பேச்சில் வெளிப்படும் பண்புகள்
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்: "நபியே! என்னுடைய அடியார்களுக்கு, எது மிக அழகியதோ, அதனையே அவர்கள் பேசவேண்டும் என்று கூறுவீராக!'


ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்: "நபியே! என்னுடைய அடியார்களுக்கு, எது மிக அழகியதோ, அதனையே அவர்கள் பேசவேண்டும் என்று கூறுவீராக!'
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: மாடுகள் தாங்கள் உண்ட உணவை மீண்டும் தாடைக்குக் கொண்டு வந்து அசைபோடுவது போல், மனிதர்களில் சிலர் தங்கள் நாக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அல்லாஹ் மறுமை நாளில் இத்தகையவர்களின் முகங்களையும், வாயையும் நரகத்தின் பக்கம் திருப்புவான்.
பேச்சில் தூய்மையும் ஒழுக்கமும் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை வெளி வருமுன், "இது அவசியம் தானா? இதனால் என்ன பயன்? என்ன தீமை?' என ஒருநொடியாவது சிந்தித்துவிட்டுப் பேசினால், சமூகத்தில் புறம் பேசுதல் இருக்காது.
சுற்றி வளைத்துப் பேசுவது, ஜாடை மாடையாக பேசுவது, அதிகப்படுத்தி பொய் கலந்து ஒரு செய்தியைச் சொல்லுவது, வாயிலிருந்து வார்த்தையைப் பிடுங்குவதற்காகப் பேசுவது போன்றவை இழிவான பண்புகளாகும்.
இவ்வுலகத்தில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் மறுமையில் விசாரணை உண்டு என்பதை நம்புவது கடமையாகும். "வாய் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்' என உலகத்தார் கூறுவதை ஏற்று நடந்தால், "வாய் இருந்தால் மறுமையில் நஷ்டம் வரும்' என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
பேச்சு சாதுர்யத்தினால் அல்லாஹ்வின் உதவியைப் பெற முடியாது. யதார்த்தமான, இயல்பான குணமுடையவரே அல்லாஹ்விடம் உதவி பெறத் தகுதி உடையவர் ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை நபித்தோழர்களிடம், ""நான் உங்கள் முன் வரும்போது, உங்களில் யாரும் யாரைப் பற்றியும் என்னிடம் குறை சொல்ல வேண்டாம். ஏனெனில், உங்களைத் தூய்மையாகப் பார்க்க விரும்புகிறேன்'' என்றார்கள்.
"ஸலாமத்' என்ற நிம்மதி நாவை அடக்குவதன் மூலமே கிடைக்கிறது. வாயை மூடிக் கொண்டவர் "ஸலாமத்' பெற்றுவிட்டார் என்பது நபிமொழி.
மனதைச் சங்கடப்படுத்தும் பேச்சை ஒருவர் பேசும்போது, அதனை மற்றவர் பொறுத்துக் கொள்வதால், அவரைக் கோழை என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, இறைப்பொருத்தத்திற்காகச் செய்யப்படும் பொறுமை, ஏசுபவரை கடும் தண்டனையில் வீழ்த்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனிதனின் நாவு கத்தியை விட கூர்மையானதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது. நாவை அதன் முறைப்படி பயன்படுத்தவில்லையென்றால் தன்னையும் துன்பத்தில் சிக்க வைத்து பிறரின் உள்ளத்தையும் காயப்படுத்திவிடும்.
""ஒரு மனிதன் தன் நிலையைக் குறித்து அறிய விரும்பினால், தன் பேச்சைப் பற்றி சிந்தித்துக் கொள்ளட்டும்'' என ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...