, காளியம்மன், திருப்பணி விநாயகர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஏதேனும் பணியைத் துவங்கும் முன்பாக இந்தத் திருப்பணி விநாயகரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, பொதிகை மலைக் காற்று நம்மை புத்துணர்ச்சியூட்டுகிறது. கோபுரத்தின் கீழே புல்வெளியில் அமர்ந்தால், காற்று நாலா திசைகளில் இருந்தும் சுழன்று சுழன்று வீசுவதை நாம் உணரலாம்.

இங்கே சிவபெருமானின் சந்நிதி முன் மண்டபத்தில் வலப்புறம் நவகிரக சந்நிதி உள்ளது. இந்தத் தலத்தில் விசேஷமாக அமைந்துள்ளது இந்த சந்நிதி. இரட்டை நவகிரகங்கள். பொதுவாக நவகிரகங்கள், தங்களுக்கான திசையை நோக்கியபடி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். சில தலங்களில், நேர் வரிசையில் இருப்பர். ஆனால், இங்கே நவகிரக மண்டபத்தில் அவரவர் திசையிலும், மண்டபத்தின் முன் நேர் வரிசையிலும் கிரகங்கள் இருப்பது சிறப்பு.

இதை அடுத்து முகப்பு மண்டபத்தில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், மன்மதன், அன்ன வாகனத்தில் தோளில் கிளியுடன் ரதி, திருமால் மத்தளமும், பிரம்மா தாளமும் இசைக்க ஆயுதங்களுடன் நடனமாடும் ஊர்த்வதாண்டவர், ஊர்த்வகாளி, கையில் கரும்புடன் வேணுகோபாலர் என வரிசையாக தூண்களில் சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இவை.

விஸ்வநாதர் சந்நிதியில் தரிசித்துவிட்டு பிராகார வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி. இவருக்கு வியாழக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பிராகாரத்தில் முக்கியமாக நாம் காண்பது, காசிக்கிணறு. பாண்டியன் இங்கே கோயில் எழுப்பியபின், பெருமானுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்ய விரும்பினான்.

அதற்காக இங்கேயே கங்கையை பொங்கச் செய்தார் சிவபெருமான். கங்கையில் இருந்து நீர் எடுத்துவந்து மன்னனே இந்தக் கிணற்றில் சேமித்ததாகவும் சொல்வர். இந்த தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. காசி விஸ்வநாதரை வேண்டிக் கொண்டு, முன்னோருக்கு திதி தர்ப்பணம் உள்ளிட்டவை செய்தால், அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

இங்கே செண்பகம், பலா ஆகிய தல விருட்சங்கள் உள்ளன. பிராகாரத்தில் எதிரெதிரே இவை இரண்டும் உள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் பலா மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்து மஞ்சளால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். சுவாமி சந்நிதியில் பீட வடிவில் சாஸ்தா சந்நிதி, சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே பாலமுருகன் சந்நிதி கொண்டுள்ளார். இது, சோமாஸ்கந்த அமைப்பாக உள்ளது.

ஆலய வெளிப் பிராகாரத்தில் 40 முக்கோணங்களுடன் கூடிய ஸ்ரீசக்ர அமைப்பில் தரணி பீடம் என்ற பராசக்தி பீடம் உள்ளது. அம்பாளே இதில் இருப்பதாக ஐதீகம். கலைகளில் சிறக்க இதற்கு பச்சைப் புடவை சாத்தி வழிபடுகின்றனர்.

இந்தக் கோயிலில் 9 நிலைகளுடன் கூடிய கோபுரத்தை பாண்டியன் 15ம் நூற்றாண்டில் கட்டினான். ஆனால், இடி தாக்கி கோபுரம் இரண்டாகப் பிளந்தது. பின்னர் 1990ல் புதிதாகக் கட்டப்பட்டது.

மன்னனுக்கு மரியாதை: பராக்கிரம பாண்டியன், கோயிலை பராமரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினான். "இந்த ஆலயம் காலத்தால் சிதைவடையுமானால், அதனை சரிசெய்பவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன்' என ஒரு கல்வெட்டு வைத்தான். கோபுரத்தின் கீழே பதியப்பட்டுள்ளது இந்தக் கல்வெட்டு. பராக்கிரம பாண்டியன் விக்ரகத்துக்கு ஐப்பசி, மாசி மாத பிரம்மோற்ஸவத்துக்கு முன் பரிவட்டம் கட்டி, மரியாதை செய்யப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது இவரே வடத்தைப் பிடித்து துவக்கி வைப்பது போல பாவனை செய்யப்படுகிறது.

சுயம்பு மூர்த்தியான பெருமானை, நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் வழிபட்டுள்ளதாக தல புராணம் கூறுகிறது.

பிரார்த்தனை: தென்காசி விஸ்வநாதரை வணங்கினால் காசியில் வழிபட்ட புண்ணியம் கிட்டும். மன நிம்மதி பெற இவரை வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்: மாசி மகப் பெருவிழா, புரட்டாசி நவராத்திரி கொலு, ஐப்பசியில் திருக்கல்யாணம், ஆவணி மூல தெப்பத் திருவிழா, தை அமாவாசை பத்திர தீப திருவிழா ஆகியவை முக்கியமான விழாக்கள்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-8.30 மணி வரை.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 154 கி.மீ., நெல்லையில் இருந்து 54 கி.மீ. தொலைவு தகவலுக்கு: 04633- 222 373.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.