திருமேனியுடன்  வைகுந்தம் போன அருளாளர்!  

வழக்கப்படி இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு,  விலங்கு போலே நான்கு கால்களாலே நடந்து,   காலை ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் பசுவைப் போல நீராடிவிட்டு,  வஸ்திரம் எதுவும் இல்லாமல்...
திருமேனியுடன்  வைகுந்தம் போன அருளாளர்!  

வழக்கப்படி இரண்டு கைகளையும் கால்களாக்கிக் கொண்டு, விலங்கு போலே நான்கு கால்களாலே நடந்து, காலை ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் பசுவைப் போல நீராடிவிட்டு, வஸ்திரம் எதுவும் இல்லாமல், பிராணியைப் போல நடந்து கோயிலுக்கு வந்து, பெருமாளைச் சேவித்துவிட்டு அங்கிருந்த மகிழ மரத்தடியில் கோயிலில் பெருமாளின் பிரசாதங்கள் கிடைத்தால் சாப்பிட்டு, மரத்தடியில் இருந்த பக்தரிடம் பெருமாள் வந்தார் . ""நாளைய தினம் உனக்கு வைகுந்தம் அருளப் போகிறேன்'' என்கிறார்.

அன்று இரவு அந்த ஊரில் இருந்தவர்களின் கனவில் பெருமாள், ""நாளை என் பக்தனுக்கு மோக்ஷம் தரப் போகிறேன், நீங்கள் கண்ணாரக் காணலாம், இது உறுதி''” என்கிறார்.

மறுநாள் ஊரார் கோயிலில் குழுமினர். வழக்கப்படி அந்த பக்தர் காலை குளத்தில் நீராடி நான்கு கால்களால் கூட்டத்தின் நடுவே நடந்து வந்து கோயிலைச் சுற்றி வந்து இறைவன் முன் தண்டம் செய்து பெருமாள் திருவடிகளையும் தன் ஆசாரியனையும் தியானித்து மூர்ச்சையானார். பக்தர்கள் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்க, எம்பெருமாளின் திருவடிகளில் சின்ன மின்னலாய் மாறி மறைந்து போனார். நடந்தது திவ்யதேசம் திருக்கண்ணமங்கையில் ஆகும். ஸ்ரீ நாதமுனிகளின் நேரடி சீடரான திருக்கண்ணமங்கையாண்டானே திருமேனியுடன் வைகுண்டப்ராப்தி அடைந்தவர் திருக்கண்ணமங்கையில் வாழ்க்கைப்பட்டிருந்த ஸ்ரீமத் நாதமுனிகளுடைய சகோதரி மகன் ஸ்ரீகிருஷ்ணலட்சுமிநாதன் குறைவில்லாத செல்வத்துடன் , திருக்கண்ணமங்கை என்ற கிராமத்தை ஆண்டு வந்த காரணத்தால், "திருக்கண்ணமங்கை ஆண்டான்' எனப்பட்டார். நாதமுனிகளிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்று அவர் உத்தரவுப்படி ஊர் பெருமாளான பக்தவத்சலனுக்கு துளசி புஷ்ப கைங்கரியம் செய்துகொண்டு இருந்த காலத்தில் இச்சம்பவம் நடந்தது.

ஒரு நாள் திருக்கண்ணமங்கை கோயிலுக்கு இரண்டு நண்பர்கள் தங்கள் நாயுடன் வந்தனர் . தங்கள் காலணிகளை வெளியே விட்டு நாய்களைக் காவலுக்கு வைத்து விட்டுச் சென்றனர். வரும் போது நாய் ஒன்று மற்றொரு எஜமானனுடைய காலணிகளைக் கடிக்க, நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்துக்கொண்டு சண்டை போட்டு ஒரு நாய் இறந்தது. செத்த நாயின் சொந்தகாரன் மற்றொரு நாயை அடிக்க அதுவும் செத்தது. இருவருள்ளும் வாக்குவாதம் முற்றி ஒருவருக்கு ஒருவர் சண்டையில் கத்தியால், வெட்டிக்கொண்டு மாய்ந்து போனார்கள் பல்லக்கில் வந்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கையாண்டான், நடந்ததை விசாரித்து அறிந்து சிந்தனை செய்தார்... "சாதாரண மனிதனே தன்னுடையது என்ற காரணத்துக்காக, நாய்க்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு பொறுக்காமல் அதை அடித்தவனைக் கொன்று தானும் உயிர்விட்டான் . ஆனால் தன்னை நம்பி தன் நிழலில் ஒதுங்குபவர்களைக் காப்பாற்ற பரமாத்மா எவ்வளவு துன்பப்படுவான்' என சிந்தித்தார்.

தன்னை காத்துக் கொள்ள எம்முயற்சியும் மேற்கொள்ளாமல், பரமாத்மாவான எம்பெருமானின் நிழலில் ஒதுங்கிய ஒரு நாய் போலத் தன்னை நினைத்துக் கொண்டு, அப்போதே திருக்கண்ணமங்கைகோயிலில் அடைக்கலம் புகுந்து தன் வாழ்நாள் முழுவதும் கோயிலைச் சுத்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டார். "நாராயணனே நாம் உய்ய வழி' என்றும், "அவனுக்கு நாம் செய்யும் நித்ய கைங்கர்யமே மிகவும் முக்கியமான குறிக்கோள்' என்றும் இறை நூல்கள் விளக்குகின்றன.

பரமாத்மனே அனைத்து சக்திகளும் கொண்டு சர்வரக்ஷகனாக இருப்பதால், எவரை வேண்டுமானாலும் எளிதில் எதனிலிருந்தும் விடுவிக்க முடியும் - ஆதலால் அவனே உபாயம். ஸ்ரீமந் நாராயணனே அனைவருக்கும் தலைவன் என்பதால், அவனை கைக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியானார்.

ஒருநாள் மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளை பெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஆண்டான்.

அவர் நண்பர் இவர் குப்பைகளை பெருக்கித் தள்ளிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஏளனமாக, ""பகவான் உபாயம் என்று வேறு பயன் கருதாத நீங்கள் ஏன் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்? பயன் என்ன ?'' என்றார்.

அதற்கு ஆண்டான், ""சுத்தம் செய்த இடத்தையும், செய்யாத இடத்தையும் காட்டி இந்த இரண்டு இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா? அது தான் அதனுடைய பயன்'' என்றாராம்.

ஆண்டான் செய்த கைங்கரியம் பயனுள்ளது . சில பயன் கண்ணுக்குத் தெரியும் - அது போல தான் கைங்கரியமும். கோயில் அலகிட்டு சுத்தம் செய்வது, கோலம் போடுவது, விளக்கு ஏற்றுவது எல்லாம் கைங்கரியம் தான். ஆனால் இவற்றைப் பலன் கருதி செய்யக் கூடாது. ஒரு சின்ன விதி: கைங்கரியம் செய்துவிட்டு எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஆண்டான் செய்ததே சரணாகதி கைங்கரியம் ஆகும்.

பெரியாவாச்சான் பிள்ளை திருக்குமாரரான நாயனாராச்சான்பிள்ளை அருளிய ”"சரமோபாய நிர்ணயம்”' என்ற நூலிலும், திருக்கண்ணமங்கை ஆண்டான் வைபவத்தை ஸ்ரீபட்டர் ஸ்ரீநஞ்ஜீயருக்கு சொன்னார் என்று “"ப்ரபந்நாம்ருதம்' நூலிலும் பிள்ளைலோகாசாரியர் "ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்திரத்தில்' இவரின் மேன்மையான குணச்சிறப்பையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றும் திருக்கண்ணமங்கையில் மகிழ மரத்தடியில் அவரை அர்ச்சா ரூபமாய் தரிசிக்கலாம் . மகான்கள் எப்போதும் நாம் அறியாத வகையில் தோன்றி அருளிக் கொண்டே இருக்கின்றார்கள் . இவரது திருநட்சத்திரம் ஆனித் திருவோணம். எதிர்வரும் ஜூலை 7- ஆம் தேதி இவரது திருநட்சத்திரம் ஆகும்

திருவாருரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கி.மீ. தூரத்தில் திருக்கண்ணமங்கை உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது சென்று தரிசியுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com