கட்டுக் கடங்காது ககனத்தில்... 

கட்டுக் கடங்காது ககனத்தில் உள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் மொத்தமாய் கூடி தத்தம்  கடமைகளைத் தானே சரிவரச் செய்து முடிக்க முண்டியடித்து முந்திச் செல்லும்,

கட்டுக் கடங்காது ககனத்தில் உள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் மொத்தமாய் கூடி தத்தம்  கடமைகளைத் தானே சரிவரச் செய்து முடிக்க முண்டியடித்து முந்திச் செல்லும், அந்தி பகல் பாராது அலைமோதும் ஹஜ்ஜில் திரளாத கரோனா காலத்திலும் மருளாது மக்கள் மக்காவில் கூடி கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவது நிதர்சனமான உண்மை. உலகம் வியக்கிறது.

லட்சக் கணக்கில் கூடும் மக்களை ஆயிரக் கணக்கில் அடக்கி வைத்து முடக்கம் இன்றித்  தடுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து, திரளாது ஆனால்  தளறாது, மருளாது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி,  களைந்து செல்லும் முயற்சியில் சென்ற 2020 -ஆம் ஆண்டில் பெற்ற வெற்றியின் அனுபவ  அடிப்படையில் இவ்வாண்டும் (2021-இல்)  கட்டுப்பாடுகளுடன் ஹஜ் நடைபெறு
கிறது.

துல்ஹஜ் மாதம் 12.07.2021-இல்  பிறக்கிறது. மக்காவிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவிலுள்ள மினாவிற்கு பிறை எட்டில் செல்ல வேண்டும். மினாவிலிருந்து பிறை ஒன்பதாம் நாள் காலையில் 22  கி.மீ. தொலைவில் உள்ள அரபாவில் அந்திவரை வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். பின் முஸ்தலிபா சென்று வைகறை தொழுகை வரை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு சாத்தானுக்குக் கல்லெறிய கல்லைப் பொறுக்கி  எடுத்து மினாவிற்குத் திரும்ப வேண்டும்.
மினாவில் கல் எறிந்து, குர்பானி கொடுத்து, மொட்டை அடித்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பிறை 12-இல் மக்கா திரும்பி தவாப், ஸயீ சுற்றி ஹஜ்ஜை  நிறைவு செய்ய வேண்டும்.  ஒரு மாதத்திலிருந்து அதற்கு மேலும் முன்னர் மக்கா, மதீனாவில் தங்கியது போல் தங்காமல் ஹஜ் முடிந்ததும் ஊர் திரும்ப வேண்டும். 

 ஹஜ் செய்வோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி  நாசினியால் கைகளைக் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளின் கட்டுப்பாட்டால் ஹஜ் வெற்றி பெறுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை நாமும் தளர்வின்றி தவறாது முறையாகக் கடைப்பிடித்தால்  கரோனா காணாமல் போகும். நாம் மீண்டு எழலாம். தூண்டுதல் இன்றித்  தொடரலாம் பணியை..! துயர் களையலாம். 
உயர்வுறலாம்..!

-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com