திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்... - 11

தன்னை விரும்பித் தொழும் அடியவர்களின் மனதில் உடனே தோன்றுகிற மாயனாகிய சிவபெருமான், அந்த பக்தர்கள் உள்ளத்தில் நினைப்பதை அறிந்து, அதை நிறைவேற்றித் தருவான்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:30 am

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்

"மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே' 

(பாடல் : 22)

பொருள் : தன்னை விரும்பித் தொழும் அடியவர்களின் மனதில் உடனே தோன்றுகிற மாயனாகிய சிவபெருமான், அந்த பக்தர்கள் உள்ளத்தில் நினைப்பதை அறிந்து, அதை நிறைவேற்றித் தருவான். அவனை நினைக்காதவர்கள்தான், அந்த இறைவனுக்கு என் மேல் கருணையில்லை எனச்

சொல்வார்கள். இறைவன் தன்னை யார் மனதில் நினைத்தாலும், அவர்களுக்குத் துன்பம் நேரும் போது, அவர்கள் பக்கம்  நின்று, அந்த துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்க அருள் செய்து, அவர்களைக் காத்து நிற்பான்.

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், கடவுளை மனதில் நினைத்து தியானித்தால், அவன் நம்மை துன்பத்திலிருந்து விடுவித்து பேணிக் பாதுகாப்பான். கடவுளை நினைக்காமல், கஷ்டப்படுகிறேனே என புலம்புவது வீண் என்கிறார் திருமூலர்.

சிவபெருமான் இருக்கிறானே.... அவன் கருணா மூர்த்தி...   எப்போது யார் அழைத்தாலும் உடனே உதவ ஓடி வருபவன். அதனால் தான், "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்றார் மாணிக்கவாசகர். தாயைப்போல என்று சொல்லாமல், தாயினும் என்கிறார். வீட்டில் ஏதாவது ஒரு அறையில் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும். தாய் வேறொரு இடத்தில் வேலை செய்து கொண்டிருப்பாள். குழந்தை கண் விழித்து பசியில் அழும் போது, தான் இருக்கும் இடத்திலிருந்து குழந்தை அருகே வர சில நொடிகள் ஆகும். ஆனால், அந்த சில நொடிகள் கூட தாமதிக்காமல், நம் துன்பத்தைப் போக்க சிவன் உடனே வருவான் என்பதால்,"தாயினும் சாலப் பரிந்து' என்றார்.

திருமூலரும், திருமந்திரம் எட்டாவது பாட்டில், "நல் அன்பர்க்குத் தாயினும் நல்லபின் தாழ்சடையோனே' என தாயினும் நல்லவன்  சிவபெருமான் எனக் குறிப்பிடுகிறார்.

காந்தி கண்ணதாசன் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தார். "திருவிளையாடல்' திரைப்படத்தில், "இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' என்கிற பாடலில், கண்ணதாசன், "சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ?' என்று ஒரு வரி எழுதியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம் என தேடினால், திருவிளையாடற்புராணத்தில், வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலத்தின் கதையே அந்த ஒற்றை வரி.

மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்னும் வணிகன், திருப்புறம்பியம் சிவாலய வன்னி மரத்தின் கீழ் பாம்பு தீண்டி இறந்தான். அவனோடு வந்த பெண் ரத்னாவதி, அந்த ஆலய சிவபெருமானிடம் அழுது புலம்பினாள். ஞான சம்பந்தப் பெருமான் பதிகம் பாடி, அந்த இளைஞனை உயிர்ப்பித்த பின், அக்கோயிலின் வன்னி மரம், கிணறு, மடப்பள்ளி, சிவலிங்கம் இவற்றை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டனர். மதுரையில் வணிகனின் உறவினர்கள், இந்தத் திருமணத்தை ஏற்காமல், "சிவலிங்கம் வந்து சாட்சி சொல்லுமோ?'  என ஏளனம் பேச, அப்பெண் மதுரை சொக்கநாதரை அழுது வேண்டினாள். சிவபெருமான், கிணறு, வன்னிமரம், மடப்பள்ளி இவற்றோடு காட்சியளித்து உண்மையை எடுத்துரைத்தார்.

"வன்னி இது இலிங்கம் இது கிணறு இது என்று மன்றல் சான்றாய்த்
துன்னிய என்றாள் கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள்' 

என்கிறது திருவிளையாடற் புராணம். திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு வந்து சாட்சி சொன்னதால், திருப்புறம்பியம் சிவனுக்கு சாட்சிநாதர் என்றே பெயர். மதுரை சொக்கநாதர் ஆலயத்தின் ஈசான்ய  மூலையில் மடப்பள்ளி, கிணறு, வன்னிமரம், சாட்சிநாதரின் சிவலிங்கத் திருமேனி ஆகியவை கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த செய்தியை, இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில் "வன்னி மரமும், மடைப்பளியும் சான்றாக முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்' என கண்ணகியின் கூற்றாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பொய்யில்லை. அது சத்தியமான உண்மை. சிவபெருமானை மனதில் நினைத்தாலே, அவன் நாம் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றித் தருவான் என்று சொல்கிற திருமூலர், மற்றொரு பாடலிலும் அதை உறுதிப்படுத்துகிறார்.

"கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வீட்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே‘ 

(பாடல் : 277)

உருக்கிய செம்பொன் ஒளி வீசுவது போல, இறைவன் தன்னை நினைக்கும் அன்பர்களின் மனக்கோயிலில், சோதி சுடரொளியாகத் திகழ்கிறான். அவனை நினைவில் நிறுத்தி, நெஞ்சில் வைத்துப் போற்றித் துதித்து, உள்ளன்போடு யார் வேண்டி நின்றாலும், அவர்கள் வேண்டியதை வேண்டியபடி தந்து, வாழ்வை வளமாக்கித் தருவான் தேவர்களுக்கெல்லாம் அரசனாகிய சிவபெருமான்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் சிவபெருமானை மனதில் நினைக்க வேண்டியது மட்டுமே. மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான்... அதுதான் திருமூலர் நமக்குச் சொல்கிற பாடம்..!

தொடரும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.