
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
(பாடல் 1823).
இப்பாடலில் திருமூலர், நம் உடம்பே கோயில் என்றும், ஜீவனாகிய உயிரே கடவுள் என்றும் குறிப்பிடுகிறார்.
நமது உடம்பே ஆலயம். நமது உள்ளம் கடவுள் இருக்கும் கருவறை (கோயில் என்பது கருவறை எனப் பொருள் கொள்ளப்படும்). உலக உயிர்களுக்கு அருளை வாரி வழங்கும் வள்ளலாகிய பரம்பொருளை சென்று வழிபடும் வெளி வாசலான கோபுர வாசலாக விளங்குவது நம் வாய். அறியாமை இருள் அகன்ற தெளிவான மனநிலை வாய்க்கப்பட்டவர்களுக்கு, உயிரே வழிபட்டு வணங்கத்தக்க சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுபவர்களுக்கு, கண், மூக்கு, வாய், செவி, உடம்பு ஆகிய அழிவைத் தருகிற வஞ்சகமான ஐம்புலன்களும் கோயிலின் பெரிய, ஒளி வீசுகிற, விளக்குளாகத் திகழும் என்பது பாடலின் பொருள்.
ஐம்புலன்களையும் "கள்ளப் புலன்' என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ஏனெனில், அந்தப் புலன்கள் நமக்குத் துன்பத்தைத் தரக் கூடியவை. மாணிக்க வாசகரும், சிவ புராணத்தில் "கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லானே' என்று புலன்களை "கள்ளப் புலன்' என்றே குறிப்பிடுகிறார்.
எப்படி ஐம்புலன்கள் துன்பத்தை, அழிவைத் தருகின்றன?
விட்டில் பூச்சி வெளிச்சத்தைப் பார்த்து, அதன் அருகில் வந்து, அதிலேயே இறந்து போகும். கண்ணால் அழிவது விட்டில். வண்டு, பூவின் வாசத்தை முகர்ந்து, பூவைத் தேடி வந்து, அதற்குள்ளேயே மூழ்கி இறக்கும். நாசியால் அழிவது வண்டு. மீன், தூண்டில் புழுவைப் பார்த்து சாப்பிடும் வேட்கையுடன் தூண்டிலில் மாட்டி இறக்கும். அசுணம் என்றொரு பறவை இருந்தது... இனிமையான "யாழ்' இசையை இசைக்கச் செய்தால், அருகில் வரும். உடனே பறை, முரசு கொண்டு வேகமாக சத்தத்தை எழுப்பினால், அந்த சத்தத்திலேயே இறந்து போகும். செவியால் மடிவது அசுணம்.
ஆண் யானையை பிடிக்க,பெண் யானை போல ஒரு உருவம் செய்து,அதன் முன் ஒரு குழி வெட்டி, இலை,தழைகளால் நிரப்பியிருப்பார்கள்.யானை வேட்கையுடன் வரும் போது,அந்த குழியில் விழுந்து இறந்து போகும்.உடலால் அழிவது யானை..
ஐம்புலன்களில், கண்ணால் அழிவைத் தேடிக் கொள்வது விட்டில்,நாசியால் அழிவது வண்டு,வாயால் அழிந்து போவது மீன், காதால் அழிவைத் தேடுவது அசுணம், உடம்பால் அழிந்து போவது யானை... இந்த ஐம்புலன்களாலுமே அழிவைத் தேடிக் கொள்பவன் மனிதன்... அதனால் அவை "கள்ளப் புலன்கள்' எனப்படுகின்றன.
இக் கள்ளப் புலன்கள், நம் உடம்பும், உள்ளமும் இறைவன் வசிக்கிற இடமாக இருக்கும் போது, காளா மணிவிளக்காக மாறுகிறதாம்.
காளம் என்றால் இருட்டு. காள மேகம் என்றால் இருட்டு போன்ற கருமையான மேகம். காளா என்றால் இருட்டு அல்லாத வெளிச்சம். இறைவன் உள்ளத்தில் இருக்கும் போது, கள்ளப் புலன்கள், காளா மணி விளக்குகளாக உடம்பு என்னும் கோயிலில் சுடர் விடும்.
என் உடம்பு என்னும் ஆலயத்தில், இறைவன் குடி கொண்டிருக்கும் உள்ளம் என்னும் கருவறைக்கு செல்லும் வழியாக, கோபுர வாசலாக என் வாய் இருக்கிறது என்பதை புரிந்திருந்தோமானால், ஒரு போதும் தகாத வார்த்தைகளைப் பேசவே மாட்டோம்.
கம்பராமாயணத்தில், லட்சுமணன் கோபத்தில் கடுமையான சொற்களைப் பிரயோகிக்கும் போது, ராமன் சொல்வான் "வாய் தந்தன பேசுதியோ மறை தந்த நாவால்' என. வேதம் ஓதிய வாயால் இப்படி வாய்க்கு வந்ததைப் பேசலாமா... எனக் கேட்கிறான் ராமன். நம் வாய், கடவுளைக் காணச் செல்லும் வாசலாக இருக்கும் போது, தகாத வார்த்தைகளை ஒரு போதும் பேசக் கூடாது.
உள்ளம் இறைவன் உறையும் இடம், உடம்பே கோயில் என்று சொல்லும் திருமூலர், நம் உயிர் தான் கடவுளாகிய சிவலிங்கம் என்கிறார்.
நான் கடவுள், என் உயிரே கடவுள் என்பதை உணர்தல் வேண்டும். அப்படி உணரும் போது, உடலாலும், உள்ளத்தாலும் நாம் நன்மை மட்டுமே செய்வோம். வாழ்வின் துயரங்கள் குறித்த மன வதை இருக்கவே இருக்காது.
ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய "அப்பா வாசனை' என்றொரு சிறுகதை. மணி என்கிற சிறுவன் கடற்கரையில் சுண்டல் வியாபாரம் செய்பவன். பல நாட்கள் சுண்டல் விற்காமல் அப்படியே இருக்கும். அதனால் முதலாளியிடம் அடி வாங்குவான். ஊரில் அவன் அம்மா, அவன் சம்பாதித்து அனுப்பும் பணத்திற்குக் காத்திருப்பதற்காக கடிதம் அனுப்புவார்.
சிறுவன் மணியிடம், ஒரு நபர், தான் வேறு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும், கை நிறைய சம்பாதிக்கலாம் என்றும் சொல்வார். மணி, அந்த வேலை நேர்மைக்குப் புறம்பானது எனத் தெரிந்ததும், அதைச் செய்ய மறுத்து விடுவான்.
""பைத்தியமா பிடிச்சிருக்கு? கஷ்டம்'லாம் விடிஞ்சுடும்'' என அந்த நபர் சொல்லும் போது, ""ஆனா, மனசு கஷ்டப் படும்'' என பதில் சொல்வான், நேர்மையாக வாழ வேண்டும் என அவன் அப்பாவிடம் கற்ற பாடத்தால்...
பல வருடங்களுக்கு முன், திருச்சியிலிருந்து ஈரோட்டிற்கு ரயிலில் பயணித்தேன்... பத்து குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் கொடுமுடி கோயிலுக்கு போவதற்காக அந்த ரயிலில் பயணித்தார்கள். நிறைய குழந்தைகள் இருந்தனர். ஆறு, ஏழு வயதில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பயணச்சீட்டு வாங்கியிருப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
"டிக்கெட் செக் பண்ணினாலும், அஞ்சு வயசு ஆகல'னு சொன்னா தெரியவா போகுது...?'
அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அழைத்து வந்தவர் சொன்னார்...""போறது கோயிலுக்கு...பொய் சொல்லிட்டு, ஏமாத்திட்டு போகணுமா...? டிக்கெட் செக் பண்றாங்களோ... இல்லையோ... நம்ம மனசாட்சிக்கு நாம உண்மையா இருக்கணும்'ல...''
அவர்கள் இறங்கும் வரை டிக்கெட் பரிசோதகர் வரவில்லை. "பயணச்சீட்டு வாங்கியது வீண்' என அவர் நினைக்கவில்லை. "என் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தேன்...' என்ற பெருமிதத்தோடு கிளம்பிப் போனார்.
மணி என்கிற சிறுவனின் ""மனசு கஷ்டப்படும்'' என்கிற வார்த்தையும், ரயிலில் ""மனசாட்சிக்கு உண்மையா இருக்கணும்'ல'' என்ற நபரின் வார்த்தையும் ஒன்று தான்...
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்...'
நம் உடம்பே கோயில், நம் மனதில் இறைவன் இருக்கிறான், நம் ஜீவனே சிவலிங்கமாக இருக்கிறது என்கிற புரிதல் வந்து விட்டால், அறத்திற்கு மாறுபட்ட எதையும் செய்ய மாட்டோம்.
"தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்' அதுவே திருமூலர் நமக்கு வலியுறுத்திச் சொல்லும் திருமந்திரம்.
- தொடரும்