மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: ஆற்றரு நோய்மிக்கு அவனி மழைஇன்றி - 9

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழைஇன்றிப்போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்...: ஆற்றரு நோய்மிக்கு அவனி மழைஇன்றி - 9

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழைஇன்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே...

(திருமந்திரம் 517 )

பொருள் : தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு நோய் அதிகமாகும். உலகில் மழை இன்றி வளம் குறையும். போற்றத்தக்க மன்னர்களும், போர் செய்யும் வலிமை குன்றிப் போவர். இவையெல்லாம் காலனைக் காலால் உதைத்த கடவுள் திருக்கோயில்களில், நித்திய பூஜைகள் நியமப்படி நடக்கத் தவறினால் உண்டாகும் தீமைகளாகும்.

இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஆலயங்களில் நித்திய பூஜைகள் நியமப்படி நடைபெறா விட்டால், மக்கள், நாடு, அரசு இவை நோய், பஞ்சத்தால் அவதியுறும் நிலை வரும் என எச்சரிக்கிறார் திருமூலர். அடுத்த பாடலிலும், கோயில்களில் பூஜைகள் தவறாமல் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னருள் நந்தி எடுத்துரைத்தானே
(பாடல் 518)

முழு முதல் கடவுளான பரம்பொருள் அருள் பாலிக்கும் கோயில்களில் நடைபெற வேண்டிய பூஜைகள் தடைபடுமானால், நாடாளும் அரசருக்கு தீங்கு வரும்.பெய்யும் மழை பொய்த்து பூமி வறண்டு வளம் கெடும். நாட்டில் திருட்டும், கொள்ளையும் அதிகமாகும். என் அன்பிற்கினிய சிவபெருமான் இதை எனக்கு எடுத்துச்சொல்லி அருளினான் என்பது பொருள்.

ஒரு கோயிலுக்கு, ஏதேனும் பிரார்த்தனையோடு நாம் சென்றால், அக்கோயில்களில் இருக்கும் இறைசக்தி மாபெரும் மாற்றத்தை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டும்.

வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காட்டில், கோயில் விளக்கு ஒன்று, தூண்டப்படாமல் அணைகிற நிலையில் இருந்தது. ஒரு எலி, அந்த விளக்கில் உள்ள நெய்யை சாப்பிடும் நோக்கில் விளக்கு அருகே வந்த போது, அந்த எலியின் மூக்கு திரியைத் தூண்ட விளக்கு பிரகாசமாக எரிந்தது. திருக்கோயிலில் விளக்கைத் தூண்டி, பிரகாசமாக எரியச் செய்ததால் அந்த எலி, அடுத்த பிறவியில் மாவலி சக்கரவர்த்தியாக பிறந்து அரசாட்சி செய்தது. இதை, அப்பர் சுவாமிகள், தன் தேவார பாடலில் இப்படி பதிவு செய்கிறார்.

நிறைமறைக்காடு தன்னில்
நீண்டெரி தீபம் தன்னை
கறை நிறத் தெலிதன் மூக்குச்
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும், விண்ணும்
நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும்
குறுக்கை வீரட்டனாரே.

பக்தியினால் அல்ல... அனிச்சையாக கூட கோயில் காரியத்தில் பங்கெடுத்தால், மண்ணுலகம், விண்ணுலகம் எல்லாம் குறையின்றிக் கொடுப்பான் சிவபெருமான் என்கிறார் அப்பர் சுவாமிகள்.

திருவானைக்கோயிலில் சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாத வண்ணம் நூலால் மேற்பந்தல் அமைத்துக் காத்தகாரணத்தினாலேயே சிலந்தி ஒன்று, அடுத்த பிறவியில் கோட்செங்க சோழன் என்கிற மன்னனாக பிறந்து ஆட்சி புரிந்ததை நாம் அறிவோம்.

"ஆனைக் கோயில் தாம்முன்னம்
அருள்பெற்றதனை அறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார்,
மகிழும் கோயில் செய்கின்றார்'
என விவரிக்கிறது பெரிய புராணம்.

இறைவன் தான் எல்லா இடத்திலும் இருக்கிறாரே, கோயில்களுக்கு சென்று தான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி வரலாம்.

கோயில்களில் பல்லாண்டுகளாக, முறையாக ஒலித்த மந்திரங்கள் அங்கே மிக நல்ல அதிர்வலையை ஏற்படுத்தி தரும்.

அது நம்மை எத்தகைய துன்பத்திலிருந்தும் விடுவிக்கும். தேவர்களும், முனிவர்களும் வந்து வழிபட்ட,இப்போதும் வழிபடுவதாக நம்புகிற ஆலயங்களில் முழுக்க நிரம்பியிருக்கும் அந்த தெய்வீக ஆற்றல், நம்மை கவசம் போல் காக்கும். அந்த மகத்தான சூழல் ஆலயங்களில் மட்டுமே சாத்தியம். அதனாலேயே கோயில்களுக்கு சென்று வழிபடுவது முக்கியமானதாகிறது.

எதன் பொருட்டும் கோயில்களில் பூஜைகள் தடை படக் கூடாது என்பது திருமூலருக்கு சிவபெருமானே சொன்ன அறிவுரை.

கோயிலில் இருக்கும் கடவுள் தன்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டும் அருள் செய்வதில்லை... அந்த வழியாக போகிறவர்களை கூட தன்னருகில் வரவழைத்து, தன் அருளைக் கொடுப்பவன். அதற்காகவே அவன் கோயில்களில் கொலு வீற்றிருக்கிறான்.

அந்த கோயில்களில் நித்திய பூஜைகள் நியமப்படி தடை படாமல் நடைபெற வேண்டும் என்பதே திருமூலரின் அறிவுரை.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com