சந்திரனுக்கு சாப விமோசனம் தந்த  சோமநாதர்

சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிறப்புடைய தலமாகத் திகழ்கிறது குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயம்.
சந்திரனுக்கு சாப விமோசனம் தந்த  சோமநாதர்
சந்திரனுக்கு சாப விமோசனம் தந்த  சோமநாதர்
Published on
Updated on
2 min read

சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிறப்புடைய தலமாகத் திகழ்கிறது குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலயம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலோரம் வேரவால் என்ற இடத்தில் எழுந்தருளியுள்ளார் சோமநாதர். நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானவர் இவராவார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சந்தனக் கட்டையாலும், இலங்கை மன்னன் ராவணன் வெள்ளியாலும், சந்திர பகவான் தங்கத்தாலும் சோமநாதர் கோயிலைக் கட்டினர் என்பது ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் பலமுறை இஸ்லாமிய மன்னர்களின் தாக்குதலுக்கு ஆளானது. 

கோயில் வரலாறு: மன்னன் தக்ஷன் பிரஜாபதியின்  27 மகள்களை மணந்து கொண்ட சந்திரன், ரோகிணி என்பவரை மட்டுமே பாசமாக நடத்தினார். மீதமுள்ள அரசிகளை அலட்சியமாக நடத்தினாராம்.  இதனால் கொதிப்புற்ற தக்ஷன் அளித்த சாபத்தால், சந்திரன் தனது ஒளியை இழந்து இருளடைந்தார்.  இதனால் உலகத்தின் சமநிலை பாதிக்கப்பட்டது. பிரம்மன் தந்த அறிவுரையின்படி, சோமநாத்தில் உள்ள புனித பிரபாஸ் குளத்தில் நீராடி, சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை நோக்கி கடும் தவமிருந்தார் சந்திரன்.
அவரது தவத்தையும், பக்தியையும் மெச்சிய சிவபெருமான் சாப விமோசனம் அளித்து, சந்திரனுக்கு பழையபடி மீண்டும் ஒளியளித்தார்.  
இத்தலத்தில் சிவலிங்கம் சூரியனைப் போன்று பிரகாசத்துடன் காணப்பட்டதாக  கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு சிவலிங்கத்தை வழிபட்டார் சந்திரன் என்பது மகாபாரதத்திலும் குறிப்பிடப்
பட்டுள்ளது.



பேரழிவுக்கு ஆளான கோயில்: அரபு நாட்டைச் சேர்ந்த ஆளுநர் ஜுனாயத்,  ஆப்கன் அரசர் கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி, ராசா கான், ஜுனாகாத் சுல்தான் முஸôபர் ஷா, முகமது பேடா, முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ஆகியோர் சோமநாதர் ஆலயத்தை  பலமுறை இடித்துத் தரைமட்டமாக்கினர். இதில் கஜினி முகமது, சோமநாதர் ஆலய சிவலிங்கத்தையே இடித்து, உடைத்து அங்கிருந்த ரத்தினம், தங்கம், வைரக் கற்களையும் கஜினி நகரில் உள்ள மசூதிக்கு கொண்டு சென்றார்.  இவ்வாறு பலமுறை சோமநாதர் ஆலயம் பேரழிவுக்கு ஆளானது.

மீண்டும் எழுப்பப்பட்ட ஆலயம்: பலமுறை அழிவுக்குள்ளானாலும், சோமநாதர் ஆலயம் மீண்டும், மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. செüராஷ்டிரத்தின் யாதவ குல அரசர், போஜராஜன், மகிபாலன், இந்தூர் அரசி அகல்யா பாய் ஹோல்கர், சத்ரபதி போன்ஸ்லே ஆகியோர் மீண்டும் கட்டினர். 

கடைசியாக இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல், மத்திய அமைச்சர் கே.எம்.முன்ஷி ஆகியோர் மக்களிடம் நிதி திரட்டி இக்கோயிலைக் கட்டினர். சாளுக்கிய கட்டடக் கலையின் அடிப்படையில் பிரமீடு வடிவத்தில் கோயில் அமைந்துள்ளது. கடந்த 1951-இல் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.
சோமநாதர் கோயிலின் அருகே "வல்லப் காட்' என  அழைக்கப்படும் சூரியன் அஸ்தமிக்கும் இடம், திரிவேணி சங்கமம், ராம் மந்திர், சூரஜ் மந்திர், வேரவால் கடற்கரை, காம்நாத் மகாதேவ் கோயில் போன்றவை உள்ளன.  இத்தலத்தில் மகா சிவராத்திரி, கார்த்திகை பெüர்ணமி போன்ற உற்சவங்கள் புகழ் வாய்ந்தவை.  

தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை.
போக்குவரத்து வசதி: சோமநாதர் ஆலயத்தில் இருந்து முக்கிய நகரங்களான ஜுனகாத் 82 கி.மீ. தூரத்திலும், போர்பந்தர் 120 கி.மீ. தூரத்திலும், ஆமதாபாத் 400 கி.மீ. தூரத்திலும் உள்ளன. சோமநாதர் கோயில் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளது.

தொடர்புக்கு: 09428214915.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com