கழுத்து நோய் தீரும்
பாஹ்லிகம் என்ற தேசத்தை ஆட்சி செய்து வந்தான் சுபகண்டன் என்ற அரசன். அந்தப் பகுதியில் மிகச் சிறந்த மன்னன் எனப் பேர் எடுத்திருந்தான்.


பாஹ்லிகம் என்ற தேசத்தை ஆட்சி செய்து வந்தான் சுபகண்டன் என்ற அரசன். அந்தப் பகுதியில் மிகச் சிறந்த மன்னன் எனப் பேர் எடுத்திருந்தான். நெறி தவறாமல் ஆட்சி செய்ததுடன், தன் நாட்டு மக்களிடம் பிரியமாகவும் பழகி வந்தான். மக்கள் போற்றும் மன்னனாக இருந்தாலும், விதி வசத்தால் அவனுக்கு கழுத்தில் கண்டமாலை நோய் வரத் தொடங்கியது. வைத்தியர்கள் அந்த நோயை குணப்படுத்த எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை. நோய் அவன் உடம்பு முழுவதும் பரவத் தொடங்கியது. வலி தாங்க முடியாமல் தவித்தான் அரசன்.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை ஆயிற்றே...! விஷ்ணு பக்தியில் சிறந்த மன்னன் சுபகண்டன், திருப்பதியில் கோயில் கொண்ட வேங்கடாசலபதிப் பெருமானை வேண்டிக் கொண்டான். திருமலை கோயிலுக்குச் சென்று, அங்கே தங்கி, முழு மனதுடன் பிரார்த்தனை செய்தான். இதனால் பெருமானும் மனம் மகிழ்ந்து அவன் கனவில் தோன்றினார்.
உன் நோய் குணமாக வேண்டுமென்றால் எனக்கு சந்தனக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்து கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும்'' என்றார். மன்னனும் அவ்வாறே செய்தான். எவ்வளவுதான் அளவு எடுத்து அருமையாகச் செய்த போதிலும், இரண்டு தேர்க்கால்கள் மீதமாயின. அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மன்னன், மீண்டும் பெருமாளிடமே பிரார்த்தித்தான். பெருமான் அவன் கனவில் தோன்றி, ""தாமிரபரணி நதிக்கரையில் உள்ள வகுளாத்ரி மலையின் மீது உறங்காப் புளி மரத்தின் அருகே அந்த இரு தேர்க்கால் சந்தனக் கட்டைகளையும் வைத்துவிடு. அவற்றில் நான் என்றும் வாசம் செய்வேன்'' என்று வரமளித்தார். மேலும், ""இவ்வாறு செய்தால் உன் நோய் குணமாகும்'' என்றார் பெருமாள்.
இதனை உணர்ந்த அந்த அரசனும் மிக மகிழ்ந்து, பெருமாள் சொன்னது போலவே சந்தனக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்து, மிஞ்சியதைக் கொண்டு வந்து உறங்காப் புளி மரத்தின் அருகில் வைத்து பெருமாளை வழிபட்டான். சில நாட்களில் அவனைப் பீடித்திருந்த கண்டமாலை நோய் நீங்கியது. தெளிவும் உற்சாகமும் பெற்ற அரசன், அங்கே பெருமானை அனைவரும் வணங்க, சந்நிதி அமைத்தான். வகுளாத்ரி மலையில் பக்தர்கள் செல்ல பாதை அமைத்து, கோயிலையும் குன்றில் கட்டிவைத்தான்.
இந்தத் தலத்துக்கென்று அமைந்த புராணக் கதை இதுதான். எனவே இந்தப் பெருமாளை முழு மனதுடன் வணங்கினால், நோய்கள் தீர்ந்து நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவம். இந்தத் தலத்தில் சிறப்பு அம்சமாக உறங்காப் புளி என்ற புளிய மரம் இருப்பதால், இங்கே புளியோதரை நைவேத்தியம் சுவாமிக்கு செய்வதில்லை என்கிறார்கள்.
மேலும் இன்னொரு கதையும் இந்தத் தலத்துக்கு உண்டு. பாஞ்சாலத்தின் அரசனான சித்ராங்கன் ஒரு முறை வயிற்று வலியால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானான். நாரத முனிவரே அவனின் இந்தக் கஷ்டத்துக்கு பிராயச்சித்தம் செய்ய வழி ஒன்று சொன்னாராம். "வகுளாத்ரி மலையில் உள்ள ஸ்ரீவேங்கடேசப் பெருமானை வணங்கி வழிபட்டால் நோய் தீரும்'' என்றாராம். அதன்படி செய்து, நோய் நீங்கப் பெற்ற சித்ராங்கதன், பின்னர் கோயிலுக்கு தன்னாலான சிறப்புகளைச் செய்தானாம். இன்றும் நாம் இந்தக் கோயிலில் இதே சிறப்புடன் பெருமாளை தரிசிக்கலாம்.
தாமிரபரணிக் கரையில் உள்ளது இந்தக் கோயில். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் சாலையில் பயணிக்கிறோம். ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சாலையில் நெல்லையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் சாலையின் வலப்புறம் சிறு குன்று இருப்பதைக் காண்கிறோம். உச்சியில் ஒரு கோயில். அந்தக் கோயில் இருக்கும் அழகே நம்மை ஈர்த்து அருகே அழைக்கிறது. கருங்குளம் கிராமச் சாலையில் சிறிது தொலைவு பயணித்து, ஊருக்குள் செல்கிறோம். குன்றின் அடியில் இருந்து மேலேற அழகான படிகள் தென்படுகின்றன. நெஞ்செங்கும் பெருமாளின் நினைவு தங்க, "வகுளாசல வாஸôய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே| தாருரூபாய ஸத்யாய நமஸ்தே பரமாத்மனே||'' என பெருமானைத் துதித்தபடி, படிகளில் ஏறுகிறோம். தலத்தின் சிறப்பைக் கேட்டபடியே பெருமானை தரிசிக்கிறோம்.
இரண்டு சந்தனக் கட்டைகளாக உருத் தாங்கி, அலங்கார பூஷிதராக நமக்குக் காட்சியளிக்கிறார் ஸ்ரீவேங்கடாசலபதி.
இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. தாமிரபரணிக் கரையை ஒட்டி அமைந்த நவதிருப்பதி கோயில்களை தரிசனம் செய்ய பக்தர்கள் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் சென்று பின்னர் அங்கிருந்து பயணத்தைத் தொடங்குவர். ஆனால். நவதிருப்பதி கோயில்களை தரிசிப்பதற்கு முன்னால் கருங்குளம் வேங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், நவதிருப்பதி கோயில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பலரும் இங்கே முதலில் வருவதைக் காணமுடிகிறது.
பெருமாளை தரிசித்து வெளிவரும்போது, இந்தத் தலத்தின் சிறப்பு அம்சமாக அனைவரும் கூறும் உறங்காப் புளி மரம், ஊறாக் கிணறு ஆகிவற்றைக் காண்கிறோம். இந்தப் புளிய மரத்தில் புளியம்பூ இருக்குமாம். ஆனால் காய்க்காதாம். மேலும், இந்த மரம் என்றுமே உறங்காமல் இருக்குமாம். இந்தக் கிணற்றிலும் தண்ணீர் வற்றாமலேயே இருக்குமாம். புதிதாக தண்ணீர் என்றுமே ஊற்றெடுக்காதாம்.
சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோயில் என்கிறார்கள். கோயில் அமைந்துள்ள இடம் இயற்கை அழகு நிறைந்து விளங்குகிறது. தூய காற்று நம்மை தழுவிச் செல்கிறது. இங்கே பெருமானுக்கு தினமும் திருமஞ்சனம் என்பது சிறப்பு. விஷ்ணு தாரு ரூபமாகக் காட்சி தரும் தலமாக இது விளங்குகிறது. இங்கே பெருமானை தரிசிப்பது, திருப்பதி திருமலைக்குச் சென்று தரிசிப்பதற்குச் சமம் என்கிறார்கள்.
இதய நோய் பிரச்னை உள்ளவர்கள் இங்கே வேண்டிக் கொண்டு சித்திரான்னமாக தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்றவற்றை சுவாமிக்கு நிவேதனம் செய்கிறார்கள். அவை பிரசாதமாக தரப்படுகின்றது. இங்கே பெருமான் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் என்பதால், இதய நோய் சிகிச்சை நிபுணர்களும்கூட, இங்கே வந்து தாங்கள் செய்யும் மருத்துவம் எல்லோரது நோய்களையும் போக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது.
விழாக்கள்: சித்திரா பெüர்ணமி விழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருட சேவை நடைபெறுகிறது. பவித்ரோத்ஸவம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். மாசி மகமும் சிறப்பு.
அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது. (நெல்லையில் இருந்து 18 கி.மீ. தொலைவு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...