மூவேந்தர்கள் வணங்கிய மூவேந்திர ஈஸ்வரன்!

கொங்கு நாட்டின் பழம் பெரும் சிவாலயமாகவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வணங்கிப் போற்றிய ஆலயமாகவும் திகழ்வது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள நசியனூர் மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோயில்.
மூவேந்தர்கள் வணங்கிய மூவேந்திர ஈஸ்வரன்!
Updated on
1 min read

கொங்கு நாட்டின் பழம் பெரும் சிவாலயமாகவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வணங்கிப் போற்றிய ஆலயமாகவும் திகழ்வது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள நசியனூர் மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோயில்.

பழைய இலக்கியங்களில் சீர் நசையனூர், சேர் நசையனூர், நசைய நகர், வாழ் நசையாபுரி எனப் பலவாறு பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது நசியனூர்.

பழைய இலக்கியங்கள், தனிப்பாடல்கள் என அனைத்திலும் நசையனூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. "நசை' என்பதற்கு விருப்பம் என்பது பொருள். அனைவரும் விரும்புகின்ற ஊர் என்பதால் நசையனூர் என அழைக்கப்பட்டது.

"நசையன்' என்ற தலைவனால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் நசையனூர் என அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். நசையனூர் மருவி இன்று நசியனூர் என வழங்கப்படுகிறது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட நசியனூரில் அமைந்துள்ள ஆலயமே மூவேந்திர ஈஸ்வரன் திருக்கோயில். இத்தலத்து இறைவனை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வணங்கிப் போற்றியதால் இத்திருக்கோயில் மூவேந்திர ஈஸ்வரன் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று இருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு ஆறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இதில் விஜயநகர மன்னன் "விருப்பாட்சராயர் உம்மத் தூர்த்தி தலைவர் வீரநஞ்சராயர்' கல்வெட்டுகள் உள்ளன. இம்மன்னன் காலத்தில் "கண்ணக்குலத்துப் பெற்ற பெருமாள் அழைப்பிச்சான்' என்பவரால் இத்திருக்கோயில் கட்டப்பட்டதென அறிய முடிகிறது.

இத்திருக்கோயில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் காணப்படுகிறது. கருவறையில் மேற்கு முகமாய் சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார் ஈஸ்வரன். இதே போல இறைவியின் சந்நிதியும் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என ஒருங்கே அமைந்துள்ளது. அன்னையின் பெயர் முத்து மரகதவல்லி.

இது தவிர, ஏழு குலப்பிள்ளையார் வரிசையில், ஐந்து குலப் பிள்ளையார் சந்நிதிகள் சுவாமி சந்நிதியின் இடதுபுறம் அமைந்துள்ளன. மற்ற இரண்டில் ஒன்று ஆலயத்தின் வெளிப்புறமும், மற்றொன்று மதுரகாளியம்மன் ஆலயத்திலும் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதியின் வலதுபுறம் தெற்கு நோக்கிய ஆறுமுகங்கள் கொண்ட சண்முகர் சந்நிதி காணப்படுகிறது.

இத்திருக்கோயிலை ஒட்டி தனிக்கோயிலாக கிழக்கு முகமாய் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இதில் ஐந்து தலை நாகம், வீர ஆஞ்சநேயர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன.

நாள் வழிபாட்டிலும், பிரதோஷ வழிபாட்டிலும் மூவேந்திர ஈஸ்வரனை வணங்குவோர்க்கு நவகிரக தோஷம் நீங்குவதுடன் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இப்பழைமை வாய்ந்த ஆலயத்தின் திருப்பணி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதனுடன் சேர்ந்து ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில், மாகாளியம்மன் திருக்கோயில், மதுரகாளியம்மன் திருக்கோயில்களின் குடமுழுக்கு ஜூலை 15ஆம் தேதி நடைபெற்றது.

அமைவிடம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ளது நசியனூர். ஈரோடு - திங்களூர் நெடுஞ்சாலையில் பெருந்துறை - பவானி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com