உத்தமபாளையத்தில் தென்காளஹஸ்தி!
நயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் புகழ் பெற்ற ராணிமங்கம்மாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர்.


நயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் புகழ் பெற்ற ராணிமங்கம்மாளின் படைப் பொறுப்பை ஏற்று வந்தவர் கொண்டம நாயக்கர். இவர் காளகஸ்தியில் அருளும் காளாத்தீஸ்வரர் மீது மிகுத்த பக்தி கொண்டவர். வயதான காலத்தில் காளகஸ்தி செல்ல முடியாமல் வருத்தமுற்றார். அவரது நிலையை அறிந்த காளாத்தீஸ்வரர், அவர் இருக்குமிடத்திலேயே கோயில் அமைத்து வழிபட்டால், காளகஸ்திக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறி அருளினார் என்பது செவிவழித் தகவல்! உடனே கொண்டம நாயக்கர், அந்தப்பகுதியை ஆட்சி செய்துவந்த பாளையக்காரர் பூஜையா நாயக்கரிடம் தெரிவித்தார். பாளையக்காரரும் அங்கே ஒரு கோயில் அமைத்துக் கொடுத்தார். இதன்காரணமாகவே இக்கோயில் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
தென் காளகஸ்தி என்று போற்றப்படும் இந்தக் காளாத்தீஸ்வரர் ஆலயம், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனை வழிபட்டால், காசி சிவ பெருமானை வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்!
அருள்மிகு ஞானாம்பாள் சமேத அருள்மிகு காளாத்தீஸ்வரர் ஆலய முகப்பு மண்டபத்தினுள் நுழைகிறோம். முதலில், வானுயரம் வளர்ந்து நிற்கும் ராஜகோபுரத்தை காண்கிறோம். ஜந்து அடுக்குகளுடன் ஜந்து கலசங்களுடன் பெருமிதமாக தோற்றம் அளிக்கிறது. இக்கோபுரத்தின் முன்புறம் நந்தி மண்டபம். அடுத்து கோபுரத்தின் தென்பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடபுறத்தில் சுப்ரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளது. இது வடக்கே அமைந்துள்ள காளகஸ்தி கோயிலின் அமைப்பை நினைவுபடுத்துகிறது. அடுத்ததாக, மகாமண்டபம்! அதன் முன் கொடிக்கம்பமும், அதிகார நந்தியும் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் தென்புறத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்.
மூலவர் திருக்காளாத்தீஸ்வரர், ஐந்து தலை நாகம் குடைபிடிக்க லிங்கத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார். கருவறையின் வடகிழக்கில் தென்திசை நோக்கி அருள் பாலிக்கிறார் நடராஜப் பெருமான். அருகில் சிவகாமி அம்மையும் மாணிக்கவாசகரும் காட்சி தருகிறார்கள். கருவறையின் தென் திசையில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் கண்ணப்ப நாயனார்! அவருக்கு அருகிலேயே அறுபத்தி மூன்று நாயன்மார்களும் தரிசனம் அளிக்கின்றனர். தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்க, அவருக்கு எதிர்புறத்தில் சப்த கன்னியர்கள் புன்முறுவலுடன் அணிவகுக்கிறார்கள். கன்னிமூலையில் கணபதி வீற்றிருக்கிறார். மூலவருக்கு இடப்புறத்தில் ஆறுமுகநாதர் சந்நிதியும் அடுத்து அன்னை ஞானாம்பிகை சந்நிதியும் அமைந்துள்ளன. ஈசுவரருக்கும் அம்பிகைக்கும் இடையில் முருகன் அமைந்திருப்பதால், முருகன் இங்கு சோமாஸ்கந்தவடிவம் ஆகிறார்.
சிவனுக்குச் சிலை செய்த மன்னன் அம்மனுக்குச் சிலை அமைக்கப் பல முறை முயன்று தோல்வியுற்றார். இதனால் அம்பிகை இல்லாத கோயிலாகச் சில காலம் இருந்தது. பிறகு கொண்டம நாயக்கரின் கனவில் தோன்றிய சிவன், "முல்லை ஆற்றில் அம்பிகை வருவாள்' என்றாராம். அதன்படி, ஆற்றில் ஒரு கூடை மிதந்து வந்தது. அதனுள் அம்மனின் சிலையைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து அம்மனுக்கு "ஞானாம்பிகை' என்று பெயர் சூட்டினர். பலருக்கு ஞானாம்பிகை கோயில் என்றால் தான் தெரியும் என்ற அளவுக்கு புகழ் பெற்றவர் இந்த அம்மன். அம்மனுக்குப் பக்கத்தில் முருகன் காட்சி அளிப்பது இங்கு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இங்கு வந்து வழிபட்டால் தாய் - சேய் உறவுப்பாலம் நன்கு அமையும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அடுத்தபடியாக,மேற்கில் 1008 சிறிய லிங்கங்களுடன் கூடிய பெரிய வடிவிலான சகஸ்ரலிங்கத்தைக் காண்பது சிறப்பான அம்சமாகும். இதனைத் தரிசித்தால் 1008 முறை இறைவனை வணங்கிய பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.
இத்தலத்தில் காசி விசுவநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி அருள்கின்றனர். லிங்ககோத்பவர் மண்டபம், சுரதேவர் மண்டபம், சரபேசர் மண்டபம் மற்றும் குபேரன்-குபேரலட்சுமி மண்டங்களும் அமைந்துள்ளன. ஆலயத்தின் வடகிழக்கில், இராகு - கேது தம் தேவியரோடு காட்சி நல்குகின்றனர். கிழக்கில் மேற்கு நோக்கிய பைரவர், சூரியனார், சந்திரனாரும் அமைந்துள்ளதைக் காணலாம்.
திருக்கோயிலின் வாயிலின் மேல் புறத்தில் தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகியோரின் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மகாமண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரெண்டு இராசிகளைக் கொண்ட பூமிச் சக்கரம் வரையப்பட்டுள்ளதைக் காணலாம்.
இராசி நட்சத்திர மண்டல வாஸ்து சக்கரம், திருமணத்திற்காக மணமக்களுக்கு பொருத்தம் பார்க்கும்போது பயன்படுத்தப்படுகிறது. அர்த்த மண்டபத்தில் பிரதான முன் மண்டபத்தின் மேற்கூரையில் ஆகாயச் சக்கரம் வரையப்பெற்றுள்ளது. இதனை வானியல் அறிந்தவர்கள் சூரிய மண்டல ஆகாய இராசிச் சக்கரம் என்கின்றனர். மகாமண்டபத்தின் வடகிழக்கில் நவகிரக அமைப்பில், சண்டிகேசுவரர், சண்டிகேசுவரி, துர்க்கை, அனுமன், சூரியன், சந்திரன் மற்றும் காளியம்மன் போன்ற சிற்பங்கள் மண்டபத் தூண்களில் வனப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். மேலும், மண்டபத் தூண்களின் கீழ்ப்புறம் நாயக்கர் மன்னர்களின் திருவுருவச் சிலைகள் அமையப்பெற்றுள்ளது.
இக்கோயிலின் நுழைவாயிலுக்கு முன் விஷராசா என்னும் கருடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு நஞ்சு நீங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் பாம்புக் கடிக்கு நவீன மருத்துவ சிகிச்சைப் பெற்ற பின்பும், இவ்விடத்தில் வந்து வழிபடுகின்றனர்.
ஆலயத்தின் தெப்பக்குளம், ஈசானிய மூலையில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய நடு மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருக்கல்யாண உற்சவம்,மாசித்தேரோட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, திருகார்த்திகை தீப விழா போன்றவை இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...