லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆண் பிள்ளை வரமளிக்கும் பரமசிவன்

ஆண் குழந்தை பிறக்க வரமளிக்கும் மலைக்கோயில், போடி நாயக்கனூரில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

Updated On :3 அக்டோபர் 2013, 10:57 am

ஆண் குழந்தை பிறக்க வரமளிக்கும் மலைக்கோயில், போடி நாயக்கனூரில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. "தென் திருவண்ணாமலை' என்றும் அழைக்கப்படுகிறது இந்த ஆலயம்.

தேனி மாவட்டம், குச்சனூரில் பிறந்தவர் வாலகுருசாமி. போடி நாயக்கனூரில் திருமணம் செய்து கொண்டு, நகைத் தொழில் செய்து வந்தார். திருமணமாகி நீண்ட நாட்கள் கழித்து, இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வந்த பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. "பால அபிஷேகன்' என்று பெயரிட்டு வளர்த்தனர். ஆனால் அக்குழந்தைக்கு மூன்று வயது ஆன நிலையில், இறந்துவிட்டது. இதனால் மனம் வெறுத்த தம்பதியினர், இதுவரை செய்து வந்த பூஜைப் பொருட்களை எல்லாம் மறுநாள் ஆற்றில் கொண்டுபோய் விட முடிவுசெய்து, மூட்டை கட்டித் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

அன்று இரவு வாலகுருசாமிக்கு ஒரு கனவு தோன்றியது. அதில் ஒரு துறவி மலை மீது நின்றிருக்க, இறந்த அவரது மகன் உயிரோடு துறவியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். அக்குழந்தையை வாலகுருசாமி தூக்க முயச்சித்த போது, அவன் வர மறுத்ததால், உடனே அந்த துறவி, ""இவன் எனக்கு உதவியாக என்னுடனேயே இருப்பான். மனம் வெறுக்காதே. போடி நாயக்கனூர் மலை மீது எனக்கு ஆலயம் எழுப்பி நீ உன் பூசைகளைத் தொடர்ந்து செய்து வா. உனக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் பிறப்பார்கள்'' என்று கூறினார். "ஐயா தாங்கள் யார்?'' எனக் கேட்க, சிவனும் பார்வதியும் காளை வாகனத்தில் காட்சி தந்தனர். கனவு கலைந்தது. திடுக்கிட்டு எழுந்து, அதிகாலையில் போடியில் உள்ள மலை மீது ஏறிப் பார்த்த போது, அங்கே பாதச்சுவடுகளும், ஏராளமான பூக்களும் நிரம்பி இருந்தன. இதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் வால குருசாமி.

உடனே, அப்பகுதியை ஆண்டு வந்த ஜமீனிடம் ஆலயம் கட்டி வழிபடத் தனக்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டார். அதைக்கேட்டு வியப்படைந்த அவர், ""உன்னிடம் கூறியதை இறைவன் என்னிடமும் கூறட்டும், நான் அனுமதி தருகிறேன்'' என்று கூறிவிட்டார். சில நாட்களிலேயே ஜமீனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ஆலயம் எழுப்பி வழிபடுமாறு கூறினார். ஆனந்தமடைந்த ஜமீன், மறுநாள் வால குருசாமியை அழைத்து, மலை மீது ஆலயம் எழுப்பி பரம்பரையாக பூஜை செய்து வர அனுமதி வழங்கினார். அன்று முதல் மலை மீது ஆலயம் எழுப்பி வழிபாடு நடக்கிறது. இறைவன் வரமளித்தபடி, வால குருசாமிக்கு அடுத்தடுத்து ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்தக் கோயிலின் அடிவாரத்தில் கிருஷ்ணானந்த சுவாமிகள் ஜீவசமாதியும், அதனை அடுத்து மலையேறும் பாதையின் தொடக்கத்தில் ஆதிபரமசிவன் சந்நிதியும் அமைந்துள்ளன.

மலையின் நடுவில் உள்ள மண்டபத்தில் ஆண் குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் தொட்டில் உள்ளது. இதனைக் கடந்து மலையேறினால் சித்தர் பீடத்தைக் காணமுடிகிறது. இதையும் கடந்து மேலே ஏறினால், மலைக் கோயிலை அடையலாம்.

மலைக்கோயில் கொடிமரம், பலிபீடத்துடன் காட்சியளிக்கிறது. இடது புறம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சந்நிதியும், வலது புறம் வள்ளி - தெய்வானையுடன் ஆறுமுகப் பெருமான் சந்நிதியும், ஈசானிய மூலையில் நவகிரகங்களும் அமைந்திருக்க, நடுநாயகமாக பரமசிவன் சந்நிதி அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 10 - 12.

விழாக்கள்: சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. தவிர, மகாசிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. சுமார் ஒன்றரை கி.மீ. சுற்றளவுள்ள இம்மலையைச் சுற்றி எண்திசையிலும் அஷ்ட லிங்கங்களை நிறுவி, பெüர்ணமி கிரிவலம் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அமைவிடம்: தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் வட்டத்தில், போடி நாயக்கனூர் நகரின் மேற்கே, போடி-குரங்கனி - போடிமெட்டு செல்லும் சாலையில், மலை மீது ஆலயம் அமைந்துள்ளது.

தல சிறப்பு: ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள், இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டிக் கொண்டால், வரம் கிடைக்கின்றது. கிடைத்ததும், இவ்வாலயம் சென்று அங்குள்ள தொட்டில் மண்டபத்தில், தங்கள் ஆண் குழந்தையைப் போட்டு வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆண் குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.