உள்ளம் மகிழ்விக்கும் உத்தமர்சீலி!

திருச்சி  நகரிலிருந்து காவிரி ஆற்றின் வடகரை வழியே கல்லணை செல்லும் சாலையில் சுமார் 12. கி.மீ. தொலைவில் உள்ளது
உள்ளம் மகிழ்விக்கும் உத்தமர்சீலி!
Published on
Updated on
1 min read

திருச்சி  நகரிலிருந்து காவிரி ஆற்றின் வடகரை வழியே கல்லணை செல்லும் சாலையில் சுமார் 12. கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர் சீலி என்ற அழகிய ஊர்.  இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் வழிபாடு சிறப்புமிக்க ஒன்றாகும்.  இங்கு ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயில், காவல் தெய்வங்களான செல்லாயி அம்மன், அய்யனார் கோயில்கள் இவ்வூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.  

வரலாற்றுச்சிறப்பு: சோழமன்னர்களில் முதலாம் பராந்தக சோழன் (907- 953) சிறப்பு மிக்கவனாகக் கருதப்படுகிறார். இவருக்கு வீர சோழன், வீர நாராயணன், குஞ்சரமல்லன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. இவருடைய நான்கு புதல்வர்களில் ஒருவர் உத்தமசீலி என்ற பெயர் கொண்டு விளங்கினார். இவ்வூர் உத்தமர்சீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதிமங்கலம் என்றும் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவேணுகோபால சுவாமி:    கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் நுழைவு வாயிலில் இடப்புறம் காவல் தெய்வமான ராஜகருப்புசாமி எழுந்தருளி அனைவரையும் காத்து வருகிறார். நுழைவு வாயிலின் மேலே வேணுகோபாலன் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் பசுக்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் சுதைவடிவம் கருத்தை கவர்கிறது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்புடன் பெருமாள் சந்நிதி விளங்குகிறது. கருவறையில் கண்ணன் வேணுகோபாலனாக புல்லாங்குழலை ஏந்தி புன்முறுவலுடன் வாசிக்கும் நிலையில் பாமா- ருக்மணியுடன் எழுந்தருளி அருள்புரியும் அழகே, அழகு!  நம் கவலைகளைப் போக்கி, உள்ளம் மகிழ்விக்கும் புன்முறுவலுடன் காட்சி தரும் கண்ணனை  " செங்கணிவாய்ப் பெருமாள்' என்றே அழைத்துப் போற்றுகின்றனர்.

கரிகாலன் -கல்லணை:   கல்லணைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வடக்குப் பக்கத்தில் விநாயகப் பெருமானும் சிறிய திருவடியான அநுமனும் ஒரே இடத்தில் எழுந்தருளி அருள்புரிகின்றனர். முன் மண்பத்தில் பெரிய திருவடியான கருடாழ்வார் எழுந்தருளி அருள்புரிகிறார். 

திருச்சுற்று:   கிழக்கு திருச்சுற்றில் நம்மாழ்வார்,  உடையவர் சந்நிதிகளில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.  தென் மேற்கு மூலையில் ஸ்ரீ அரவிந்த நாயகி தாயார் சந்நிதி. வடக்குத் திருச்சுற்றில் சேனை முதல்வர் (விஷ்வக்சேனர்) சந்நிதி அமைந்துள்ளது. 

வழிபாடு:   சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இக்கோயில் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  
தொடர்புக்கு: 97502 52299/ 97860 34208.
- கி. ஸ்ரீதரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com