ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பக்தர் நோய் தீர்க்கும் பிரான்

திருமலை வேங்கடேசப் பெருமானின் பரம பக்தன் சோமசர்மா. எல்லா வளமும் இருந்தும் புத்திரப் பேறு மட்டும் இல்லை.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2013, 10:43 am

மயில் வாகனன்

திருமலை வேங்கடேசப் பெருமானின் பரம பக்தன் சோமசர்மா. எல்லா வளமும் இருந்தும் புத்திரப் பேறு மட்டும் இல்லை. பெருமாளை நோக்கி தினமும் வேண்டியவண்ணம் இருந்தான். ஒருநாள், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, திருமலை யாத்திரைக்குக் கிளம்பிவிட்டான்.

இருவரும் காவிரிக் கரையில் பயணப்பட்டார்கள். காவிரிக் கரையில் உள்ள கிராமத்தில் தங்கியிருந்தபோது, ஒருநாள் இரவு சோமசர்மாவின் கனவில் நாரத மகரிஷி தோன்றினார். திருக் கூடலூரான கூடுதுறைக்குச் செல்லுமாறும், அவருக்கு அங்கே சிறந்த வழி கிடைக்கும் என்றும் கூறினார்.

கனவு நிலையில் இருந்து விழித்த சோமசர்மா, மனைவியிடம் உள்ளக்களிப்போடு கூறினான். இருவரும் உவகை பொங்க, பெருமாளின் அருளைப் புகழ்ந்தவாறே கூடுதுறை சென்றனர். அங்கே சிலர் அவர்களை வரவேற்று, கருவூருக்கு அருகில் உள்ள மலைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த மலை, மிகச் சிறிய மலைதான். ஆனால், ஒரு முறை ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் எழுந்த போட்டியில், ஏழுமலையான திருவேங்கட மலையில் இருந்து வாயு பகவானால் பெயர்த்து எடுத்து வரப்பட்ட ஒரு சிறு துளியாக அது திகழ்ந்ததாம். அந்த வகையில் அது தனிப்பட்ட புகழைப் பெற்றிருந்தது. அந்த மலையில், அப்போது சிற்ப வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஓர் இடத்தில், கற்பிளவுக்கு நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அங்கே கல்யாண வேங்கடேசராக பெருமாள் காட்சி தந்து, சோமசர்மாவின் பக்திக்குப் பரிசாக பிள்ளைச் செல்வம் ஈடேறும் என்று வரமளித்தார். அந்த இடத்தில் பெருமான் சுயம்புவாக எழுந்தருளினார்.

குடைவரைக் கோயிலான இங்கே பெருமாள் பாறையில் பிரமாண்டமான சுயம்பு மூர்த்தியாக, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஏக தள விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். சுமார் 70 படிகளைக் கடந்து சிறு குன்றின் மீது இருக்கும் கோயிலைச் சென்றடைந்து, பெருமாளை தரிசிக்க வேண்டும். கீழே பிரமாண்டமான கருடன் உருவமும், தொடர்ந்து, ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என உற்ஸவங்கள் நடத்தப் பெறும் கல்யாண மண்டபமும் உள்ளன.

கோரிக்கை நிறைவேறப் பெற்ற பக்தர்கள், தங்கள் திருமணத்தை இங்கேயே சிறப்பாக நடத்திக் கொண்டு, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இங்கே மூலவர் கல்யாண வேங்கட ரமணராகப் போற்றப்படுகிறார். உற்ஸவர் ஸ்ரீனிவாசர். ஸ்ரீதேவி - பூதேவி சகிதராகக் காட்சி தருகிறார். கோவில் சுமார் 500 வருடங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பதி மலையுடன் தொடர்பு கொண்டதால், இது தென் திருப்பதி என்று போற்றப்படுகிறது.

செம்மாலி சமர்ப்பணம்: செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரியவர்கள் சிலரின் கனவில் பெருமாள் தோன்றி, தனது பாதங்களுக்கு அளவு சொல்லி அதேபோல் பாதரட்சைகளைச் செய்து கொண்டு வருமாறு கூறினார். அந்தப் பெரியவர்களும் பெருமாளின் மனத்துக்குப் பிடித்த வகையில், அவர் கேட்ட அளவில் செருப்புகளைத் தயாரித்து கொண்டு வந்தனர். இதனை நினைவூட்டும் வண்ணம், கோமாளி வேடம் தரித்து, செருப்புகளைக் கொண்டு வந்து, பெருமாள் சந்நிதியில் வழங்குவர். இக்கோயிலில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படும் இது, செம்மாலி சமர்ப்பணம் என்று பெயர் பெற்றது.

இங்கே பெருமாள் உருவ ஒழுங்கற்ற சுயம்பு நிலையில் காட்சி தருகிறார். பெருமாள் மார்பில் வட்சஸ்தலத்தில் ஸ்ரீலட்சுமி வீற்றிருக்கிறார். திருப்பதியைப் போன்று, இங்கும் தனித் தாயார் சந்நிதி கிடையாது.

பிரார்த்தனை: முகத்தில் ஏற்படும் பரு மற்றும் மருக்கள், தழும்புகள் ஆகியவை மறைய இங்கே உப்பு, மிளகு, வெல்லம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக அளிக்கிறார்கள். திருமண பாக்கியத்துக்காகவும், குழந்தைச் செல்வம் கிட்டவும் இங்கே பெருமாளை நினைந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

மேலும் பக்தர்களின் நோய் நொடிகளை நீக்கும் விதமாக அவர்களின் வேண்டுதல்களை பெருமான் நிறைவேற்றித் தருகிறான் என, நோய் தீர்க்கும் பிரான் இவர் என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர் பலன்

பெற்றவர்கள்.

பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வித்தும், சந்தனக் காப்பு அலங்காரம் செய்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். மேலும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். வெண்ணெய், சந்தனம், வஸ்திரங்கள் அளித்தல், விளக்கேற்றுதல், துளசி மாலைகளை அணிவித்தல், அன்னதானம் என பக்தர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கி, பெருமாளின் அருளைப் பெறுகின்றனர்.

விழாக்கள்: இங்கே 22 நாட்கள் புரட்டாசி உற்ஸவம் களைகட்டும். எனவே, செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வருவர்.

17 நாட்கள் மாசி மக உற்ஸவம், மாசி தேர்த் திருவிழா, கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம், வைகுந்த ஏகாதசி, வருடப் பிறப்பு தினங்கள், பொங்கல் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சந்நிதி தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4-9 வரை

இருப்பிடம்: கரூர் நகரில் இருந்து சுமார் 4 கி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.