பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்!

மதுரை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும், மதுர மல்லியும், மல்லிகையைப் போன்ற இட்லியும் தான். 
பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்!

மதுரை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும், மதுர மல்லியும், மல்லிகையைப் போன்ற இட்லியும் தான். 

அவ்வூர் விழா என்றால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும், ஓர் ஏழைத்தாயின் துயர் துடைக்க தானே ஓர் கூலி ஆளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் விமரிசையான பாரம்பரிய திருவிழாவாகும். 

பரமனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது; எழையிடம் உள்ளதை, அவன் அன்போடு கொடுப்பதை பரமன் ஏற்பான் என்பதை விளக்கும் அந்த விழாவினைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்!

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் அரசவையில் அமைச்சர் பணி புரிந்து வந்த தென்னவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் அரசுக்குத் தேவையான குதிரைகளை வாங்கச் செல்லுங்கால், திருப்பெருந்துறை சிவபெருமானின் பேரன்பிற்குப் பணிந்து, மன்னன் பரி வாங்கக் கொடுத்தனுப்பிய பெரும் செல்வங்களைக் கொண்டு ஆலயங்கள் கட்டி, சிவப்பணியில் ஈடுபட்டு, மாணிக்கவாசகப் பெருமானாக அறியப்பட்டார். 

பின்னர் ஞாபகம் வந்து ஈசனிடம் வேண்டி தன் நிலைகுறித்து வருத்தமுற்றார். "கவலையை என்னிடம் விட்டு மதுரைக்குச் செல்; ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்தடையும் என மன்னனிடம் சொல்' என்று கூறி நரியை பரியாக்கி ஒரு திருவிளையாடலை முக்கண்ணன் நடத்தினார். 

அமைச்சர் சொல்படி குதிரை வராததால் சிறையில் அடைக்கப்பட்டார். பின் வைகை ஆற்றின் சுடுமணலில் அவரை நிற்க வைத்து சித்ரவதை செய்தான். ஈசன் பதறி பக்தனைக் காப்பாற்ற வைகையில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தினார். கரை உடைந்தது. மன்னன் திகைத்துபோய் வீட்டிற்கு ஓர் ஆள் கரையை அடைக்க வரவேண்டுமென தண்டோரா போடச் செய்தான். 

மதுரையம்பதியில் பிட்டு விற்றுப் பிழைக்கும் "வந்தி' என்ற பெயர் கொண்ட ஓர் அநாதை மூதாட்டி இதனைக் கேள்வியுற்று தனக்கு யாருமில்லையே நான் என் செய்வேன்... என்று வருந்தி ஆலவாய் அண்ணலை வேண்டி நின்றாள். 

தயாபரன் ஈசன் - ஓர் மண் வெட்டியுடன் கூலியாளாக அக்கிழவியின் கண்ணில் பட்டார். 

""ஏனப்பா! அரச ஆணையை மீறமுடியாது. அதனால் எனக்காக நீ சென்று வேலை செய்கிறாயா..? இங்குள்ள புட்டில் உதிரியானதை உனக்குக் கூலியாகத் தருகிறேன்'' என்று கூறி அதனைத் தந்தாள். 

பரமனும் ருசித்து உண்டு, பின் அவளுக்காக வைகை கரைக்கு தலையில் மண் சுமந்து கொண்டு, உடைப்பை அடைக்கச் சென்றான். 

சிறிது வேலை செய்துவிட்டு அப்படியே அந்தக் கரையில் பாவனையாக உறங்கி விட்டான். பாண்டிய மன்னன் வேலை நடப்பதை மேற்பார்வையிட நேரில் வந்தான். 

அங்கு இந்த கூலி தூங்குவதைப் பார்த்து தன் கையிலுள்ள பிரம்பினால் அவன் முதுகில் அடிக்கிறான். அப்படி அடித்த அந்த அடி, உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் முதுகிலும் பட்டு வலிக்க, சுந்தரேசுவரர் சுந்தர வடிவாய் தரிசனம் தந்து அருள்பாலித்தார். 

"பேறுபெற்ற வாழ்வு என்பது, நாமும் நாம் சுமப்பதும் பிறருக்கு உதவுவதாய் இருத்தலே ஆகும்' என்பதே இதன் தத்துவமாகும். 

இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிட்டுத் தோப்பு மைதானத்தில் ஆவணி மூலத்திருவிழாவின் போது பிட்டுத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முடிவில் படைக்கப்பட்ட பிட்டு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு 18.08.2021 -இல் இவ்விழா நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com