பக்ரீத் பகரும் பாடம்!

ஆண்டு தோறும் வழக்கமாய் கொண்டாடும் திருநாள்களில் அடங்கியுள்ள வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, அவைகளின் ஆழமான உண்மைகளை உணர்ந்து, நன்மைகளைத் தொடர்ந்து
பக்ரீத் பகரும் பாடம்!


ஆண்டு தோறும் வழக்கமாய் கொண்டாடும் திருநாள்களில் அடங்கியுள்ள வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, அவைகளின் ஆழமான உண்மைகளை உணர்ந்து, நன்மைகளைத் தொடர்ந்து செய்ய உறுதி பூணுவது, வாழ்வின் இறுதிவரை அவ்வுறுதியை நிறைவேற்றுவதே இத்திருநாள்களைத் திரும்பத் திரும்பக் கொண்டாடுவதின் நோக்கம்.
அப்படித்தான் பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாளும் கொண்டாடப்படுகிறது. மசூதிகளில் கூடி தொழுது, மூத்தோர்களிடம் இளையவர்கள் ஆசி பெறுவதும் அடங்கும். அதன் மூலம் பெரியவர்களை மதிக்கும் பண்பு வளருகிறது. ஒருவரையொருவர் வாழ்த்துவதால் சமூக ஒற்றுமை பெருகி வேற்றுமை வேறுபாடு மறைகிறது. இச்சமூக ஒற்றுமை நாட்டு ஒற்றுமைக்கு வித்திடுகிறது.
இப்பெருநாளில் கொடுக்கப்படும் குர்பானியின் வரலாறு, பிள்ளைப் பேறற்ற இப்ராஹீம் நபி இறைவனிடம் மகப்பேற்றை இறைஞ்சிய பொழுது அம்மகனை வளர்த்து இறைவனுக்கே பலியிடுவதாகக் கூறினார்கள். மகன் இஸ்மாயில் நபி பருவ வயதை எட்டியதும் ஏக இறைவன் இப்ராஹீம் நபி அவர்களின் கூற்றை 
நினைவுறுத்தினான். 
மகன் இஸ்மாயில் நபியை இறைவனுக்குப் பலியிட இப்ராஹீம் நபி அழைத்துச் சென்ற பொழுது இடையில் குறிக்கிட்ட சாத்தான் இப்பலியைத் தடுத்து இரு நபிமார்களையும் இறைவன் தண்டனைக்கு ஆளாக்க முயன்றான். 
இப்ராஹீம் நபி கெட்ட சாத்தானைக் கல்லெறிந்து விரட்டினார்கள். அதுபோல் நாமும் நம் வாழ்வில் ஏற்படும் சாத்தானிய, தீய எண்ணங்களைத் தீய்த்து, மாய்த்து நற்செயல்களை நழுவாது, வழுவாது செய்ய
வேண்டும்.
இப்ராஹீம் நபி இளமை ததும்பும் இனிய மகனை இறைவனுக்குப் பலியிட முயன்ற பொழுது, அங்கு ஓர் ஆடு தோன்றியது. ஆட்டை அறுத்து பலியிட்டார்கள். அந்த நிகழ்வை ஒட்டியதே இன்றைய பக்ரீத் பெருநாளில் கொடுக்கப்படும் குர்பானி. இதனை இறை மறை குர்ஆனின் 22:37 -ஆவது வசனம் "குர்பானி மாமிசமோ ரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. குர்பானி கொடுப்பவரின் தூய பய பக்தியே அல்லாஹ்வை அடைகிறது' என்று கூறுகிறது.
ஒருவர் தேவைக்கு அதிகமாக 612 கிராம் வெள்ளியோ அல்லது 87 கிராம் தங்கமோ வைத்திருந்தால் அவருக்குக் குர்பானி கடமை. அந்த அளவு பொருள் இல்லாதவருக்குக் குர்பானி கடமை அல்ல. 
குர்பானி கறியின் மூன்றில் ஒரு பகுதி கட்டாயமாக ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டும். மீதமுள்ளதே குர்பானி கொடுப்பவருக்கு.  முழு கறியையும் ஏழைகளுக்குக் கொடுப்பது ஏற்றமானது. எண்ணற்ற நன்மைகளை ஈட்டித்தருவது.
பக்ரீத் பெருநாளில் அடங்கியுள்ள பெரியோரைப் பேணல், உறவை உறுதிப்படுத்துதல், சுற்றம் தழுவல், ஏழைகளுக்கு உதவுதல், தீயதைத் தவிர்த்து நல்லதை நாடி நற்செயல் புரிதல், சமூக ஒற்றுமை, தேச ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்று நாளும் கடைப்பிடிப்போம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com