திருக்கழுக்குன்றத்திலிருந்து - அமிஞ்சிகரை என்ற ஊர் செல்லும் பாதையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வீராபுரம். பசுமையான வயல்கள், தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய கிராமம். இவ்வூரில் பிள்ளையார் கோயில், கிராம தேவதைகோயில், சோலை வாழி அம்மன் கோயில், சிவன் கோயில் என்று பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சிவன் கோயிலில் திருப்பணி நடைபெறுகிறது.
இக்கோயில் மிகவும் பழைமையானது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் இது. சோழ மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதையும் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். சதுர வடிவமான ஆவுடையாரும் பழைமையான லிங்க பானமும் இக்கோயிலின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன. இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை "கூச்சீசுவரர்' என அழைக்கின்றனர். ஆனால் இக்கோயிலின் இறைவன் கல்வெட்டுகளில் "உஞ்சீசுவரத்து ஆழ்வார்' என்று குறிக்கப்பட்டுள்ளார். இறையருளை வாரி வழங்கும் இறைவன் என்பது இதன் பொருள். முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இக்கோயில் சிறப்பாகப் போற்றப்பட்டதையும் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இராஜராஜ சோழனின் "அணுக்கபீமர்' என்ற படைப்பிரிவின் தளபதியான "விடங்கன்' என்பவர் இக்கோயிலில் இறைவனுக்கு உச்சி காலத்தில் அமுது படைக்க நிலம் தானமாக அளித்துள்ளார். இவ்வூர் முன்பு "நெடுங்குன்றம்' எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
இக்கோயிலின் கருவறையில் லிங்க வடிவத்திற்கு பின்புறம் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இருந்து வழிபாடு செய்துள்ளனர்.
சிம்மாசனத்தில் சிவனும், உமையும் அமர்ந்திருக்க தேவியின் மடியில் குகன் (முருகன்) சிறு குழந்தையாக அமர்ந்திருக்கும் அற்புத கோலத்தை இங்கே காணலாம். சிவபெருமானின் காலடியில் பூத கணங்களும், அறியாமையின் வடிவமான "முயலகனும்' காணப்படுகின்றனர். சிவபெருமானின் பின்புறத்தில் பிரம்மாவும், திருமாலும் நின்ற கோலத்தில் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மணற்கல்லால் செய்யப்பெற்ற அழகிய சிற்ப வடிவம் இது.
பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கோயில்கள் போன்ற பெரும்பாலான திருக்கோயில்களில் கருவறை லிங்க வடிவத்திற்கு பின்னால் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இக்கோயிலிலும் அதுபோன்றே "விடங்கரான சோமாஸ்கந்தர்' வடிவினை கருவறை சுவரில் வைத்து திருப்பணி செய்ய உள்ளனர்.
இக்கோயிலின் எதிரில் உள்ள திருக்குளம் கல்யாணி குளம் எனப்படுகிறது. இதனுடைய கரையில் ஜேஷ்டா தேவியின் சிற்பம் வழிபடப் படுகிறது. இதுவும் பல்லவர் காலத் திருமேனியாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க வீராபுரம் கோயிலில் வருகிற அக்டோபர் மாதம் குடமுழுக்கு செய்ய உத்தேசித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மன் சந்நிதியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 96778 04565.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.