பித்ரு கடனை நிறைவேற்றும் பொருட்டு "கங்காஷ்டகம்' என்ற ஸ்லோகத்தை மனம் உருகிப் பாராயணம் செய்து, சிவனருளால் திருவிசலூரில் தனது வீட்டின் கிணற்றிலேயே கங்கையை வரவழைத்தார் பஜனை சம்பிரதாயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராய்த் திகழ்ந்த ஸ்ரீதரஐயாவாள் என்னும் மகான். இந்த வைபவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அமாவாசை தினத்தில். இப்பொழுதும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த வைபவம் "ஸ்ரீதர ஐயாவாள் கங்காகர்ஷணம்' என்ற பெயரில் திருவிசலூரில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் பெருந்திரளாகக் கூடி அப்புனித நீரில் நீராடுவது வழக்கம்.