உறவுகள் மலர...
உறவுகள் எப்படி அமையவேண்டும் என்று கற்றுக்கொள்ள நாம் எந்தக் கருத்தரங்கிற்கோ, பாசறைகளுக்கோ செல்ல வேண்டியதில்லை.


உறவுகள் எப்படி அமையவேண்டும் என்று கற்றுக்கொள்ள நாம் எந்தக் கருத்தரங்கிற்கோ, பாசறைகளுக்கோ செல்ல வேண்டியதில்லை. இறைமொழியாம் திருவிவிலியத்தை வாசித்தாலே போதும். உறவை வளர்க்கும் உத்திகள் ஏராளமானவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.
உறவின் பாடத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக லூக்கா நற்செய்தியில் வரும் எலிசபெத்தை அன்னை மரியா சந்தித்த நிகழ்ச்சியை (லூக் 1:39-45) எடுத்துக்கொள்ளலாம். இந்த சந்திப்பு மிக உணர்வுபூர்வமானதாக, உறவின் வளமைக்கு ஓர் சான்றாக அமைந்துள்ளது என்பதை இப்பகுதியின் ஒவ்வொரு சொல்லும் சொல்லாமல் சொல்கின்றது. இந்தச் சந்திப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உறவின் கூறுகளைப் பார்ப்போம்:
முன் வருதல்: தன் உறவினரான எலிசபெத்து கருத்தரித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் எந்தவிதத் தயக்கமுமின்றி, அன்னை மரியா தாமாகவே முன்வந்து எலிசபெத்தைச் சந்திக்கவும், அவருடன் தங்கி உதவி செய்யவும் முன் வருகிறார். நல்ல உறவுகளில் இத்தகைய முன் முனைப்புகள் தேவை.
விரைவு: மரியா புறப்பட்டு, விரைந்து சென்றார் என்று நற்செய்தியாளர் குறிப்பிடுவதை வாசிக்கும்போதே நமக்கு நிறைவாக இருக்கிறது. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்னும் குறள் கூறுவதுபோல, விரைந்து செயல்படுவதுதான் நல்ல நட்புக்கு, உறவுக்கு அடையாளம்.
வாழ்த்து: மரியா எலிசபெத்தைச் சந்தித்ததும் அவரை வாழ்த்தினார் என்று நற்செய்தி கூறுகிறது. கருவுற்றிருக்கிறார் என்று அறிந்ததும், அந்த நல்ல செய்தியில் தான் மகிழ்வதோடு, நல்ல செய்தியைப் பெற்றிருக்கும் நபருக்கு உளமார்ந்த வாழ்த்தைத் தெரிவிப்பது உறவின் ஒரு கூறு.
மகிழ்ச்சி: நல்ல நண்பர்கள், உறவுகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதே, அங்கே மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் ஒன்றுகூடும்போது, மகிழ்ச்சி நிலவாமல், கணக்கு பார்ப்பதும், ஒப்பிட்டுப் பொறாமைப்படுவதும் இழிவான செயல்கள்.
உடன் உறைவோரின் மகிழ்ச்சி: மரியாவின் வருகையாலும் வாழ்த்தாலும் மகிழ்ச்சி அடைந்தது எலிசபெத்து மட்டுமல்ல, அவரது வயிற்றிலிருந்த குழந்தையும்கூட என்பதை நற்செய்தியாளர் நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். நல்ல உறவுகளில் நமது வருகையும், இருத்தலும் நமது நண்பர்களுக்கு மட்டுமல்ல, அவரது உடன் உறைவோருக்கும் மகிழ்ச்சியைத் தரவேண்டும்.
தூய ஆவியின் ஆட்கொள்ளல்: மரியாவின் வருகை எலிசபெத்துக்குத் தூய ஆவி என்னும் கொடையைக் கொண்டுவந்தது. பொதுவாக, உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும்போது பரிசுப்பொருள்கள், உணவுப் பொருள்களை எடுத்துச் செல்கிறோம். அது நல்லதே. ஆனால், அதைவிடச் சிறந்தது நம்மோடு இறைப் பிரசன்னத்தை, இறையாசியை எடுத்துச் செல்வது. யாரைச் சந்திக்கச் செல்கிறோமோ, அவர்களுக்காக இறையாசி வேண்டி செபித்துவிட்டுச் செல்கிற பழக்கத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி: மரியாவின் வருகைக்காகவும், தன்னோடு தங்கியிருந்து செய்யவிருக்கிற உதவிக்காகவும் எலிசபெத்து நன்றியுணர்வால் நிறைகிறார். "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்' என்று கேட்டு, தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். பிறர் செய்கின்ற உதவிக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். அந்த நன்றியை வெளிப்படுத்தவும் வேண்டும்.
அன்னை மரியாவிடமிருந்தும் எலிசபெத்திடமிருந்தும் இந்த உறவின் பண்புகளைக் கற்றுக்கொண்டு, நாமும் நல்லுறவில் வளர்வோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...