

திருநெல்வேலி வீரராகவபுரத்தில் தொடங்கிய எழுச்சி, தூத்துக்குடி, சிவகாசி, தச்சநல்லூர், திருவனந்தபுரம் வரை எதிரொலிகளை ஏற்படுத்தியது. சிவகாசி ரிசர்வ் போலீஸார், தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர். எழுச்சியில் பங்குகொண்ட கடைக்காரர்கள் கடைகளையெல்லாம் அடைத்துவிட்டனர்.
கடைகள் மூடப்பட்டிருந்ததால், போலீஸாருக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு சில கடைக்காரர்கள், தாட்சண்யத்திற்காகக் கதவுகளைத் திறந்து, உணவு கொடுக்க ஒத்துக்கொண்டனர்.
சப்-மாஜிஸ்டிரேட் கடையில் அமர்ந்திருக்க, போலீஸாருக்கும் பிறருக்கும் உணவு வழங்கப்பட்டது. 1908-ஆம் ஆண்டின் குற்றவியல் மேல் முறையீடுகள் 481 மற்றும் 503 ஆகியவற்றின் தீர்ப்பாணைப் பதிவுகளில் இத்தகவல் கிட்டுகிறது.
அப்படியானால், பொருள்கள் சேதமுறவே இல்லையா என்றால், விடை வேறு. சேதமுற்றன. துணை முன்சீஃப் அவர்களின் வழக்கு மன்றம்கூடச் சேதப்பட்டது. ஆனால், இவற்றுக்குக் காரணம், எழுச்சியோடு வந்த கூட்டம் நடத்தப்பட்ட முறை.
ரிசர்வ் போலீஸ் மட்டுமல்லாமல், ப்யுனிடிவ் போலீஸூம் வரவழைக்கப்பட்டு, தண்டத் தீர்வைகளும், திமிர்த் தீர்வைகளும் வசூலிக்கப்பட்டன. தடியடிகளும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன. இவை மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டன.
அப்போதைய சி. ஐ. டி- பதிவுகள், நெல்லை எழுச்சியானது, 1908 மார்ச் 13-ஆம் நாள் தொடங்கி, அன்று மாலையே அடங்கி விட்டதாகத் தெரிவிக்கின்றன.
"சுதேசமித்திரன்' உள்ளிட்ட இதழ்களின் பதிவுகள், 14-ஆம் தேதியும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பதாகத் தெரிவிக்கின்றன. எப்படியாயினும், 16.03.1908 அன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனுப்பிய தந்தியில், bazaars open, no crowds anywhere என்னும் தகவல் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செயல்பாடுகள், எல்லை மீறித்தான் இருந்தன என்பதைப் பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை.
மார்ச் 13-ஆம் நாள் மாலை, தூத்துக்குடி வண்டிப்பேட்டையில் கூட்டம் ஒன்று கூடியுள்ளது. "கூட்டங்களுக்குத் தடை' என்னும் சட்டம் இருந்ததால், மாவட்டத் துணை ஆட்சியர் பொறுப்பிலிருந்த ஆஷும், சிவகாசி ரிசர்வ் போலீஸ் யூனிட்டாரும், கூட்டத்தைச் சுற்றி வியூகம் அமைத்துக் கொண்டு, உள்ளே புகுந்துள்ளனர். கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் ஒரேயொரு வழி மட்டுமே இருந்த நிலையில், கூட்டத்தில் பதற்றம் தோன்றியுள்ளது. பின்னால் நடக்கவிருந்த ஜாலியன் வாலா பாக் நிகழ்வுக்குக் கிட்டத்தட்ட முன்னோட்ட வெள்ளோட்டம் போன்ற நிலை.
பொருநையாளின் கருணையால், நல்லவேளை, அப்படியொரு விபரீதம் நிகழவில்லை. கூட்டம் எப்படியோ தெருவுக்குத் தப்பிச் சென்றது. ஒரு சிலர், அருகிலிருந்த வீடுகளுக்குள் சென்றிருக்க வேண்டும்; சிலர் மாடிகளுக்கு ஏறியிருக்க வேண்டும். 15 வெற்று வேட்டுகளும், 15 குண்டுகளுமாக, மொத்தம் முப்பது சுற்றுகள் துப்பாக்கிச் சூடு. எதிர்வினையாக, போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டன.
நீதித்துறையின் பதிவுகளில் (Proceedings of the Judicial Department, 1911) இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. "மக்கள் வீசிய கற்கள், உடைந்துவிடும் தன்மை கொண்டனவாக, நுரைத் தன்மை உலர்ந்தனவாக இருந்தன' (sea froth substance of dried mortar or cement).
"திருநெல்வேலி எழுச்சி' என்றே வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய இதனில், பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் எத்தனை பேர் என்று தெளிவாகத் தெரியவில்லையாயினும், 1917-இல், திருநெல்வேலி மாவட்டக் கையேட்டினைத் தொகுத்த ஹெச். ஆர். பேட் பதிவு செய்திருப்பதை, இத்தருணத்தில் காணவேண்டியிருக்கிறது.
"1908 ராஜ துரோகமும், கலகமும்' என்றே மேற்காட்டிய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பேட், சுதேசி விரிவுரையாளர்கள் சுதேசிப் பிரசாரம் என்னும் மறைப்பில் ராஜ துரோகத்தை உபதேசித்தனர் என்றும், இந்தக் காலகட்டத்தில் தன்னுடைய அருவருப்புத் தோற்றத்தை வெளிப்படுத்தியது ராஜ துரோகம் என்றும் எழுதியிருப்பது, வ. உ. சி. மற்றும் சிவாவைப் பற்றி எப்படிப்பட்ட கருத்துகளை அதிகார வர்க்கத்தினர் தூவ நினைத்தனர் என்பதற்கான எடுத்துக்காட்டு.
இரு பெருமக்களையும் "ரிங் லீடர்ஸ்' என்று குறிப்பிட்டு, தொடக்க நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, இன்னமும் ராஜ துரோகத்திற்கான ப்ராசீக்யுஷன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படா நிலையிலேயே கலகம் வெடித்தது என்றும் எழுதி, ஏதோ அன்றைய அந்த எழுச்சி தவறான ஒன்று என்பதாகக் காட்ட முயன்றிருப்பதை வாசித்தால், மனம் வலிக்கத்தான் செய்கிறது. பொருநையாள் அன்றே எவ்வளவு துடித்திருப்பாளோ!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய இடங்களில், தொடர்ந்து வந்த ஆறு மாதங்களுக்குக் கூடுதல் காவல் படைகளை நிற்க வைத்தது, ஒரு வகையான தண்டனை நடவடிக்கை என்றே பேட் கூறுகிறார்.
பின்னர் வந்த நீதித்துறை ஆவணங்களிலும், ரெளலட் அறிக்கையிலும், எழுச்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை குறைத்துக் கூறப்பட்டிருந்தாலும், பேட்டின் பதிவுகளில் நெல்லையில் 57 பேர் கைது செய்யப்பட்டுப் பெரும்பாலோர் சிறைத் தண்டனை பெற்றதாகவும், தூத்துக்குடியில் 36 பேர் கைது செய்யப்பட்டு 32 பேர் சிறைத் தண்டனை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுதேசிய எழுச்சியில் ஈடுபட்டு, வ. உ. சி-க்கும் பிற தேசியத் தலைவர்களுக்கும் உறுதுணையாக இருந்து, கைதாகிப் பின்னர் சிறைத் தண்டனையும் ஏற்ற இத்தகைய பெருமக்கள் பலரின் பெயர்கள், பிற்காலச் சந்ததியினருக்குத் தெரியவே தெரியாது.
ஒரு சிலரின் பெயர்களையாவது நினைவு கூரலாம்:
ஏட்டு குருநாத ஐயர் - முன்னதாகக் காவல் துறையில் ஏட்டாகப் (ஹெட்கான்ஸ்டபிள்) பணிபுரிந்தவர்; வேலையைத் துறந்துவிட்டு, சுதேசிக் கப்பல் கம்பெனியில் சரக்கு அலுவலர் பணியை ஏற்றவர்; 1906-ஆம் ஆண்டிலேயே சுதேசப் பணிகளில் இவர் ஈடுபட்டதால், பிரிட்டிஷ் அலுவலர்களின் சினத்திற்கு ஆளானார் என்பது, பாரதியாரின்"இந்தியா' இதழ்க் குறிப்பு 21.07.1906-இல் காணக்கிடைக்கிறது; நெல்லை எழுச்சியில் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு, ஏழாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
சங்கன் - நாவிதர் தொழிலில் ஈடுபட்டிருந்தவர் என்று தெரிகிறது; வ. உ. சி. அவர்கள் சிறையிலிருக்கையில் இவரும் இருந்தார் என்பதைத் தவிர, வேறு சங்கதிகள் தெரியவில்லை.
சங்கரநாராயண ஐயர் - கண்ணனூர்ச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், சிறையதிகாரிகளின் கொடுமைக்கு ஆளானார் என்று தெரிகிறது; இவருக்குத் தண்டனைக் குறைப்பு வாங்குவதற்கு வ. உ. சி. முயன்றதாகவும் தெரிகிறது.
லோகநாத ஐயர் - இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்த இவரால்தான், கல்லூரி மாணாக்கர்களும் இந்த எழுச்சியில்இணைந்திருக்கக்கூடும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்த சேஷய்யர், இவருடைய சகோதரர்; இருப்பினும், எழுச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, கோவைச் சிறையில் அதனைக் கழித்தார்.
நன்னடத்தைக் காரணமாக, ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே விடுதலை பெற்றார். 1912-இல் இவர் கோவைச் சிறையில் இருந்த காலத்தில், ஆஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நீலகண்ட பிரம்மசாரியும் அங்கு இருந்தார். இருவரும் நட்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இவர்கள் தவிர, ராமசுப்பன் செட்டி, பழநிப் பிள்ளை ஆகியோர் சேலம் சிறையிலும், கனக சபாபதிப் பிள்ளை, சாவடி சிதம்பரம் பிள்ளை, முத்து மூப்பன், நெல்லையப்பப் பிள்ளை, ஆழ்வாரப்பப் பிள்ளை, ஆண்டித் தேவன் ஆகியோர் கண்ணனூர்ச் சிறையிலும், முத்தையாத் தேவன் கோவைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர் என்னும் தகவல் கிடைக்கிறது. பிறர் என்னவாயினர் என்பதற்கான தகவல்கள் சரியாக இல்லை. ராஜமுந்திரி, பெல்லாரி, வேலூர் சிறைகளிலும் ஒரு சிலர் இருந்திருக்கக்கூடும்.
இவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே மேல்முறையீட்டில் தண்டனைக் குறைப்பு கிடைத்தது. எனினும், பலருக்குக் கிடைக்கவில்லை. பின்னர், 1908-ஆம் ஆண்டில் இந்தியக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ப்ரொக்ளமேஷன் ரெமிஷனும் சரி, 1910 -ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தர்பார் ரெமிஷனும் சரி, முதலில் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. காலந்தாழ்ந்து, பற்பல மனுக்களுக்கும் இறைஞ்சுதல்களுக்கும் பின்னரே கிடைத்தன.
எப்படியாயினும், வின்ச்சுக்கும், ஆஷுக்கும் நம்மவர் மீது ஏற்பட்ட சினம் அடங்கவில்லை.
இதற்கிடையில், ஏப்ரல் 26-ஆம் நாள், பாரதியார் நெல்லைக்கு வந்தார். ஏப்ரல் 27-ஆம் நாள், பாளையங்கோட்டைச் சிறையில் வ. உ. சி., சிவா மற்றும் குருநாத ஐயர் ஆகியோரைச் சந்தித்தார்.
வ. உ. சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாகவே திருநெல்வேலி எழுச்சி நிகழ்ந்தது என்பதை மறந்து விடலாகாது.
ராஜதுரோக வழக்கு விசாரணை பின்னர் நடைபெற்றது. வ. உ. சி -யும், சிவாவும் தண்டனை வழங்கப்பட்டனர். கோவைச் சிறையில் துன்பங்கள் பலவற்றை வ. உ. சி அனுபவித்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.