சாதிக்கத் தூண்டும் சார்வரி ஆண்டு!

தமிழ் ஆண்டுகள் 60 -இல் முதலில் பிரபவ ஆண்டில் தொடங்கி கடைசியில் அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும்; மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும். நம் முன்னோர்கள் ஆண்டுக்குப்
சாதிக்கத் தூண்டும் சார்வரி ஆண்டு!


தமிழ் ஆண்டுகள் 60-இல் முதலில் பிரபவ ஆண்டில் தொடங்கி கடைசியில் அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும்; மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும். நம் முன்னோர்கள் ஆண்டுக்குப் பெயர்  சூட்டியதோடு, அதன் மூலம் அந்த ஆண்டின் இயல்பையும்  சொல்லி வைத்துள்ளனர். 

இந்த அறுபது வருடங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான  “அறுபது வருட வெண்பா’”இடைக்காடர் சித்தரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சார்வரி வருடத்திய வெண்பா:

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு...’

இந்த சார்வரி ஆண்டின் இயல்பைப் பற்றி பாடிய இடைக்காடர் தம் பாடலில் சொல்வதெல்லாம் நோய்கள் பெருகும், மழையும் விளைச்சலும் குறையும் என்பதால், மக்கள் அல்லல்பட நேரிடும் என்பதே. 

கொரோனா வைரஸ் நம்மை என்ன பாடு படுத்துகிறது? வான சாஸ்திரம் மற்றும் அதன் அங்கமான ஜோதிடம் என்பதெல்லாம் மக்களுக்கு எதிர்காலமுரைத்து அதற்கேற்றாற் போல் மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்கேயாம். விதியையும் மதியால் வெல்லலாமன்றோ? நாம் இந்த ஆண்டு சாதிக்க வேண்டும்! எதை? இடைகாடர் சொன்னதை மனதில் கொண்டு, அதற்கேற்றால் போல் திட்டங்கள் வகுத்து, மக்களை அல்லல்களிலிருந்து காத்து, நாட்டை மேன்மையுறச் செய்ய வேண்டும். 

அதற்கேற்றால் போல் இந்த ஆண்டின் ராஜாவாக வித்யாகாரகன் என்றழைக்கப்படும் புத்திக்கு அதிபதியான புதனும் அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் மனதின் அதிபதியான சந்திரனும் வருகிறார்கள். புதகிரகத்தின் பெருமையை நல்ல பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென்ற பழமொழியால் அறியலாம். இந்த ஆண்டில் எத்தனை சோதனைகள் வந்தாலும் புத்தியால் அதனை வெல்லலாம் என்பதனையே இது காட்டுகிறது. 

புத்திக்கு அதிபதியாக ஏன் புதன் போற்றப்படுகிறார்? அதைத் தெரிந்து கொள்வோமா!

சந்திரனுக்கும் தாராதேவிக்கும் பிறந்த புதன், தன் இளம் வயதில் எல்லாவற்றையும் வெறுத்து, ஞானம் கிட்ட, இமயமலை சென்று மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்து பல கலைகளும் கைவரப்பெற்றார். பின்னர் அங்கேயே ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு தவ வாழ்க்கையை மேற்கொண்டார்.

ஒருநாள் மிக்க அழகுடனும் வசீகர தேகத்துடனும் காட்டில் தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் புதனை ஒரு தேவ கன்னிகை கண்டு அவனிடம் தன் மனதைப் பறிகொடுத்தாள். தன்னை மணந்து இன்புற வேண்டினாள். ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் புதன் அவளைப் புறக்கணிக்க, அவனை அலியாகும்படி சபித்தாள் அந்த தேவ மகள்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் வெறுத்து தான் உண்டு தன் தவம் உண்டென்றிருந்த தனக்கு வந்த சோதனையைக் கண்டு மனம் நொந்து, தன் அலித்தன்மை நீங்க, மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்ய, மகாவிஷ்ணு தோன்றி அவரிடம் பரமேஸ்வரனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டால், அவருடைய நிலை மாறுமென்றுரைத்தார். மீண்டும் சிவபெருமானைக் குறித்து தவமியற்ற, அவரும் தோன்றி, திருவெண்காட்டில் வந்து அங்குள்ள மூன்று திருக்குளங்களில் நீராடி, தன்னையும், தேவியையும் வழிபட்டால் அவர் துயர் தீருமென்றுரைக்க அவரும் அவ்வாறே செய்து தன் அலித் தன்மை நீங்கி சுய உருப்பெற்று மீண்டும் தன் தவ வாழ்வை மேற்கொண்டு, அதன் பயனாக புத்திக்கு அதிபதியாக நவகிரகங்களில் ஒருவரானார்.  

சார்வரி ஆண்டின் ராஜாவான புதனை வணங்குவதால் புத்தி கூர்மை ஏற்படும். நினைவாற்றல் பெருகும். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் புதனை வணங்க, நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் விலகும். அத்தகைய சிறப்புமிக்க புதன் பகவானை மனதார நினைத்து வணங்க, இந்த சார்வரி ஆண்டில் மக்களிடையே தன்னம்பிக்கையும், வைராக்கிய உணர்வும் வளர்ந்து  அவர்கள் எண்ணங்கள் ஈடேறி, மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com