தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: 12

பொருள் : சக்தியும், சிவமும் சேர்ந்தது சதாசிவம். அந்த சதாசிவமே என் கடவுள். அவன் வானத்தையும் ஒரு கூறாகக் கொண்டு, அங்கும் நிறைந்துள்ளான்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:30 am

சு​ம​திஸ்ரீ


தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை
வான்ஒரு கூறு மருவியும் அங்குளன்
கோன்ஒரு கூறுடல் உள்நின்று உயிர்க்கின்ற
தான்ஒரு கூறு சலமயன் ஆமே
(பாடல் : 112 )

பொருள் : சக்தியும், சிவமும் சேர்ந்தது சதாசிவம். அந்த சதாசிவமே என் கடவுள். அவன் வானத்தையும் ஒரு கூறாகக் கொண்டு, அங்கும் நிறைந்துள்ளான். உயிர்த் தலைவனாகிய இச் சிவம்பரம்பொருளே உயிர்களின் உடல் புகுந்து, உயிர் கலந்து, அவற்றை இயங்கச் செய்யும் அருள் செய்கிறான்.

சதாசிவம் என்பது சிவபெருமானின் 64 திருக்கோலங்களுள் ஒன்று. அந்த சதாசிவ மூர்த்தம் எப்படி இருக்கும் என்பதையும் திருமூலர் விளக்குகிறார்.

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்து செங்கண்ணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே
( பாடல் : 1730)

திருவருளோடு கூடிய பாதங்கள் இரண்டும், பூமியில் போற்றிப்பாடும் அன்பர்களுக்கு அருள் வழங்கும் திருக்கரங்கள் பத்தும், எட்டுத் திசைகளிலும் விண்ணிலும், மண்ணிலும் விரிந்து பரவி நிற்க... பக்தர்கள் வணங்கி தொழத் தேடும் திருமுகங்கள் ஐந்தும், அருளொளி வீசும் கண்கள் பதினைந்தும் கொண்டு பக்தர்கள் விரும்பித் தேடும் சதாசிவ மூர்த்தி, தேடிப் பணிவார் உள்ளத்துள் முத்தொளியாய் விளங்குவார்.

சதாசிவ மூர்த்தி ஐந்து திருமுருகங்களைக் கொண்டவர். அவை, ஈசானம் (உச்சி), தத்புருஷம் (கிழக்கு), சத்யோஜாதம் (மேற்கு), அகோரம்(தெற்கு), வாமதேவம் (வடக்கு) ஆகியவை. சதாசிவமூர்த்தி பத்து கைகளோடும், பதினைந்து கண்களோடும் தன்னைப் பணிந்து வணங்கும் பக்தர்கள் உள்ளத்தில் முத்தின் ஒளியைப் போல பிரகாசிப்பாராம்.

பாடலைத் தொடங்கும் போது சதாசிவம் என்று போற்றும் திருமூலர், முடிக்கும் போது "சலமயன்' என்கிறார்.

சிவபெருமான் உலக உயிர்களின் உடல் புகுந்து, அவற்றை இயங்கச் செய்கிறான் ஆகையால் சிவபெருமானை "சலமயன்' என்கிறார்.

சலம் என்றால் தண்ணீர் என்று பொருள் கொள்கிறோம். கோபம் என்றும் ஒரு பொருள் உண்டு."சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார்' என்பது கந்தர் அலங்கார வரி. சலம் என்பதற்கு இயக்கம், சுழற்சி, அசைவு என்றும் பொருள் உண்டு. சலசலத்து ஓடுவதே சலம் ஆகும்.

மயன் என்றால் தச்சன், சிற்பி, படைப்பவர், உருவாக்குபவர் என்று பொருள்.

உலகின் உயிர்களின் இயக்கத்தைச் செய்பவன் ஆகையால் சிவபெருமானை "சலமயன்' என்கிறார்.

சிவநேசரின் ஐந்து வயது மகள் பூம்பாவை பாம்பு தீண்டி இறந்து போக, அந்த உடலின் சாம்பலை, கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வைத்து, "மட்டிட்ட' என்று தொடங்கும் பதிகம் பாடி ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததை பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது, பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடக்கும் வைபவம். அதைப் பார்ப்பவர்களுக்கு தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதெல்லாம் புராணங்களில் தானே இருக்கிறது. இன்றைக்கு இதெல்லாம் சாத்தியமா, நடக்குமா என்கிற ஐயம் வருவது இயல்பு தான்.

முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ். சொன்ன ஒரு செய்தி. அவர்கள் குடும்பத்தில் நான்கு மருத்துவர்கள். அந்த மருத்துவர்கள் சொன்ன செய்தி என இதைப் பகிர்ந்திருந்தார்.

ஒரு ஐந்து வயது குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை. அந்தக் குழந்தை மூன்று மாதத்திற்கு மேல் உயிர் வாழ சாத்தியமில்லை. அறுவை சிகிச்சை செய்தாலும் முப்பது சதவீதம் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு என மருத்துவர்கள் சொல்லி விட்டனர். குழந்தையின் பெற்றோர் அறுவை சிகிச்சை செய்வது என முடிவெடுக்கிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன், சில நாட்கள் மருத்துவனையில் தங்கியிருக்கும் போது, அக்குழந்தையின் தாய், "உன் இதயத்தில் கடவுள் இருக்கிறார். அவர் உன்னைக் காப்பாற்றுவார்' என இடைவிடாமல் சொல்வதை, அந்த அறையைக் கடந்து போகும் போதெல்லாம் கவனிக்கிறார் கடவுள் நம்பிக்கையற்ற அந்த மருத்துவர்.

அது ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை. ஆபரேஷன் தியேட்டருக்குள் குழந்தையைக் கொண்டு சென்றதும், மருத்துவரிடம் அந்தக் குழந்தை கேட்டதாம்...

""டாக்டர்...என் இதயத்தைத் திறந்துதானே ஆபரேஷன் பண்ண போறீங்க..?''

""ஆமா பாப்பா...''

""என் இதயத்துல கடவுள் இருக்கார்னு அம்மா சொன்னாங்க. நீங்க கடவுளைப் பார்த்துட்டு, அவர் எப்படி இருந்தார்னு சொல்றீங்களா..?''

மருத்துவர் கண் கலங்குகிறார். அறுவை சிகிச்சை தொடங்குகிறது.

நாற்பத்தி ஐந்தாவது நிமிடத்தில், இதயத்திற்கு வரும் அனைத்து ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது.

மருத்துவர்கள் எத்தனையோ மரணத்தைப் பார்த்தவர்கள்தான். ஆனால் இந்தக் குழந்தையின் மரணம் மருத்துவரை நிலை குலையச் செய்கிறது. "அந்தத் தாயின் நம்பிக்கைக்காகவாவது கடவுள் இந்த குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாமே' என அழுகிறார். உடன் இருந்த மருத்துவர்களிடம், "உடலை குழந்தையின் அம்மாவிடம் ஒப்படைத்து விடுங்கள். என்னால் அதைச் செய்ய முடியாது' எனக் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்கிறார்.

மற்றொரு மருத்துவர் ""டாக்டர்... மீண்டும் ரத்தக் குழாய்களில் ரத்தம் சீராக ஓடுகிறது'' எனக் கத்த... அந்த மருத்துவர் வந்து பார்க்கிறார். அடுத்த நான்கரை மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, ""இனி இந்தக் குழந்தை அறுபது வயது வரை ஆரோக்யமாக வாழும். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்'' என்றார்.

அடுத்த நாள்... அவர் மருத்துவமனைக்கு வந்த போது, ஒரு கடவுள் படத்தைக் கொண்டு வந்து வைத்தாராம். ""உன் இதயத்தில் கடவுள் இருக்கிறார்... அவர் காப்பாற்றுவார்... என்ற தாயின் நம்பிக்கையே அக்குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது'' என்றார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

கடவுள் அருளால் நிகழ்கிற அதிசயங்கள், மருத்துவர்கள் மூலமே கிடைக்கிறது. அதனால் தான் அவர்களை கடவுளுக்கு நிகராகச் சொல்கிறோம்.

நமது நம்பிக்கையே அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும். அதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்.

பணிந்து வணங்குபவர் உள்ளத்தில் முத்தைப் போல் விளங்கும் சதாசிவ மூர்த்தி, உயிர்களின் உடல் புகுந்து, உயிர் கலந்து, அவற்றை இயங்கச் செய்யும் சலமயன் என திருமூலர் சொல்வது எத்தனை சத்தியமான வார்த்தை..!

- (தொடரும் )

(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.