புகழ் தரும் கீர்த்தி நாராயணன்!

சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், செங்கல்பட்டு அருகே, பாலாற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீர்த்தி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில், திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக த
புகழ் தரும் கீர்த்தி நாராயணன்!
Updated on
2 min read

சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், செங்கல்பட்டு அருகே, பாலாற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீர்த்தி நாராயணப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

கருவறையில், திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தன்னை வழிபடுபவர்களுக்கு கீர்த்தியையும், புகழையும் அருள்கின்றார். அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர். இத்திருக்கோயிலில் ஆழ்வார்கள், ஆச்சாரியார்களின் திருநட்சத்திரங்களின்போது சாற்றுமுறை நடைபெறுவது சிறப்பு.

கருவறையின் வலப்புறம் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியும், மலர் மங்கை தாயார் என்ற பெயர் கொண்டு பக்தர்களுக்கு வற்றாத செல்வத்தை வழங்குகிறார். நவராத்திரியின் போது தாயார்க்கு லட்சார்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

பலாப்பூர், கீர்த்திநாராயணப் பெருமாள் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலை அடுத்து சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கும் தீபஸ்தம்பம் அமைந்துள்ளது. அதனை அடுத்து பலிபீடமும், கருடன் சந்நிதியும் உள்ளன.

கோயிலின் முன்பு உள்ள 12 கால் மண்டபம் மிக அழகானது. விஜய நகர கால கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மண்டபத் தூண்களில் திருமாலின் பல்வேறு வடிவங்கள். கூர்ம அவதாரம், கண்ணன், நரசிம்மரின் பல்வேறு வடிவங்கள், சக்கரத்தாழ்வார், ராமர், ஆஞ்சநேயர் போன்ற பல வடிவங்களை புடைப்புச் சிற்பங்களாகக் கண்டு மகிழலாம்.

இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணியின்போது கிடைத்த விஜயநகர மன்னர் சதாசிவராயர்(கி.பி.1542) செப்பேடு, இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக்கூறுகிறது.

முன்பு இவ்வூர் "பலாபுரம்' என அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. இவ்வூரின் எல்லைகளை "பராங்குசபுரம்' என்று குறிப்பிடுகின்றனர். நம்மாழ்வாருக்கு "பராங்குசன்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. பராங்குசபுரம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி பலாப்பூர் என வழங்கியிருக்கலாம் என்று கருத முடிகிறது.

இக்கோயிலில் திவ்ய பிரபந்தங்களையும், வேதங்களையும் பாடுவதற்கு தானம் அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் செல்வம், மரம், செடிகள் நிறைந்த நந்தவனம், ஏரிகள்-குளங்கள் எப்பொழுதும் நிலைத்து நிற்கவும் வேண்டி தானம் அளித்ததாக செப்பேடு குறிப்பிடுகிறது. இன்றும் இவ்வூருக்கு செல்லும் வழியில் மரங்கள், செடிகள் நிறைந்த காடு போன்ற அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திருக்கோயிலில் கருவறையை அடுத்து கோதண்டராமர் சந்நிதி அமைந்துள்ளது.

நன்மையும், செல்வமும் அளிக்கும் ராமபிரான் தனது கரங்களில் வில் - அம்பு ஏந்தி கோதண்டராமனாக காட்சி தருகிறார். அருகிலே தம்பி லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோருடன் காட்சி தரும் கோலம் அற்புதமானது. காண கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகிய திருமேனிகள்.

இத்திருக்கோயிலில் ராமநவமி விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. நாள்தோறும் சாற்றுமுறையும், திருமஞ்சனமும் நடக்கிறது. ராமநவமி அன்று கருட வாகனத்தில் வீதி உலா எழுந்தருளுவது மிகவும் சிறப்பு. வருகிற 23ஆம் தேதி ராம நவமி திருவிழா துவங்கி சிறப்பாக நடைபெறுகிறது.

புகழும், செல்வமும் வழங்கும் பலாப்பூர் கீர்த்தி நாராயணப் பெருமாளை வழிபட்டு வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவோம்.

தகவலுக்கு: 98404 45054.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com