மரண பயம் நீக்கும் மகேஸ்வரன்
சைவ சமயத்தில் "பஞ்சகாக்கள்' என்று சிறப்பித்து அழைக்கப்படும் ஐந்து திருத்தலங்கள் உண்டு.


சைவ சமயத்தில் "பஞ்சகாக்கள்' என்று சிறப்பித்து அழைக்கப்படும் ஐந்து திருத்தலங்கள் உண்டு. திருவானைக்கா, திருநெல்லிக்கா, திருக்கோலக்கா, திருகுறுக்கா, திருக்கோடிக்கா ஆகியவையே அந்தத் தலங்கள். இதில் திருக்கோடிக்கா எனப்படும் திருக்கோடிகாவல், தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 37வது தலம். திருஞானசம்பந்தர், அப்பர் பதிகங்கள் பெற்றது. புராண வரலாற்றுப் பெருமை கொண்டது இவ்வாலயம்.
ஸ்ரீதிருக்கோடீஸ்வரர்: மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம், தாயைக் கொன்றதால் பரசுராமருக்கு ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு ஏற்பட்ட தோஷம், தட்ச யாகத்தில் பலரைக் கொன்றதால் வீரபத்திரருக்கு ஏற்பட்ட சாபம், காளிக்கு ஏற்பட்ட மஹாஹத்ய தோஷம் போன்றவை இத்தலத்து ஈசனை வழிபட்டதால் நீங்கின என்பது வரலாறு.
சிவபக்தரான ஹாதத்திர் என்ற வைணவ சிறுவனுக்கு அருளியவர்; நான்கு வேதங்களும் இத்தலத்து ஈசனை வழிபட்டதால் நான்கு சிவலிங்கமாகக் காட்சியளிப்பவர்; நவகிரக சக்தியை தானே ஏற்றுக்கொண்டு நவகிரகம் கொண்டவர் என்றெல்லாம் கருதப்படுகிறார் திருக்கோடிக்காவில் குடிகொண்டுள்ள ஸ்ரீதிருக்கோடீஸ்வரர். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீதிரிபுரசுந்தரி.
கல்வெட்டு: கல்வெட்டு தகவலின்படி செம்பியன் மாதேவியார், சோழர்கள் மற்றும் நாயக்கர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது இந்த ஆலயம்.
பல்வேறு திருப்பணிகளுக்கு, வழிபாட்டிற்கு, ஆராதனைக்கு என பொன், நிலம், தானம் அளிக்கப்பட்ட செய்திகளை கல்வெட்டுகளில் ஏராளமாய் காணலாம்.
சந்நிதிகள்: இவ்வாலயத்தில் எங்கும் காண முடியாதபடி சனீஸ்வர பகவான் பால சனீஸ்வரராக வீற்றிருக்கிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. எமதர்ம ராஜா, சித்ரகுப்தர் மற்றும் துர்வாச முனிவர் ஆகியோர் தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர். சிவபெருமானின் 64 லீலைகளை பல்லவ கால சிற்பங்களில் இங்கே காணலாம்.
கோபிந்த தீட்சிதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அபயஹஸ்த ஆஞ்சநேயர் சந்நிதியும் இங்கு உள்ளது. இத்திருத்தலத்தில் நந்தியின் கொம்பால் உருவாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் விசேஷமானது.
எமபயம் நீங்கும்: இவ்வாலயத்தில் தேரடி விநாயகர், வித்யா விநாயகர், நர்த்தன விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர் ஆகியோரை வழிபட கல்வி அறிவு பெருகும். அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைக்கும். இங்கே எமதர்ம ராஜனையும், சித்ரகுப்தனையும் ஞாயிறு அன்று வழிபட்டால் எமபயம் நீங்கும். இத்தலத்தில் மயானமே இல்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.
கும்பாபிஷேகம்: இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் பிப்: 16ஆம் தேதி தேரடி விநாயகர், வித்யா விநாயகர், நர்த்தன விநாயகர், ஐஸ்வர்ய விநாயகர், அபயஹஸ்த ஆஞ்சநேயர், பிடாரி அம்மன் திருக்கோயில்களுக்கும், திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும், பிப்: 17ஆம் தேதி ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயிலுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை (நரசிங்கம்பேட்டை வழி) என்ற இடத்திலிருந்தும் இவ்வூருக்கு செல்லலாம்.
தொடர்புக்கு: 98400 53289
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...