சிவத் தொண்டில் சிறந்த கழற்சிங்கர்!
சிவ அபராதச் செயல்களாக சிலவற்றை ஆகமங்களிலும், பூஜை பத்ததிகளிலிலும் நமக்கு அறிவுரைகளாகச் சொல்லப்பட்டுள்ளன.


சிவ அபராதச் செயல்களாக சிலவற்றை ஆகமங்களிலும், பூஜை பத்ததிகளிலிலும் நமக்கு அறிவுரைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் ஆலயங்களில் ஆண்டவனுக்குச் செய்யப்படும் திக்ஷகிடச உபசாரங்களில் சிறப்பான அங்கம் வகிக்கும் புஷ்ப கைங்கர்யத்தில் அதைப் பறிப்பவர்களும், கட்டுபவர்களும் வாயைத் துணியினால் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நியதி உட்பட, எவை எவை எந்த எந்த காலங்களில் (காலை, மதியம், மாலை) பூஜைக்கு ஏற்றவை, எத்தகைய புஷ்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் வாசனை நுகரப்பட்ட பூக்களை உபயோகப்படுத்தக்கூடாது என்ற விதியும் அடங்கும்.
சிவ ஆராதனைக்குரிய புஷ்பத்தை அகஸ்மாத்தாக நுகர்ந்ததால் அது சிறிய குற்றமானாலும் பெரிய சிவ அபதாரமாகக் கருதப்பட்டு தன் அன்பிற்கு பாத்திரமான மனையாளையின் கையையே வெட்டித்துணித்தான் ஓர் அரசன். இந்த செயலைச் செய்த அம்மாமன்னன் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரிசையிலும் இடம் பெற்றான்.
அவரே கழற்சிங்க நாயனார் என்று பின்னால் அறியப்பட்ட பல்லவ மன்னன்.
கழற்சிங்கர் காஞ்சியில் அவதரித்ததாகச் சொல்லப்படுகின்றது. ஐயடிகள் காடவர் கோன் நாயனாரின் வம்சத்தைச் சேர்ந்தவர். மிகுந்த சிவபக்தி உள்ள பல்லவ பேரரசன். பல திருக்கோயில்களுக்குத் திருத்தொண்டு புரிந்து, பல சிவதலங்களுக்குச் சென்று வழிபட்ட அவர், ஒரு சமயம் தனது பட்டத்து அரசியாருடன் ஆரூர் அண்ணலைக் காணும் பொருட்டு திருவாரூர் வந்தடைந்தார்.
புற்றிடங் கொண்ட புண்ணியரைக் கண்ணீர் மல்கி கை கூப்பி, உள்ளம் உருகித் தரிசித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பட்டத்து நாயகியோ கோயிலைச்
சுற்றிப்பார்ப்பதும், சிற்பங்களை ரசிப்பதுமாக வலம் வருகையில் ஆலயத்தில் திருமாலைகள் கட்டும் திருமண்டபத்திற்கு வந்தடைந்தாள். அங்கு ஒரு புஷ்பம் கீழே கிடந்தது.
அதன் அழகில் மனதைப்பறி கொடுத்த அரசி வாசனையை அறியும் பொருட்டு பழக்கத்தின் காரணமாக உடனே எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
அவ்வமயம், ஆலயத்திற்கு இறை தரிசனத்திற்காக வந்த செருத்துணை நாயனார் இதனைக் கண்ணுற்றார். இவரும் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் சிவ அபராதச் செயல்களைப் புரிந்தவர்களைக் கண்டால் உடனே தண்டிப்பது வழக்கம்.
பல்லவ அரசியின் செயலைக் கண்ட அவர் மிகுந்த சினம் கொண்டு அவ்வரசியின் மூக்கை அரிந்தார். வெட்டுக்காயம்பட்ட அரசியும் கீழே விழுந்து துடித்தாள்.
இதனைக் கேள்விப்பட்ட கழற்சிங்கர் இந்த துணிகரச் செயலை செய்தவர் யார்? என கோபத்துடன் அங்கிருந்தவர்களிடம், வினவ, உடனே செருத்துணையார் அமைதியாக மன்னர் அருகில் சென்று நடந்தவற்றை விவரித்துவிட்டு சிவ பூஜைக்குரிய பூவினை முகர்ந்ததால் இந்த தண்டனை தரும்படி நேரிட்டது என்றார்.
கழற்சிங்கர் செருத்துணையாரை நோக்கி, "நீவீர் சரியான தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை, மலரை முகர்ந்தது குற்றம் தான், முதலில் மலரை எடுத்தது இவளது கை தானே? அதை வெட்டி வீழ்த்துவது தான் முறை" எனக்கூறியவாறு தனது வாளினால் ராணியின் கரத்தை வளையல்களோடு துணித்தான். இந்நிகழ்வை சேக்கிழார் பெருமான்,
"கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வாசப்பூத்
தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல் பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தாரன்றே.'
என்று தனது பெரியபுராணத்தில் அழகுபட பாடியுள்ளார். ஆரூர் இறைவனும் இறைவியும் இடப வாகனராய் காட்சியளித்து அனைவருக்கும் அருளினர். கை வெட்டுண்ட அரசியும் பழைய நிலையை அடைந்தாள். பாரபட்சமின்றி செயற்பட்டு நீதியை நிலை நாட்டிய கழற்சிங்க நாயனார் தொடர்ந்து சிவத் தொண்டுகள் புரிந்து சிவபெருமானின் திருவடிநிழலை அடைந்தார்.
இந்த நாயனாரின் திருநட்சத்திரம் வைகாசி மாதம், பரணி நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். காஞ்சியில் ஏகம்பரேஸ்வரர் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி உண்டு.
இவ்வாண்டு, இவரது திருநட்சத்திரம் (வைகாசி 28) ஜூன் 11-இல் அமைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...