சமயபுரம் மாரியம்மன் - 36

"த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ - வபுஷா சிதாநந்தாகாரம் ஸிவயுவதி - பாவேந பிப்ருஷே' 
சமயபுரம் மாரியம்மன் - 36

"த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ - வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி - பாவேந பிப்ருஷே'

-செளந்தர்ய லஹரி

"சிவம் இருக்கும் இடத்தில் சக்தி இருக்கும்' என்கிறது மாண்டூக்ய உபநிஷத். அந்த இடமே பயம் இல்லாத இடம்.

மாயையில் சிக்கியுள்ள மனிதனை பிரம்மத்துடன் இணைக்க சக்தி வடிவம் எடுக்கிறாள். காளி, துர்க்கை, மகமாயி என்று. தீயசக்திகளை அழித்து, நல்லவர்களைக் காக்க அம்பிகை எடுத்த ஓர் அவதாரம் மாரியம்மன்.

"மகமாயி" என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சமயபுரம்தான். மாரியம்மன் வடிவங்களின் ஆதிபீடம் சமயபுரம்.

மனிதர்கள் தெய்வத்துக்கு பிரார்த்தனை செய்து விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு மகமாயி, தன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.

பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்கள், சீதோஷ்ண நிலைகளால் பக்தர்களுக்கு எந்தவித நோய்களும், தீவினைகளும், அணுகாமல் செளபாக்கியத்துடன் வாழ, அன்னை இந்த விரதம் இருக்கிறாள்.

இருபத்தி எட்டு நாள்கள் விரதம். அப்போது துள்ளு மாவு, நீர்மோர், கரும்புச்சாறு பானகம், இளநீர் போன்றவைதான் நிவேதனம். சமைத்த உணவுகள் எதுவும் வைக்க மாட்டார்கள். மாவிளக்கு கூட கிடையாது.

இத்தலம் புராண இதிகாச காலங்களில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என்று வரலாறு கூறுகிறது.

ஆதி மாரியம்மன் கோயில் விக்கிரமாதித்த மகாராஜாவால் வழிபடப்பட்டது. தற்போதைய கோயில் விஜயநகர மன்னர்களால் கட்டப் பட்டது.

வேப்பமரக் காட்டில் உருவான கோயில் என்பதால் தலவிருட்சமாக வேப்பமரமே திகழ்கிறது.

மாயாசுரனை அழிக்க...: திருக்கடையூரில் எமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டி, மார்க்கண்டேயர் ஈசனிடம் சரண் அடைந்தார். ஈசன் கால சம்ஹாரமூர்த்தியாக அவதாரம் எடுத்து எமனை அழித்தார். இதனால் உலகில் ஜனன, மரணக் குழப்பம் ஏற்பட்டது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

இதனால் கோபம் கொண்ட பார்வதி, தன் அம்சமாக மாரியம்மனை உருவாக்கி, மாயாசுரனை அழிக்க அனுப்பி வைத்தாள்.

அம்மன், மாயாசுரனையும், அவன் சகோதரர்களையும் அழித்து அவர்களின் தலைகளை ஒட்டியானமாக அணிந்து, ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் வைஷ்ணவி தேவியாக அமர்ந்தாள். அதன் பின்னரே சமயபுரத்தில் வந்து குடியமர்ந்தாள்.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுடன், கருணை வழியும் கண்களுடன் காட்சி அளிக்கிறாள் அம்மன். உக்ரரூபம் இல்லாமல் தன் குழந்தையைக் கனிவுடன் நோக்கும் அன்னையின் அன்பே கண்களில் தெரிகிறது.

தனது எட்டுக் கரங்களில் இடப்புறம் கபாலம், மணி, வில், பாசம் ஏந்தி, வலப்புறம் கத்தி, அம்பு மற்றும் உடுக்கை தாங்கி அமர்ந்திருக்கிறாள்.

இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மாயாசுரன் தலைமீது கால் வைத்து காட்சியளிக்கிறாள். அன்னையின் பெயர் "ஆயிரம் கண்ணுடையாள்'. குதிரை வாகனத்தில் கருப்பண்ணசாமி வலம் வந்து காவல் காக்கிறார்.

பூச்சொரிதல் விழா: அம்மனுக்கு பூச்சொரிதல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னொரு கதையும் சொல்கிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சியைக் கைப்பற்ற ஆங்கிலேய படைக்கும், பிரெஞ்சு படைக்கும் இடையே பெரிய போட்டி நிலவியது.

ஸ்ரீரங்கத்தில் முற்றுகையிட்டிருந்த அவர்களைத் தாக்குவதற்காக ஆங்கிலேயப் படை ஸ்ரீரங்கத்தை நோக்கி முன்னேறியது. ஆனால் கொள்ளிடத்தில் வெள்ளம் வரவே, ஆங்கிலேயப் படையினர், ஆளுநர் ராபர்ட் கிளைவ், தளபதிகள் ஜீன்ஜின், லாரன்ஸ் ஆகியோர் சமயபுரத்தில் தங்கினர்.

ராணுவ ஆயுதங்கள், வெடி மருந்துகளை ஒரு கொட்டகை அமைத்துப் பாதுகாத்தனர். அதனால் மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு இருந்தது.

ஒருநாள் நள்ளிரவில் பாதுகாப்புக்காக ஜீன்ஜின் கொட்டகையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் ஆடை அணிந்து, இரண்டு கைகளில் தீச்சட்டியுடன் ஒரு பெண் நடந்து சென்றாள். ""நில், நில்!'' என்று தளபதி கத்தினார்.

அவள் பொருட்படுத்தாமல் நடக்கவே, தன் கைத்துப்பாக்கியால் அவளை நோக்கிச் சுட்டார். ஆனால் துப்பாக்கித் தோட்டாக்கள் அனைத்தும் பூக்களாக மாறி அவள் மேல் விழுந்தன.

சப்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் ""நீங்கள் தவறு செய்து விட்டீர்களே! எங்கள் காவல் தெய்வம் மாரியம்மனைச் சுட்டு விட்டீர்களே!'' என்று கூச்சலிட்டனர்.

உடனே கோயிலுக்குள் ஓடி வந்து பார்த்தபோது, அங்கு அம்மன் சிலை இல்லை.

திடீரென ஒரு பேரொளி கருவறையில் நிறைந்தது. அம்மன் பீடத்தில் வந்து அமர்ந்தாள். ஆனால் ஜீன்ஜினுக்கு பார்வை பறிபோய் விட்டது. பின்னர் மனமுருகி அம்மனிடம் மன்னிப்பு கேட்க, மூன்று நாளில் கண்பார்வை திரும்பக் கிடைத்ததாம்.

அதிலிருந்து அம்மனுக்கு "பூச்சொரிதல் விழா' நடைபெறுகிறது.

அம்பிகை சுதை வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறாள். சுமார் ஏழடி உயரத்தில் இருக்கும் அம்மன் திருவுருவம் அரிய வகை மூலிகைகளின் சாறு கொண்டு, மந்திரங்கள் ஜெபித்து உருவாக்கப்பட்டது. சுதைச் சிற்பம் என்பதால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவ அம்மனுக்கே அபிஷேகங்கள் நடைபெறும்.

பங்குனி மாதத்தில் அம்மனை வழிபடுவது சிறப்பானது. இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். பூச்சொரிதலின் போது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக் கோயிலிலிருந்து மேளதாளத்துடன், யானைமேல் வைத்து புஷ்பக் கூடைகள் கொண்டு வரப்படும். சகோதரரின் புஷ்பங்களைச் சமர்ப்பித்த பிறகுதான் மற்ற பக்தர்களின் புஷ்பங்கள் சொரியப்படுகின்றன. கூடை, கூடையாக அன்று பூக்கள் வந்த வண்ணம் இருக்கும்.

இவள் சந்நிதியில் "அம்மா' என்று உருகி நின்றால், நாம் சொல்லாமலேயே நம் குறைகளை எல்லாம் தீர்த்து மங்கள வாழ்வு அருள்வாள் மகமாயி. அமைவிடம்: திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலம் தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோயிலாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com