ஒரு முறை இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், சுயம்பு வடிவான சிவபெருமானை வணங்கினார். அப்போது சிவனார் தன் பொன் நிறம், வெண்மை, சிவப்பு, கருமை, புகை நிறம் ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தி அருள்புரிந்தார். மேலும், "வெண்மை நிறத்தில் இருந்து நீரும், பொன் நிறத்திருந்து மண்ணும், செம்மை நிறத்திருந்து நெருப்பும், கருமை நிறத்திருந்து காற்றும், புகை நிறத்திருந்து ஆகாயமும் வெளிப்படும்' என்றார். இதனைக் கேட்ட பிரம்மா, ஐந்து நிறங்களில் தோன்றி ஐந்து பூதங்களையும் தன்னில் அடக்கியவராக அருள் புரியும் ஈசனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம் இட்டு வணங்கினார். அதன் படி, சிவபெருமான் நீர்த் தலமான திருவானைக்காவலும், நிலத் தலமான காஞ்சியும், நெருப்புத் தலமான திருவண்ணாமலையும், வாயுத் தலமான காளஹஸ்தியும், ஆகாயமான சிதம்பரமும் என , ஐந்து பூதங்களையும் தன்னுள் ஒன்றாக அடக்கி உறையும் பிரானாக அருள் புரியும் தலம் என்பதால் உறையூர் எனப்பட்டது இந்தத் தலம். பெருமான் இங்கே "பஞ்சவர்ணேஸ்வரர்' என்றும் "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடப் பெறுபவராகவும் ஆனார்.