சோழர்கள் பராமரித்த ஆலயம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தொழுபேடு ஊருக்கு அருகில் ஒரத்தி என்ற ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அனந்தமங்கலம்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தொழுபேடு ஊருக்கு அருகில் ஒரத்தி என்ற ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அனந்தமங்கலம்.

இங்கே சிறு குன்றின் மீது ஆனந்தவல்லி சமேத அகஸ்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் பெருமுயற்சியால் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயம் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி. 1097ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இங்கே அருளும் இறைவன் ""ஆளுடையார் திருஅகத்தீசுவரம் உடைய நாயனார்'' எனவும் அழைக்கப்படுகிறார். குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் காலத்தில் இக்கோயில் வழிபாட்டிற்காக தானம் அளிக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டு மூலம் அறியலாம். ராஜராஜசோழனாலும் பராமரிக்கப்பட்டது இந்த ஆலயம்.

இனி கோயிலுக்கு சென்று வழிபடுவோம்:

நுழைவாயிலின் மேலே இறைவி, இறைவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் காட்சியும், அகத்திய முனிவரின் வடிவமும் சுதை சிற்பங்களாக அழகுற காட்சியளிக்கின்றன. இங்கே அகத்தியருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

படிகள் ஏறி கோயிலுக்கு செல்லும் முன் இறைவனும் இறைவியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் சுதை சிற்பம் அழகு சேர்க்கிறது.

மேலே சென்றவுடன் முதலில் வழிபடுவது பாறைகளுக்கு இடையே காணப்படும் அழகிய வடிவம். இவர் "பாதாள விநாயகர்' என அழைக்கப்படுகிறார். கோயில் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படும் ஆனந்தவல்லி அம்பாளின் சந்நிதிஉள்ளது.

அங்குசம், பாசம் தாங்கியும், அபய - வரத ஹஸ்தங்களுடன் கருணை பொங்கும் விழிகளுடனும், இதழ்களில் புன்னகையுடனும் அருள்புரியும் அன்னையின் வடிவம் அற்புதமானது. அருகில் லிங்கத் திருமேனி கொண்டவராக இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

நந்தியெம்பெருமான் முன் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். சுவாமி கருவறையின் தேவகோட்டங்களில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, திருமால்,பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரரையும் வழிபடலாம்.

பிரதோஷம், சங்காபிஷேகம் போன்ற வழிபாடுகள் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. பௌர்ணமி நாளில் மலையைச் சுற்றி பக்தர்கள் "கிரிவலம்' வருவது சிறப்பு.

தகவலுக்கு: 98433 58186

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com