/

கார்த்திகையில் கங்காஸ்நானம்

பஜனை சம்பிரதாயத்தில் மும்மூர்த்திகளாய்த் திகழ்ந்த மகா புருஷர்கள் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள்

News image
Updated On :21 நவம்பர் 2014, 9:41 am

எஸ். வெட்கட்ராமன்

பஜனை சம்பிரதாயத்தில் மும்மூர்த்திகளாய்த் திகழ்ந்த மகா புருஷர்கள் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதரஐயாவாள், ஸ்ரீ வேங்கடராம சத்குரு சுவாமிகள். இதில் ஐயாவாள் என்று போற்றப்படும் ஸ்ரீதரஐயாவாள் காவிரிக்கரையில் உள்ள திருவிசலூர் கிராமத்தில் (கும்பகோணம் அருகில்) வாழ்ந்தவர். திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியின் தீவிர பக்தராய் திகழ்ந்து பல அதிசயங்களையும்

அற்புதங்களையும் நிகழ்த்திய இவர், தம் வாழ்க்கையில் கங்கையை வரவழைத்தது சிகரமாய் கருதப்படுகிறது. எந்தவிதமான பகீரதப் பிரயத்தினமும் செய்யாமல் தன் பக்தியினால் மட்டுமே கங்கையை தன் இல்லத்தில் உள்ள கூபத்திலேயே (கிணற்றினிலே) ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தன்று வரவழைத்திருக்கிறார் இந்த மகான்.

இந்நிகழ்வு இன்றளவும் ஸ்ரீதரய்யாவாள் கங்காவதரண மகோத்சவம் என்ற பெயரில் திருவிசலூரில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு உத்சவம் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டு, நாமசங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரி, உபன்யாசங்கள் போன்ற நிகழ்ச்சிகளுடன் தற்போது நடந்து வருகிறது. நவம்பர் 22 ஆம் தேதி மகானுடைய ஆராதனை நாளாகும். அன்று அவரது இல்லத்தில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்.

அன்று காலை 5.30 மணிக்கு கங்கை பூஜை, ஐயாவாள் இயற்றிய கங்காஷ்டக பாராயணம் முடிந்தவுடன் பக்தர்கள் கங்கா ஸ்நானம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

முன்னதாக பக்தர்கள் அருகில் உள்ள காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராடிவிட்டு பிறகு கங்காஸ்நானத்திற்கு வருவது வழக்கம். அன்று நாள் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். கிணற்றில் நீர் வற்றவே வற்றாது. இந்த அதிசயம் இன்றளவும் நடைபெறுகிறது.

காசியில் கங்கையில் நீராடும் பலனை, இந்த கார்த்திகை அமாவாசையில் திருவிசலூரில் கங்காஸ்நானம் செய்து பெறலாம். (திருவிசலூர் செல்ல கும்பகோணத்திலிருந்து நகர பேருந்துகள் செல்கின்றன)

தொடர்புக்கு: 94440 56727/ 0435- 2460222.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.