சுவடியில் எழுதிய சுந்தரன்!

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். சைவ சமயம் போற்றும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாந் திருமுறையாகத் திகழ்வன திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை என்பன. 
சுவடியில் எழுதிய சுந்தரன்!
சுவடியில் எழுதிய சுந்தரன்!


கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். சைவ சமயம் போற்றும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாந் திருமுறையாகத் திகழ்வன திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை என்பன. 

ஓதுவார், கேட்பார் அனைவருள்ளத்தையும் உருக்கவல்ல, தேன் சொட்டும் இச்செழும் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்செல்வர், சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவராய் போற்றப்படும் திருவாதவூரடிகளார் என்கின்ற மாணிக்கவாசகர். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்ற வாக்கிற்கு ஏற்ப திருவாசகத் தேனை நாம் பருகுவதற்கு இறைவன் புரிந்த திருவிளையாடலின் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

இறைவனின் ஆணைப்படி திருப்பெருந்துறையில் தலைசிறந்த ஓர் ஆலயத்தைக் கட்டி முடித்தவுடன், மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டை விட்டுக் கிளம்பி குரு உபதேசித்த மந்திரத்தை முதற்சொல்லாகக் கொண்ட சிவ புராணத்தையும், பல அருட் பாடல்களையும் பாடிய வண்ணம் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று அங்கு உறையும் இறைவனை வழிபட்டு இறுதியில் தில்லையம்பதியை (சிதம்பரம்) வந்தடைந்தார்.

எல்லையற்ற சிவானந்த சுகத்தில் திளைத்திருந்த அவர் முன் ஒரு நாள் தில்லை அம்பலவாணர் ஓர் அந்தணர் வடிவங்கொண்டு தோன்றி அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் மீண்டும், பாடும்படிக் கேட்டுக்கொண்டு ஓலையில் எழுதிக்கொண்டார். 

பின்னர் "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று கேட்டு அதனையும் பட்டோலையில் எழுதிக்கொண்டார். ஓலையின் இறுதியில் "மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" என்று கைச்சாத்திட்டு சிதம்பரம் ஆலயத்தில் நடராஜர் முன் உள்ள கனகசபையின் பஞ்சாக்கரப்படியில் வைத்து மறைந்தருளினார். 

மறுநாள் பூஜைக்குச் சென்ற தீட்சிதர்கள், அங்கிருந்த ஓலைச் சுவடிகளைக் கண்டு அதிசயத்து, அதனை மாணிக்கவாசகரிடம் எடுத்துச் சென்று, படித்துப் பொருள் கூறுமாறு வேண்டினர். உடனே மாணிக்கவாசகர் நடராஜர் சந்நிதிக்கு முன் நின்று, "இவற்றிற்குப் பொருள், இவ்வானந்தக் கூத்தனேயாவன்!" என்று கூறிய அளவில், அங்கு தோன்றிய ஜோதியுள்ளே அனைவரும் கண்டு வியக்கும்படியாக இரண்டறக் கலந்தார். அனைவரும் சிந்தையில் சிவமாகி நின்ற மாணிக்கவாசகரைப் போற்றினர்.

பொதுவாக சிவாலயங்களில் இவர் தேவார மூவருடன் காணப்படுவார். (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற வரிசையில்)  இருப்பினும் இவர் வரலாற்றுடன் தொடர்புடைய சில பிரத்யோக ஆலயங்கள் உள்ளதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்விடங்களில் அவருக்கு சிறப்பு சந்நிதிகள் அல்லது சிறுகோயிலோ அமைந்துள்ளது சிறப்பாகும்.

1. திருவாதவூர் - மாணிக்கவாசகரின் அவதார இல்லமே, கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
2. திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) - இறைவனே திருவடி தீட்சை அளித்த இடம். 
3. மதுரை - ஆலவாய் அண்ணல் ஆலயம்.
4. உத்திர கோசமங்கை - பெருமான் அவருக்கு அநேக சித்திகளை அளித்த     இடம்.
5. திருவிடை மருதூர் - ஆத்மநாதர் ஆலயம்.
6. திருக்கழுக்குன்றம் - ஆத்மநாதர் சந்நிதி
7. திருவெண்காடு - நிருதி முலையில் யோக வடிவில் சந்நிதி. 
8.திருவண்ணாமலை - கிரிவலப்பாதையில் வருண லிங்கம் அருகில் தனிக்கோயில் (இத்தலத்தில்தான்  திருவெம்பாவை பாடினார்). 
9. சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் இக் கோயிலின் வடதிசையில் உள்ள ஆத்மநாதர் ஆலயம்.
10. சின்னமனூர் (தேனி அருகில்) - தனிக்கோயில். இதைத்தவிர மாணிக்கவாசகர் பெயரில் மடங்களும் பல இடங்களில் உள்ளன. 

(இவரது குருபூஜை ஆனி 29 (மகம் நட்சத்திரம்) - ஜூலை 13-ஆம் நாளன்று அமைகிறது)

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com