பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மகவு மழலையில் மயங்கிய மகேசன்!

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்மழலைச் சொல் கேளாதவர்'.

News image
Updated On :23 பிப்ரவரி 2018, 10:10 am

எஸ். வெட்கட்ராமன்

"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்'.

மேற்சொல்லப்பட்ட குறளின் விளக்கம்: தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே'குழலிசை இனியது', யாழிசை இனியது' என்று புகழ்ந்து கூறுவார்கள் என்பதே. இது, நமக்காக சொல்லப்பட்ட குறளாகும். ஆனால் தெய்வங்களுக்கும் இது பொருந்தும் போலும். சர்வேஸ்வரனான அந்த இறைவனும் தன் சேயின் (முருகனின்) மழலைச் சொல் கேட்டு இன்புற விரும்பினார் } அதற்காக ஒரு திருவிளையாடலும் நிகழ்ந்தது.
ஒரு சமயம், முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளை அறியாது திகைத்த பிரம்ம தேவனைச் சிறையிலிட்டுத் தாமே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பின் தந்தையின் வாக்கிற்குச் செவிமடுத்து அவரை சிறையிலிருந்து விடுவித்தார். 
மகிழ்ந்த சிவபெருமான் அக்குழந்தைச் சாமியை தமது திருத்தொடையின் மீது அமரச்செய்து "குழந்தாய்! நான்முகனும் அறியாத அப்பிரணவத்தின் பொருளை நீ அறிவாயோ? அறிந்தால் அப்பொருளை எனக்கு உரைத்திடுக" எனக் கூறினார். எந்த ஓர் உபதேசமும் குருவின் மூலமாகத்தான் பெறவேண்டும் என முருகன் பதிலளிக்க, பரமேஸ்வரனும் புன்முறுவலுடன் தமது திருச்செவியைச் சாய்த்ததும் அப்பேரழகுமிக்க தமிழ்க்கடவுள் அவரது திருச்செவியில் பிரணவத்தின் பொருளை தனது மழலைச் சொற்களினால் கூறி அருளியது. 
இந்நிகழ்வை அருணகிரிநாதர் "சிவனார், மனங்குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா' என்று தனது திருப்புகழிலில் குறிப்பிட்டுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியார் என்ற அருளாளரும் இந்நிகழ்வை அனுபவித்து பாடியுள்ளார். சிவபெருமானுக்குச் செய்யப்பட்ட இந்த பிரணவ உபதேசம் பிறகு முருகப்பெருமானால் தேவர்களுக்கும், அகத்தியருக்கும் (ரிஷி), அருணகிரிநாதருக்கும் (நரர்) அருளப்பட்டதாகக் கூறப்படுவது உண்டு. 
ஆறு முருகப்பெருமானுக்குகந்த அறுபடை வீடுகளில் ஒன்றான திருவேரகம் என்னும் சுவாமிமலை இவ்வரலாற்றுடன் தொடர்புடையது. முருகன் குருவாக இருந்து அருளியமையால் குருமலை, குருகிரி எனப்பெற்றது. தந்தைக்கு பிரணவப்பொருளை உபதேசித்த முருகனை "தகப்பன்சாமி' என அழைக்கப்படுவது இத்தலச்சிறப்பு.
இவ்வாறு முருகப்பெருமான் குழந்தை வடிவில் ஞான பண்டிதனாக அருளியது ஒரு மாசி மகத்தினத்தன்றாகும். அதனால் தான் இந்த நாள் உபதேசங்கள் செய்ய உகந்த ஒரு நாளாகக் கருதப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.