மூங்கிற்காட்டு முக்கண்ணன்
மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு தேவார திருப்பதிகம் பெற்று, தொண்டை நாட்டுத்தலங்களுள் 16-ஆவது தலமாகத் திகழ்கின்றது திருப்பாச்சூர். ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் மூங்கில் காடாக இருந்திருக்கிறது. பாசு என்றால் மூங்கில் எனப் பொருள். தல மரத்தின் பெயரால் ஊருக்கு பாசூர் எனப் பெயர் வழங்கி, தற்போது "திருப்பாச்சூர்' என அழைக்கப்படுகிறது. திருவள்ளூருக்கு மேற்காக 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தின் சிறப்பினை மேலும் அறிவோம்.
தல வரலாறு:
மன்னன் கரிகால் சோழன் அடர்ந்த இக்காட்டுப் பகுதிக்கு வந்தபோது அவனது எதிரிகள் கொடிய விஷம் கொண்ட பெரிய நாகத்தை ஒரு குடத்தில் இட்டு அனுப்பினர். பாசூரில் உறையும் பரம்பொருள் மன்னனைக் காக்க விரும்பினார். அவரே பாம்பாட்டியாக வந்து மன்னன் குடத்தைத் திறப்பதற்கு முன்பாகவே மகுடி ஊதி பாம்பை வெளியே எடுத்து அடக்கிக் காத்தார்.
தன்னைக் காத்த இறைவன் கோயில் கொண்டிருக்கும் ஆலயம் சேதமுற்றிருந்ததைக் கண்டு அதனைச் சீர் செய்ய விரும்பினான் மன்னன். திருப்பணி துவங்கியபோது கரிகாலன் ஈசனை மூங்கில் காட்டில் எங்கு தேடியும் காணமுடியவில்லை. அங்கிருந்த காட்டு வாசிகளைக் கேட்டான்.
அவர்கள் மன்னனிடம் ஒரு பசுமாடு அடிக்கடி சென்று பால்சொரியும் புதரினைக் காண்பித்தனர். அங்கு சென்று, மூங்கில் வெட்டப் பயன்படுத்தம்படும் "வாசி' என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன்.
அப்போது திடீரென நெற்றியில் ரத்தப் பெருக்குடன் இருக்கும் ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டான். மகேசனைக் கண்ட மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். உதிரப் பெருக்கும் நின்றது. கோயில் கட்ட விரும்பிய அவனுக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டது.
அவ்வமயம் காளியின் பக்தனான குறுநில அரசன், காளியின் துணையுடன் கரிகாலனிடம் போரிட்டான். மன்னன் இறைவனை வேண்ட நந்தியெம்பெருமான் காளிக்கு விலங்கு பூட்டி அடைத்ததாகக் கூறப்படுகின்றது. (இதன் அடையாளமாக கோயில் வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் முன் விலங்கிட்ட காளியின் சிற்பம் உள்ளது). திருப்பணி வேலைகள் இனிது முடிந்தன. பின்னர் ஆண்ட சோழமன்னர்கள் மூலம் அவ்வப்போது கோயில் திருப்பணிகள் தொடர்ந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
மூலமூர்த்தி: கருவறையில் வாகீசர் என்னும் திருநாமத்துடன் மூலவர் சதுரபீட ஆவுடையாரில் எழுந்தருளியுள்ளார். மூங்கில் புதரிலிருந்து வெளிப்பட்டதால் லிங்கப் பகுதி சொரசொரப்புடன் வெட்டப்பட்ட தழும்புகளுடன் காட்சியளிக்கின்றது.
சுவாமிக்கு பசுபதீசுவரர், பாசூர் நாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் அபய, வரத, பாசாங்குசத்துடன் நின்றகோலத்தில் அருளும் மிக அழகிய கோலம். பசுபதி நாயகி, மோகனாம்பாள், பனைமுலை நாச்சியார் என்ற பெயர்களும் சொல்லப்படுகிறது. இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம்.
இதர சந்நிதிகள்: ஷோடச கணபதி எனப்பெறும் பதினாறு வகையான விநாயக மூர்த்திகள், வள்ளி தெய்வானையுடன் செல்வமுருகன், நவ கிரகம், சோமாஸ்கந்தர், நடராஜர் சபை, அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் ஆகியவைகள் இவ்வாலயத்தில் மேலும் தரிசிக்க வேண்டிய அம்சங்கள். இங்கு 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மூங்கில் மரம் (தல விருட்சம்) பாதுகாக்கப்படுவது சிறப்பு. இத்தலத்தின் தீர்த்தமாக சோமதீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம் என்னும் திருக்குளம் விளங்குகிறது.
மூன்று நிலை ராஜகோபுரம், கஜப்பிருஷ்ட கருவறை அமைப்பு, மன்னர்கள் கால கல்வெட்டுகள் என்ற அம்சங்களுடன் ஆலயம் அழகுற காட்சியளிக்கின்றது.
வழிபாட்டுச் சிறப்பு: அம்பாள் சிவனுக்கு வலப்புறம் சந்நிதி கொண்டிருப்பதால் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்கு அம்பிகையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடும்.
இக்கோயிலில் ஆனித்திருமஞ்சனம் முதல் மார்கழி தரிசனம் வரை நடராஜப் பெருமானுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும், வருடாந்திர அபிஷேகங்களும் முறையாக நடத்தப்படுகின்றன. தகவல்களுக்கு: 9597889945 / 9790213820.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.