பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குருதோஷ நிவர்த்தி தலம்

பொதுவாக சிவாலயங்களில் விழாக்காலங்களில் அல்லது விசேஷ தினங்களில் சுவாமி, அம்பாள் உற்ஸவ திருமேனிகள் ரிஷப வாகனத்தில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம்.

News image
Updated On :23 மே 2013, 9:09 am

எஸ். வெட்கட்ராமன்

பொதுவாக சிவாலயங்களில் விழாக்காலங்களில் அல்லது விசேஷ தினங்களில் சுவாமி, அம்பாள் உற்ஸவ திருமேனிகள் ரிஷப வாகனத்தில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிரந்தரமாக ரிஷபாரூடராய் அதுவும் கற் திருமேனியில் காட்சி தரும் ஆச்சரியமான தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருலோக்கி.

குருதோஷ நிவர்த்தி: ஒரு முறை தேவ குருவான பிரகஸ்பதி ஒரு சாபத்தினால் பேசும் திறன் இழந்தார். நிவர்த்தி வேண்டி திருவிடைமருதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வழிபட, இறையருள்படி திருவிடைமருதூருக்கு ஈசான்ய திசையில் அமைந்துள்ள திரைலோக்கி வந்து சுந்தரேஸ்வரரை வேண்டி தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் கீழ் தவம் செய்தார். ஒரு மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் தேவர்களும்,பூத கணங்களும் புடை சூழ ரிஷப வாகனத்தில் சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு காட்சி தர, குரு பகவான் பாப விமோசனம் பெற்றார்.இவ்வாலயத்தில் ரிஷபாரூடருக்கு எதிரில் அஞ்சலி செய்தவாறு இருக்கும் குருவின் சிலையைக் காணலாம்.

ரதி மன்மதனுக்கு தரிசனம்: ஈசுவரனின் நெற்றிக்கண் பார்வையில் சாம்பலான மன்மதன், ரதிதேவியின் வேண்டுதல் பேரில் சுந்தரேஸ்வரர் அருளால் மீண்டும் உயிர்பெற்றெழுந்தான் என்று கூறப்படுகிறது. அந்த கூற்றுக்கு ஏற்ப இவ்வாலயத்தில் ரிஷபாரூடருக்கு எதிர்புறம் ரதியும் மன்மதனும் அணைத்தெழுந்த அற்புதமான தோற்றத்தில் காட்சி தருகின்றனர்.

தேவகுரு பிரகஸ்பதி, ரதி தேவி, பிருகு முனிவர், சுகேது, தருமன், கருவூர்த் தேவர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. சுகேது என்பவர், இங்கே நீங்காத தலைவலி நீங்கப் பெற்றாராம்!

பதிகங்கள்: இத்தலம் தேவார வைப்புத் தலங்களில் ஒன்று. அப்பர் திருத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவூர்த் தேவரின் திருவிசைப்பா பெற்ற தலம். ""கோடைத் திரை லோக்கிய சுந்தரனே! என்று மகுடம் அமைத்து இறைவனைப் பாடுகிறார். திருவிசைப்பா பதிகமும், காசிக் கலம்பக பாடலும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

திரைலோக்கிய மாதேவி என்பவள் தஞ்சை பெரிய கோயில் கட்டிய முதலாம் இராசராசனின் மனைவியருள் ஒருத்தி. இத் தலத்து ஈஸ்வரனின் பெயர் சுந்தரேஸ்வரர். இவையிரண்டும் சேர்ந்து இத் தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் எனப்பட்டதாம்! தற்போது ""திருலோக்கி'' என்று வழங்கப்படுகிறது.

தலத்தின் சிறப்பு: ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் திருவூடல் திருவிழா சிதம்பரத்தில் நடைபெறுவதுபோல இங்கும் நடத்தப்படுகிறது. வரும் மே 28 இரவு 9.10 மணிக்கு, குரு பகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடைபெறுகிறது. இத் தலத்தில் குரு பகவான் பேச்சுத் திறன் பெற்றதால், உரிய காலத்தில் சரியாக பேச்சு வராத குழந்தைகளுக்கு இத் தலத்து இறைவனுக்கு நடைபெறும் பிரதோஷ வைபவத்தில் ரிஷாபாரூடருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேனை அருந்த கொடுத்தால் நிவர்த்தி கிடைக்கும் என்பர். மேலும் ரதி மன்மதனுக்கு அருளிய சுந்தரேஸ்வரரை வணங்கும் தம்பதிகளிடையே ஏற்படும் மனக்கசப்பு, பிரிந்திருப்போர் ஒன்று சேருதல் போன்ற கோரிக்கைகளும் நிறைவேறுவது கண்கூடு.

சுந்தரேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள கைலாசநாதர் ஆலயமும், க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாளும் காண வேண்டிய பிற ஆலயங்கள்.

திருப்பணி: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு 1967ல் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது இந்து சமய அறநிலையத் துறையும், கருவூரார் அறக்கட்டளையும் சேர்ந்து பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக ராஜ கோபுரம் அமைத்தலும், மடப்பள்ளி மற்றும் பிராகார தளங்கள் அமைத்தலும் உள்ளன.

தகவலுக்கு: 94437 14384, 94429 32145.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.