என் மகன் வெளிநாட்டில் நான்கு வருடங்கள் வேலை பார்த்து விட்டுத் தாயகம் திரும்பி விட்டார். அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்குரிய வாய்ப்பு மயிரிழையில் தவறிவிட்டது. மறுபடியும் எப்பொழுது வெளிநாடு செல்வார்? அல்லது இங்கேயே நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்..? ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது..?
- வாசகர், சென்னை.
உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
ஒன்பதாம் வீட்டைக் கொண்டு முன்னோர், ஆசான், தெய்வம், பாக்கியம், தானதர்மம் ஆகியவற்றை அறியலாம். திரிகோண ஸ்தானங்களின் சிகரமாய் (உச்ச திரிகோணம்) கருதப்படுவதால் தந்தையின் நிலை, அயல் நாட்டுப் பிரயாணம் ஆகியவை பற்றியும் அறியலாம்.
பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கும் யோகத்தையும் குறிக்கும் வீடாகும். உயிர் ஸ்தானாதிபதியான (லக்னம்) குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தீர்க்காயுள் உண்டு.
"ஓடினவனுக்கு ஒன்பதில் குரு" என்பது ஜோதிட வழக்கு. அஷ்டமாதிபதியான சந்திர பகவான் ஒன்பதாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) குரு பகவானுடன் இணைந்து குரு சந்திர யோகத்தைக் கொடுக்கிறார். இந்த குரு சந்திர யோகத்தால் வாழ்க்கையில் ஆசைகள் பூர்த்தியாகும். தன்னிறைவு உண்டாகும். உயர் பதவியில் இருப்போரின் நட்பு கிடைக்கும்.
வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்கள் இறுதி வரை தடையின்றி கிடைக்கும். குரு, சந்திர பகவான்கள் இணைந்து ஏற்படும் குரு சந்திர யோகம் கஜகேசரி யோகத்தைப் போல் பலனளிக்கும்.
குரு பகவான் ஐந்தாம் பார்வையாக தன் மூலத்திரிகோண வீடான தனுசு ராசியையும், லக்னத்தையும் அங்கமர்ந்திருக்கும் சர்ப்பக் கிரகமான ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
குரு பகவானின் ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
குரு மங்கள யோகத்தால் உடலாரோக்கியம் சிறப்பாகும். இளைய உடன்பிறப்புகளுக்கு நன்மையும், புத்திரர்களுக்கு வளர்ச்சியும், ஸ்திர சொத்துக்களால் தொடர் வருவாயும், வீர விளையாட்டுகளில் வெற்றியும், உத்தியோகத்தில் மேன்மையும், பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும்.
குருபகவானின் ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும், அங்கு உச்ச வர்கோத்தமத்தில் (பரமோச்சம்) இருக்கும் சூரிய (சிவராஜ யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
சிவராஜ யோகத்தால் அரசாங்க ஆதரவு, அரசு வழியில் பாராட்டு, கௌரவம், குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், குழந்தைகளால் பெருமை ஆகியவைகள் உண்டாகும்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதயம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
செவ்வாய் பகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் குரு, சந்திர (சந்திர மங்கள யோகம்) பகவான் களின் மீதும் படிகிறது.
சந்திர மங்கள யோகத்தால் தாயின் அன்பு, பாசம், வாக்கு சாதுர்யம், ஆரோக்கியமான உடலமைப்பு, அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகை ஆகியவை உண்டாகும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் இரண்டாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். தனாதிபதி தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பான தன யோகமாகும்.
ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில், சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
லக்ன கேந்திரத்தில் சுக்கிர பகவான் உச்சம் பெற்றிருப்பதால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகமும் உண்டாகிறது.
நான்காம் வீட்டில் சுக்கிர பகவான் பலம் பெற்றிருப்பதால் வீடு, வாகனம் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் பாத்திரமாகவும் முடியும்.
அனுசரித்துச் செல்லும் மனைவி அமைவார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில், சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
நீச்சம் பெற்ற புத பகவானுடன் உச்சம் பெற்ற சுக்கிர பகவான் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகும். இதனால் உத்தியோகத்திற்குச் செல்லும் மனைவி அமைவார். திருமணத்திற்குப் பின் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.
லக்னத்தில் ராகு பகவான் கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
களத்திர நட்பு ஸ்தானத்தில் கேது பகவான் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
வெளி நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கு 4, 9 மற்றும் 12-ஆம் வீடுகள் பலம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஒன்பதாம் வீட்டின் பலம் அத்தியாவசியமானது. அதோடு லக்னம், ஏழாம் வீட்டில் வலுவான கிரகங்கள் இருக்க வேண்டும். சர்ப்பக் கிரகங்கள் இருந்தால் நிச்சயம் வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.
அவருக்கு தற்சமயம் சந்திர பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும். 2024-ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கும் உரிமையையும் பெற்று விடுவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபட்டு வரவும்.