கால்நடைகளின் நோய் தீர்க்கும் பையனூர் எட்டீஸ்வரர்

ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் வம்பு வழக்குகளைத் தீர்த்து அதிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் தெய்வமாகத் திகழ்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் அமைந்துள்ள எட்டீஸ்வரர்.
Updated on
2 min read

ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் வம்பு வழக்குகளைத் தீர்த்து அதிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் தெய்வமாகத் திகழ்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் அமைந்துள்ள எட்டீஸ்வரர். இது மட்டுமன்றி, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் இறைவனாகவும் இவர் விளங்குவது கூடுதல் சிறப்பு. இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட கருங்கல்லால் ஆன கற்றளி ஆலயமாகத் திகழ்கிறது பையனூர் எட்டீஸ்வரர் ஆலயம்.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய திருக்குளத்தின் தென்புறம் சிவாலயமும், வடபுறம் பெருமாள் ஆலயமும் கிழக்கு முகமாய் அமைந்துள்ளன.

சிவாலயத்தின் எதிரே எளிய நந்திமண்டபத்தில் நந்திதேவர் சிவனை நோக்கிய நிலையில் அமர்ந்துள்ளார். தூங்கானை மாட கற்றளியாக எளிய வடிவில் பழைமையான சிவாலயம் அமைந்துள்ளது.

இது தவிர, சூரியன், சந்திரன், விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் ஆறுமுகப் பெருமான், இடைக்காட்டுச் சித்தர், தம்பதி சமேத நவகிரக சந்நிதி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய திருமேனிகள் உள்ளன. இவை அனைத்தும் குடமுழுக்கு விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டவை.

இனி ஆலயத்திற்குள் நுழைவோம் :  ஆலயத்தின் சிற்ப வேலைப்பாடுடைய கதவுகள் நம்மை வரவேற்க, இடதுபுறம் கருங்கல் சுவரில் குடைவரை சிற்பங்களாக மூன்று அடியவர்களின் உருவங்கள் காட்சி தருகின்றன. இவர்கள் மூவருமே உள்ளேயிருக்கும் மூலவரை எந்நேரமும் வழிபடும் கோலத்தில் உள்ளனர். எதிரே நடராஜர் மண்டபம் மற்றும் உற்சவமூர்த்திகள் காட்சியளிக்கின்றனர்.

இதனைக் கடந்து மூலவர் எட்டீஸ்வரர் எழிலான கோலத்தில் கிழக்கு முகமாய்க் காட்சி தருகின்றார். அவரின் உருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அன்னை எழிலார் குழலி: சுவாமி சந்நிதியின் எதிரே இடது புறம் அன்னை எழிலார் குழலி சந்நிதி அமைந்துள்ளது. அன்னை எழிலான கோலத்தில் தெற்கு முகமாய் காட்சி தருகின்றாள். அருகே பெரிய வடிவில் உற்ஸவர் அம்மன் அழகுடன் அருள் புரிகிறாள்.

பரிகாரத் தலம்: வம்பு வழக்குகளைத் தீர்த்து வைத்து, தர்மத்தை நிலைநாட்டும் இறைவனாக எட்டீஸ்வரர் திகழ்வதால், இவர் பெருமையை அறிந்த பக்தர்கள் நாடி வந்து பலன் பெற்றுச் செல்கின்றனர். கை, கால், வலி தீர்க்கும் இறைவனாகவும் இவர் விளங்குகிறார்.

அதேபோல, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை, வேண்டுதல் மூலம் இவர் தீர்ப்பதால், பலன் பெற்றவர்கள் நேரில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். என்றாலும், இவ்வாலயம் இன்னும் குடத்திலிட்ட விளக்காகவே விளங்குகிறது.

எண்ணெய் பரிகாரம்: பழங்காலத்தில் ஊர் மக்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால், உடனே ஊர் மக்கள் ஒன்று கூடி, இத்திருக்கோயிலின் எதிரே ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை நிரப்பி, அதை துணியால் மூடி இத்திருக்கோயிலின் எதிரே உள்ள எண்ணெய்க் கல் அருகே (கி.பி. 1233 கல்வெட்டு) புதைத்து மண் மூடி வைத்துவிடுவது வழக்கமாக இருந்து வந்தது. அதன்பின் தங்கள் ஊரில் உள்ள கால்நடைகள் குணம் பெறும் என்றும் நம்பினார்கள். அதன்படியே அந்தக் கால்நடைகளும் பூரண குணம் பெற்றன. இந்த ஐதீகத்தினால் இந்தக் கல்வெட்டு எண்ணெய்க் கல் என அடையாளம் காட்டப்படுகிறது. இந்த நம்பிக்கை இன்றும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

கருணாகரப் பெருமாள் ஆலயம்: எட்டீஸ்வரர் சிவாலயத்தினை ஒட்டி திருக்குளமும், அதன் மறு கரையில் கருணாகரப் பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளன. இறைவன் பெயர் அருளாளப் பெருமாள் எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கண்ட கோபாலதேவன் எனும் மதுராந்தக பொத்தப்பிச்சோழன், இவ்வூரை பெருமாள் ஆலயத்திற்கு தானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பனையூர் எனும் ராஜகேசரி சதுர்வேதி மங்கலம் எனும் ஊரில், அருளாளப் பெருமாளுக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகின்றது. இந்த வைணவ ஆலயத்தின் இன்றைய பெயர் கருணாகரப் பெருமாள் ஆகும்.

அமைவிடம்: சென்னையை அடுத்து மகாபலிபுரத்திற்கு அருகே பையனூர் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போருர் வட்டத்தில் இவ்வூர் உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூரை அடுத்து அமைந்துள்ளது. சென்னைக்குத் தெற்கே 53 கி.மீ. தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டுக்கு கிழக்கே 23 கி.மீ தொலைவிலும், திருப் போரூருக்குத் தெற்கே 5 கி.மீ, தொலைவிலும் இவ்வூர் உள்ளது.

திருப்பணி: இச்சிறப்புமிகு ஆலயத்திற்கு கருங்கற்களைக் கொண்டு ஏழுநிலை இராஜகோபுரம் எழுப்பத் திருவருள் கூடி, திருப்பணி மெல்ல நடந்து வருகிறது.

தகவலுக்கு: 9941534893, 9524330370

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com