செல்வமெல்லாம் தரும் செங்குறிச்சி லட்சுமி நாராயணன்!

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த நான்முகன் திருவந்தாதிப் பாடலொன்று மகாலட்சுமியோடு கூடிய நாரணனின் தனிப்பெரும் சிறப்பைச் சொல்கிறது.
செல்வமெல்லாம் தரும் செங்குறிச்சி லட்சுமி நாராயணன்!

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த நான்முகன் திருவந்தாதிப் பாடலொன்று மகாலட்சுமியோடு கூடிய நாரணனின் தனிப்பெரும் சிறப்பைச் சொல்கிறது.

"திருநின்றபக்கம் திறவிதென் றோரார்

கரு நின்ற கல்லார்க் குரைப்பர் - திரு இருந்த

மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்துழாய்த்

தார் தன்னைச் சூடித் தரித்து'

மகாலட்சுமியை அணைந்து நிற்கும் நாரணனை ஸ்ரீதரன் என்போம். இவனது வலது மார்பை அணைந்தவளாய் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இப்படி லட்சுமி நாராயணனாய் ஸ்ரீதரனாய் உள்ள பெருமானே முக்திக்கு வழிகாட்டி! இவனை வணங்குபவர் இம்மை மறுமை இரண்டிலும் நலம் பெறுவர் என்பது இப்பாடலின் உட்பொருள். இந்த உண்மையை உணராதவர்களே கருப்பை வழி பிறக்கின்றவர்களை எல்லாம் வணங்கும்படி சொல்வார்கள் என்கிறார் திருமழிசையார்.

பன்னிரு ஆழ்வார் பெருமக்களில் திருமழிசையார் சித்தர்கள் வரிசையிலும் வைத்து சிந்தித்துப் பார்க்கப்படுபவர். சித்தர் பெருமக்களுக்கு சித்து விளையாட்டுக்கள் மிக அற்புதமானவை. திருமழிசையாரும் அனேக சித்துக்கள் புரிந்தவரே... குறிப்பாக முதுமையை விரட்டும் யவ்வனத்தை ஒரு பெருமாட்டிக்கு அளித்தவர். அதனால் அரசன் ஒருவனின் முதுமையை விரட்டும் ஒரு நிர்பந்தம் ஏற்படவும் சித்துக்களை அதிகார மமதைக்கு ஆட்படுத்த முடியாது என்று மறுத்தவர். இதனால் அரசனின் கோபத்துக்கு ஆளானபோது அந்த திருமால் இவர் பக்கம் நின்று இவர் பெருமையை உலகறிய செய்ததை காஞ்சி உலகளந்த பெருமாள் கொண்டு நாமறியலாம். இப்படிச் சிறப்பினைப் பெற்ற திருமழிசையார் அதன்பின் திருமால் சந்நிதிகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சென்று வணங்குவதை ஒரு நித்ய கடமையாகக் கொண்டிருந்தார்.

இவர் காலத்திற்கு முன்பிருந்தே தென்னார்க்காட்டில் ஒரு நவதிருப்பதி இருந்து வந்ததை எவரும் உணர்ந்திருக்கவில்லை. நவதிருப்பதி என்ற உடன் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெறப்பட்ட திருநெல்வேலிப் பக்கமாய் உள்ள எம் பெருமானின் திவ்ய ஷேத்ரங்களே இன்று நினைவுக்கு வருகின்றன.

தென்னார்க்காடு மாவட்டத்திலும் ஒரு நவத்திருப்பதி இருந்து எவரும் அறியாவண்ணம் சேவை சாதித்து வருகிறது. அவை மங்களாசாசனச் சந்நிதிகள் என்றால் இவை மங்களா ஆசனச் சந்நிதிகளாகும்!

உளுந்தூர்பேட்டைக்கும் விழுப்புரத்துக்கும் இடைப்பட்டுள்ள இந்த நவத்திருப்பதி எவை என்று முதலில் பார்ப்போம். பரிக்கல், பேரங்கியூர், திருவெண்ணெய் நல்லூர், பாதூர், செங்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஆதனூர், காட்டுப்பரூர், முகசாபரூர் - எனும் ஒன்பது தலங்களே அவை!

தவறாமல் ஏகாதசி விரதம் இருந்துவரும் ஓர் அன்பரின் கனவில் இந்தத் தலங்களுக்குச் சென்று வந்தால் ஒட்டுமொத்த கிரக தோஷங்கள் நீங்குவதோடு அவர்களுக்கு மாலின் திருவடி சம்பந்தமும் வேகமாய் கிட்டும் என்று எம்பெருமானே குறிப்பால் உணர்த்த அவரும் அவ்வாறேசெய்து நலம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பலரும் என்று இப்போது இத்திருப்பதிகளை நாடிவரத் தொடங்கியுள்ளனர்.

இத்திருப்பதிகளில் ஒன்றான செங்குறிச்சித் தலத்தில் எம்பெருமாட்டியின் திருநாமம் கனகவல்லி என்பதாகும். கனகவல்லி என்றால் ஸ்வர்ணமாகிய தங்கத்தோடு இருப்பவர் என்று பொருள். இந்த கனகவல்லி ஹஸ்த அஞ்சலி கோலத்தில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பானது. இதன் பொருள் என்னவென்றால் இச் சந்நிதிக்கு வரும் பக்தர்களின் குறைகளை இவள் பெருமாளின் காதில் எடுத்துச் சொல்பவளாக இருக்கிறாளாம். இதுபோக தனியேயும் சந்நிதி கொண்டிருக்கிறாள்.

ஆக, இங்கே எம்பெருமான் பெருமாட்டியை முன்நிறுத்தி தன்னை பின்நிறுத்திக் கொண்டு அருளுகிறான். பெருமாட்டியும் வாழும் நாளில் செல்வங்கள் கிடைக்கவும் பின் பரகதிக்கு உத்தரவாதமும் தருபவளாக இருக்கிறாளாம்.

மிக சூட்சுமமான இப்பேருண்மை இதுநாள்வரை ஒளிந்திருந்தது. இன்று இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்தும் ஒரு தகவல் உண்டு.

யோகி வேமண்ணா என்றொரு துறவி இக்கோயிலுக்கு வந்து இங்கே பெருமானுக்கு அர்ச்சனை செய்ய மலர்கள் தேவைப்படுவதை உத்தேசித்து நந்தவனம் அமைத்து தந்தவராவார். இதுகுறித்து கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவரால் அன்றே காலத்தால் ஊரின் வழித்தடங்கள் விரிவாகும் நாளில் இத்தலமும் இது சார்ந்த மற்ற எட்டு தலங்களும் பக்தர்களால் பெரிதும் பற்றிக் கொள்ளப்படும் எனப்பட்டதாம்.

அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட செங்குறிச்சி திருச்சந்நிதி ராஜகோபுரம் கண்டு நிமிர்ந்தெழ உள்ளது. அதுபோக உள்ளேயுள்ள பழுதுகள் நீக்கப்பட்டு மகாமண்டபம் அமைப்பது, மதில்சுவர் கட்டுமானம் என்று திருப்பணிகள் தொடங்கியுள்ளன. விதைத்தாலே அறுவடை புரியமுடியும். அதுபோக கொடுப்பவருக்கே பெரும் உரிமையும் ஏற்படுகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் மகாசம்ப்ரோஷணம் நிகழ்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத்திருக்கோயிலின் புறத்தேவைக்கு நாம் உதவினால் நம் அகத்தேவைக்கு இக்கோயில் நாயகியான கனகவல்லி தேடி வந்து அருளுவாள்.

நீர் வேண்டுமென்றால் குளம் வெட்டவேண்டும்; பயிர் வேண்டுமென்றால் மண்ணை உழவேண்டும்; அருள் வேண்டுமென்றால் அருளகங்களுக்கு பொருள்தந்து உதவ வேண்டும்; இது ஓர் அரியவாய்ப்பு "எவரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றனரோ?!'

இத்திருக்கோயில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் இருந்து கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளது. செங்குறிச்சி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் என்றால் அத்தனை பிரசித்தம்.

தொடர்புக்கு: துரைசாமி - 99620 51870.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com