பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தை அமாவாசையில் தென்புலத்தார் வழிபாடு!

அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு வழிபாடு, தர்ப்பணம் செய்வது நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள்

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 11:35 am

எஸ். வெட்கட்ராமன்

அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு வழிபாடு, தர்ப்பணம் செய்வது நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று. நமது நலம் கருதியே தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கம். அதுவும், தை, ஆடி மஹாலய அமாவாசை நாட்களில் புண்ணிய நதி தீரங்களில் அல்லது புண்ணிய தலங்களில் உள்ள திருக்குளங்களில் புனித நீராடி செய்யப்படும் தென்புலத்தார் வழிபாடு பல மடங்கு பலன்களைத் தர வல்லது. இதனை அனுபவ பூர்வமாக  உணரலாம். அவ்வாறு புனித நீராடலுக்கு உகந்த புண்ணியதலம் திருராமேஸ்வரம் (தமிழகத்தின் தென் கோடியில் உள்ள ராமேஸ்வரம் அல்ல இது).

புராண வரலாறு:  ராவண வதம் முடிந்த பிறகு சீதையுடன் அயோத்திக்கு திரும்புங்கால் ஸ்ரீராமபிரான் தனது பரிவாரங்களுடன் கடம்பவனம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் தங்க நேர்ந்தது. மறுநாள் அமாவாசை தினம். நித்திய கர்மானுஷ்டானங்கள் செய்வதற்கு நீர் வேண்டி தனது கோதண்டத்தில் பிர்மா அஸ்திரத்தை பூட்டி பூமியில் பாய்ச்ச ஊற்றுக் கிளம்பி குளமாக நிரம்பியது. யுத்தத்தில் இறந்த வானராதி சேனைகள் முக்தி பெறவும், இறந்த தசரத மகா சக்கரவர்த்திக்கு சாயுஸ்ய பதவி கிடைக்கவும் ஸ்ரீராமபிரானும் மற்றவர்களும் இத்திருக்குளத்தில் நீராடி நீத்தார் கடன்களை முடித்தனர். மேலும் சீதாப் பிராட்டியார், ராமனைப் பிரிந்து அசோக வனத்தில் தனித்திருந்த பாவத்தை போக்க இந்தத் தலத்தில் சிவபூஜை செய்து பார்வதி தேவியுடன் சிவபெருமானின் காட்சி பெற்ற தலம்.

சீதா தேவி சிவபெருமானை பூஜை செய்தபடியால் சீதா ராமேஸ்வரம் என வழங்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் திருநாமேஸ்வரம் எனப் பெயர் பெற்றது. இத்திருத்தலத்தில்  வழிபடுவோர் அனைவருக்கும் பாவ விமோசனம் தர வேண்டும் என்று ஸ்ரீராமபிரான் சிவபெருமானை வேண்டி வரம் பெற்றாராம்.

திருக்குளம்: பிர்மா அஸ்திரத்தில் ஏற்பட்ட குளம் பிர்ம தீர்த்தம் எனவும், கோதண்டத்தினால் ஊற்று உண்டானதால் கோதண்ட தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் தீர்த்தக் குளத்தில் பல தீர்த்தக் கிணறுகளும் உள்ளதாக ஐதீகம். இந்தக் குளத்தை சீரமைக்கும் திருப்பணி துவங்க உள்ளது.

கல்வெட்டுகள்: தமிழகத்தில் தொன்மையும், பெருஞ்சிறப்பும் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருக்கோயில் சோழ பரம்பரையைச் சார்ந்த இராஜ சேகரவர்மனால் கட்டப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழ மன்னர்கள் கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

சிறப்பு அம்சங்கள்: ஐந்து நிலைகளைக் கொண்ட இவ்வாலய ராஜகோபுரமும், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலய ராஜகோபுரமும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. கருவறை ஈஸ்வரன் ஒரே கல்லினால் அமைக்கப்பட்டிருக்கிற சிவலிங்கம் ஆகும். மாசி மாதம் 22 முதல் 27 வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் இக்கோயிலின் ஏழு வாயில் படிகளைத் தாண்டி கருவறையில் உள்ள ஆசாரத்தின் மீது பட்டு எதிரொலித்து சிவலிங்கத்தின் மீது பிரகாசிக்கும். அவ்வமயம் மேற்கே பார்த்த சிவ சந்நிதியில் சூரிய பூஜை அஸ்தமன நேரத்தில் நடைபெறும். இக்காட்சியைப் பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தட்சிணாமூர்த்தி பகவான் அஷ்ட ரிஷிகளுடன் மேதமுகம் உபதேசம் அளிக்கும் அற்புத தரிசனம். விஷ்ணு துர்க்கை, சிவ துர்க்கை ஆகிய இருவருக்குமே சந்நிதிகள் உள்ள அபூர்வ ஆலயம். சுவாமி சந்நிதியின் வலது பக்கம் சீதை சிவபூஜை செய்வது போல் உள்ள சிலையைக் காணலாம்.  அகத்தியரின் திருவுருவச் சிலையை தரிசனம் செய்யலாம்.

தீர்த்தோத்ஸ்வம்: இத்திருத்தலத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி சனிக்கிழமை தை அமாவாசை தீர்த்தோத்ஸவம் நடைபெறுகிறது. அப்போது மங்கள தீர்த்தம் என்று சொல்லப்படும் திருக்குளத்தில் புனித நீராடி, பிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்து, ஸ்ரீ மங்களநாயகி அம்பாள் சமேத ஸ்ரீராமநாத ஸ்வாமியை வழிபடுவோர் ஸ்ரீராமபிரான் பெற்ற வரத்தின் பலனால் பாவ விமோசனம்  பெற்ற பிறவா பயனை அடைவர். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திரு ராமேஸ்வரம்.

மேலும் தகவலுக்கு: 94424 92987.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.