ராணியைக் காத்த ரமணன்!
பஞ்சபாண்டவர்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் அமைந்துள்ள தலம் பாண்டமங்கலம்.


பஞ்சபாண்டவர்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் பின்னணியில் அமைந்துள்ள தலம் பாண்டமங்கலம்.பாண்டவர்களின் வனவாசம் முடியும் தருவாயில் அவர்களை அழிக்க துரியோதனன் யாகம் ஒன்றை நடத்தினான். அதிலிருந்து தோன்றிய வேதாளத்திடமிருந்து பாண்டவர்களைக் காத்தார் கண்ணபிரான். தங்களைக் காத்த கிருஷ்ணனுக்கு பூஜை, வழிபாடுகள் நடத்திய தர்மர் இந்த இடத்திற்கு "பாண்டவபுரி' என்று பெயரிட்டார்.
பாண்டிய மன்னர்கள் வம்சத்தில் வந்த ராணி மங்கம்மாளுக்கு ஏற்பட்ட தீராத நோய் கிருஷ்ண பரமாத்மாவின் அருளால் தீர்ந்தது. எனவே மங்கம்மாள் இத்தலத்தில் பல்வேறு ஆன்மிகத் தொண்டுகளைச் செய்தாள். அதனால் இந்தத் தலம் பாண்டியமங்கலம் என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி பாண்டமங்கலம் என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு. இன்றளவும் இங்குள்ள பெருமாளுக்கு இந்தச் சம்பவம் வழிபாட்டுத் துதியாக சொல்லப்படுகிறது.
பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது வராகர் புஷ்கரணியுடன் கோயில் கொண்டதைக் கண்டனர். உடனே அவர்களுக்கு திருமலைநாதன் நினைவில் வர, பெருமாளை வேண்டினர். அவர்களின் பக்திக்கு இரங்கி, பிரசன்னமாகி காட்சியளித்ததால் இத்தலத்து இறைவனுக்கு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆலயம் மிகப் பழமையானது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்புரிகிறார் பிரசன்ன வெங்கட்ரமணர். இதுதவிர வராகர், ஹயக்ரீவர், தன் வந்திரி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ருக்மணி - சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணன், ஆண்டாள் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அபூர்வமாக நவகிரகங்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலில் ஷேத்ரபாலகர் வீற்றிருக்கிறார். இவருக்கு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
இங்குள்ள தீர்த்தம் "வராக புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. தீராத தனது வயிற்று வலியைத் தீர்த்து வைத்த பிரசன்ன வெங்கட்ரமணருக்கு தேர் செப்பனிட்டுக் கொடுத்தார் மைசூர் மகாராஜா. அவரின் பிறந்த நாளான தை மாதம், அசுவதி நட்சத்திரத்தன்று தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகிற நவம்பர் 23ஆம் தேதி மகாசம்ப்ரோஷணம் நடக்கிறது. நவம்பர் 19ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. பாண்டவர்களுக்கு அருள்புரிந்த பிரசன்ன வெங்கட்ரமணரை நாமும் வழிபட்டு பலன் பல பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...