சுந்தரருடன் திருவிளையாடல் புளியமரத்தில் மறைந்த சிவன்! 

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ள மாட்டார்.
சுந்தரருடன் திருவிளையாடல் புளியமரத்தில் மறைந்த சிவன்! 
Published on
Updated on
2 min read


பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ள மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்.

ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டி வந்தது. வாயு பகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாகக் காற்றை வீசச் செய்தார். ஆதிசேஷன் மந்திர மலையை இறுகச் சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், இறைவன் "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. இறைவி மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் அருள்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை, காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.

ஈ வடிவம் பெற்ற அகத்தியப் பெருமான்: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். "மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் வணங்கலாம்!' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின்னர் இம்மலை மீது பறந்து வந்து, சந்நிதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். மீண்டும் தன் பழைய வடிவம் பெற்றுத் திரும்பினார் என்பது தலவரலாறு. அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "திருஈங்கோய்நாதர்' என்றும் பெயர் வழங்கலாயிற்று.

புளியமரத்தில் மறைந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்!' என சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார்.

இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் "புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது!' என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரையில் அமைந்த 63-ஆவது தலம்.

சிறப்பம்சம்: மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாள்கள் சுவாமி மீது சூரியஒளிக் கதிர்கள் விழுகின்றன. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறிக் காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் "ஈங்கோய் எழுபது' என்ற பாமாலையை அருளியிருக்கிறார். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பௌர்ணமிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் குரு தட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை இங்கு காணலாம்.

திருமணத்தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். கோயில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்: திருச்சியில் இருந்து 47 கி.மீ. தொலைவில் திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் திருஈங்கோய்மலை திருத்தலம் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 04326-262744, 9443950031.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com