பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சம்பாதிக்கு அருளிய பெருமான்

அது ராமாயணக் காலம். பர்ணசாலையில் இருந்து ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது எதிர்ப்பட்ட கழுகரசன் ஜடாயு ராவணனை எதிர்த்து வீரப் போர் புரிந்தான்.

News image
Updated On :23 மே 2013, 9:24 am

மயில் வாகனன்

அது ராமாயணக் காலம். பர்ணசாலையில் இருந்து ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது எதிர்ப்பட்ட கழுகரசன் ஜடாயு ராவணனை எதிர்த்து வீரப் போர் புரிந்தான். ஆனால், ராவணனின் வாளுக்குத் தப்ப முடியாமல் இறக்கை அறுபட்டு நிலத்தில் வீழ்ந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான். அந்நேரம் சீதையைத் தேடிக்கொண்டு ராமபிரானும் அங்கே வந்தார். ஜடாயுவின் நிலையை அறிந்து வருத்தம் கொண்டார். அவரிடம் தகவல் கேட்டு, அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை செல்லும் அனுமன் மூலம் இதனைக் கேட்டறிந்தார் ஜடாயுவின் சகோதரன் சம்பாதி. தன் சகோதரனின் ஈமச் சடங்குகளை தன்னால் செய்ய இயலாது போய் விட்டதே என்று வருத்தப்பட்டார். இதனால் தனக்கு எழும் பாவத்தை எப்படிக் கழுவுவது என்று யோசித்தார். அதற்கு விடை கிடைத்தது சம்பாதிக்கு. கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால், சரியான தீர்வு கிடைக்கும் என்றது அசரீரி. அதன்படி சம்பாதி கஜமுக பர்வதத்திலேயே பல காலம் தங்கியிருந்து பூஜை செய்து வந்தார்.

ஒருநாள்.. முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியே சென்றார். அந்நேரம் இந்தப் பகுதியில் வாழ்ந்த சாதுக்களையும் அப்பாவி மக்களையும் முனிவர்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் துன்புறுத்தி வந்ததைக் கண்ணுற்றார் முருகப் பெருமான். முதலில் தாரகாசுரனை வதம் செய்ய எண்ணினார். ஐப்பசி பஞ்சமி திதியில் தாரகாசுரனை வதம் செய்த முருகப் பெருமான், பின்னர் களைப்பு தீர கஜமுக பர்வதத்தில் சற்றே ஓய்வெடுத்தார். அந்நேரம் சம்பாதி முருகப் பெருமானுக்கு அனைத்து வித உபசாரங்களையும் செய்து, அவரை வணங்கினார். பின்னர் சூரபத்மன் இருக்கும் இடத்தையும் முருகப் பெருமானுக்குக் காட்டித் தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த முருகப் பெருமான், சம்பாதியின் சங்கடத்தைத் தீர்த்து, நல் முக்தி நல்கினார். சம்பாதியின் பாவம் கரைந்தது. கழுகு அரசனாகிய சம்பாதி தவக்கோலம் கொண்டு வாழ்ந்த கஜமுக பர்வதம் பின்னர் கழுகு மலை எனப் பெயர் பெற்றது.

சங்கரன்கோவில்- கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்குச் செல்லலாம். சம்பாதிக்குக் காட்சி தந்த முருகப் பெருமான் இங்கே கழுகாசல மூர்த்தியாகக் காட்சி தருகிறார். வள்ளி தெய்வானை சகிதராக, பெருமான் வீற்றிருக்கும் அழகே அழகுதான். கழுகாசல மூர்த்தி மேற்கு நோக்கியும், வள்ளி தெய்வானை இருவரும் தெற்கும் வடக்குமாகப் பார்த்தும் காட்சி தருகிறார்கள். கழுகாசலமூர்த்தியும் ஒரு முகமாய் ஆறு கரம் கொண்டு, இடக் காலை மயிலின் கழுத்திலும் வலக் காலை கீழே தொங்க விட்டும் கரத்தினில் வேலுடன் காட்சி தருகிறார். இங்கே குமரன் மேற்கு நோக்கி ராஜபோகமாக வீற்றிருப்பது சிறப்பு.

இத்தலத்தின் மிகச் சிறந்த அம்சமாகத் திகழ்வது, குடைவரைக் கோயில்தான். மலையைக் குடைந்து, கோயிலையே ஒரு மலைக்குள் அமைத்திருக்கிறார்கள். எனவே, இந்தக் குடைவரைக் கோயிலுக்கு மலையே கோபுரம் போல் திகழ்கிறது. பெருமான் சந்நிதியைச் சுற்றி வலம் வர வேண்டும் என்றால், இந்த மலையையே வலம் வர வேண்டும்.

இந்திரனே மயிலாக: மற்ற முருகன் தலங்களில் அசுரன்தான் மயிலாக மாறி இருப்பான். ஆகவே அத்தலங்களில் எல்லாம் மயிலின் முகம் முருகனுக்கு வலப்புறமாக இருக்கும். ஆனால், கழுகுமலையில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்புறமாக உள்ளது. இந்த அமைப்பினால், சூர சம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்படும்.

குருமங்களத் தலம்: கழுகுமலையில் குருவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தியும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானும் இருப்பது சிறப்பு. இங்கே தட்சிணாமூர்த்தி மிருதங்கம் வாசித்த கோலத்தில் சற்றே சிதைவுற்ற சிலா ரூபத்தில் திகழ்வது அபூர்வமான ஒன்று. இக்காரணத்தால், இந்தத் தலத்தை குரு மங்களத் தலம் என்கிறார்கள்.

இங்கே குறுமுனி அகத்தியர் கழுகாசலமூர்த்தியை தினமும் பூஜிப்பதாக தல புராணம் கூறுகிறது. இங்கு முருகனுக்கு என தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு என தனி பள்ளியறையும் அமைந்துள்ளது.

பிரார்த்தனை: வள்ளி தெய்வானையுடன் ஆறு கரம்கொண்டு திகழும் முருகப் பெருமானை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். சந்தான பாக்கியம் கிட்டும்.

திருவிழா: வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று வசந்தோற்ஸவம் 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டியில் 13 நாளும், தைப்பூசத்தில் 10 நாளும், பங்குனி உத்திரம் 13 நாளும் என திருவிழாக்கள் களை கட்டுகின்றன.

சந்நிதி திறக்கும் நேரம்:காலை 6-11 மாலை 4- 8 வரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.