/

அன்னையை வரவேற்கும் ஆடிப்பெருக்கு!

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு நம்மைத் தயார் செய்ய உருவாக்கப்பட்டதே பண்டிகைகளும் திருவிழாக்களும்.

News image
Updated On :31 ஜூலை 2014, 12:14 pm

எஸ். வெட்கட்ராமன்

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு நம்மைத் தயார் செய்ய உருவாக்கப்பட்டதே பண்டிகைகளும் திருவிழாக்களும்.

இந்தவகையில் காலத்தின் மாற்றத்தினைக் கொண்டாடப்படும் பண்டிகைகளாக, கதிரவன் தன் பாதையை மாற்றிக்கொண்டு வடதிசையில் செல்லும் "மகரசங்கராந்தி', இளவேனிற்காலம் தொடங்கியதைச் சுட்டிக்காட்டும் "வஸந்த பஞ்சமி' மழைவேண்டி தமிழகத்தில் காவிரியை வரவேற்கும் "ஆடிப்பெருக்கு' போன்ற பண்டிகைகளைக் கூறலாம்.

இப்பண்டிகைகளின் பின்னே பொதிந்துள்ள மிக உன்னதமான கருத்து என்னவென்றால் நாம் இயற்கையுடன் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதேயாகும்.

உணவு உற்பத்தியைப் பெருக்கி நமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் காவிரி அன்னை அருள் ஆதாரத்தையும் வழங்குகிறாள். காவிரிக்கரையில் இரண்டு பக்கங்களிலும் உள்ள கோயில்களே அதற்குச் சாட்சி!

எனவே நமது நன்றிக்கடனை செலுத்தும் விதமாக காவிரி ஆறு ஓடும் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் பதினெட்டாம் தேதியன்று ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்புற நடத்துகின்றோம்.

அன்றைய தினம் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் ஆடிப்பெருக்கு என்று அழைக்கின்றனர். இந்திருநாளன்று உற்றார், உறவினர் புடைசூழ காவிரி அன்னையை தேங்காய் உடைத்து, தாம்பூலம், பழம் வைத்து வரவேற்று, பலவித அன்னங்களை (சித்ரான்னம்) நிவேதனம் செய்து கற்பூரம் காட்டுவார்கள்.

நதியை நங்கையாக பாவித்து காவிரியில் கருகமணி, கருவளையம்கூட போடுவது வழக்கம். புதுமணத் தம்பதிகள் புத்தாடைகள் தரித்துக் கொண்டு நல்வாழ்க்கை அமைந்திட வேண்டுவர்.

கன்னிப் பெண்கள் திருமணம் நடைபெற வேண்டி காவிரி அன்னையை வழிபடுவது மரபு. வற்றாத நதியாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியூட்டும் இவ்விழாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகக் கொண்டாடுவார்கள். காவிரி ஆறு பாயாத நீர்நிலைகளில் வசிப்பவர்களும் இந்தப் பண்டிகையை கொண்டாடுவர். இத்திருநாளை பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைப்பதுண்டு.

தமிழகத்தில் காவிரிபாயும் அழகை வர்ணிக்கும் விதமாக அமைந்தது போல திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை குடவரைக் கோயிலில் உள்ள ஒரு பல்லவக் கிரந்தக் கல்வெட்டு கீழ்வரும் செய்தியினை தெரிவிக்கின்றது.

""நதிகளிடம் மிகுந்த ஆவல் கொண்ட சிவபெருமான் (நதிப்பிரியன்) கண்களுக்கு இனிய தெளிந்த நீரையும், வரிசையாக உள்ள கோயில்களான ஆபரணங்களையும், விரும்பத்தக்க பல நற்பண்புகளையும் உடையவளாகிய காவிரியைப் பார்த்துவிட்டு அவள் எழிலில் மயங்கி காதல் கொண்டு விடுவானோ என்ற ஐயம் கொண்ட மலையரசனின் மகளாகிய பார்வதி தேவி, தன் தந்தையின் உறைவிடமான இமயத்தை விட்டுவிட்டு இங்கு வந்து சிவனருகில் நீங்காமல் அமர்ந்து கொண்டு "இந்தக் காவிரியானவள் பல்லவனுக்குரியவள் என்று சொல்லிய வண்ணமே இருக்கிறாள்'' என்ற செய்தி ரசிக்கும்படியாக இருக்கின்றது.

காவிரி அன்னை தமிழகத்தை வளப்படுத்த பொங்கிப் பெருகி ஜலப்பிரவாகமாய் பெருக்கெடுத்து வருவாள் என்று நாமும் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி (ஆடி:18) ஆடிப்பெருக்கு விழா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.