

நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திர பகவானாவார். பரமனுக்கு வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி பகவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நெற்றிக்கண் என்பது செவ்வாய் பகவான் என்று சூட்சுமமாக புரிந்துகொள்ளவேண்டும். நெற்றிக்கண்ணில் தெறித்த ஆறு பொறிகளினால் முருகப்பெருமானை படைத்தார் ஈசன். சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் ஒரு ஜாதகத்தில் இணைந்திருந்தால் "திரி நேத்ர யோகம்' என்று பெயர்.
சந்திர பகவான் தாய், தனு (உடல்) காரகர், மனோ (மனம்) காரகராவார். மனத்தில் எழும் எண்ணங்கள் / சிந்தனைகள் அனைத்திற்கும் சந்திரபகவான் காரணமாகிறார். "எண்ணங்கள் மேம்படுமேயானால் வாழ்க்கையும் மேம்படும்'.
சந்திர பகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டேகால் நாட்களை எடுத்துக் கொள்கிறார். 12 ராசிகளையும் (360 பாகைகள்) கடக்க இருபத்தி ஏழேகால் நாட்களை எடுத்துக் கொள்கிறார்.
ஜனன காலத்தில் சந்திர பகவான் நின்ற ராசிக்கு எட்டாவது இடம் "அஷ்டம ஸ்தானம்' எனப்படும். கோசார முறையில் சந்திர பகவான் மாதம் ஒருமுறை அஷ்டம ஸ்தானத்தில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரித்தே ஆக வேண்டும். இதைத்தான் "சந்திராஷ்டமம்' என்று கூறுகிறோம்.
இந்த சமயத்தில் எந்த ஒரு புதிய முயற்சியிலும் / சுப காரியத்திலும் ஈடுபடக்கூடாது. ஜாதகத்தில் சந்திர பகவான், குரு பகவானால் பார்க்கப்பட்டாலோ (அ) இணைந்திருந்தாலோ சந்திராஷ்டம தோஷத்தால் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகாது.
பரிகாரம்: பரீட்சை எழுதும் மாணவருக்கு அன்றைய தினத்தில் சந்திராஷ்டமம் உண்டானால், பரிகாரமாக பசும்பால் குடித்துவிட்டு சந்திர பகவானையும், பராசக்தியையும் வழிபட்டு விட்டுச் செல்லவேண்டும். பொதுவாக மற்றவர்களும் இதைப் பின்பற்றுவது சாலச் சிறந்ததாக அமையும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.