நீதியை நாடும் ஆன்மாவின் தாகம்

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவிற்கு கேடு விளைவித்தால் வரும் பயனென்ன? ஒருவன், தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?' என்கிறார் இறைமகன் இயேசு (மத்.16:26). 
நீதியை நாடும் ஆன்மாவின் தாகம்

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவிற்கு கேடு விளைவித்தால் வரும் பயனென்ன? ஒருவன், தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?' என்கிறார் இறைமகன் இயேசு (மத்.16:26). 

அவரது இந்த அருள்மொழியில் உலகத்தைத் தனதாக்கிக் கொள்தல் என்பது இவ்வுலக வாழ்வில் பொருள் சார்ந்த ஈட்டலையே சுட்டுகிறது. ஆனால் ஆன்மாவைக் காத்துக் கொள்தல் மானுட வாழ்வு சார்ந்த ஒன்றல்ல; மறுவுலகுக்கான தேடலேயன்றி வேறல்ல என்பதும் புலப்படுகிறது.

இடைவிடாத இறைவேண்டல், நாவடக்கும் தவம், உடல் வருத்தும் நோன்பு இவை வழி மட்டுமே ஒரு மனிதன் தன் ஆன்மாவை காத்துக்கொள்ள இயலுமா? 

இயேசு ஒருமுறை... தங்களை நீதிமான்கள் என நிச்சயித்துக்கொண்டு பிறரை நிராகரிக்கும் சிலரை நோக்கி ஓர் உதாரணத்தை உரைத்தார். 

இருவர் ஜெபிக்க ஆலயம் வந்தனர். ஒருவன் பரிசேயன், அடுத்தவன் ஆயக்காரன். பரிசேயன், ""கடவுளே! கள்வர், அநீதர், விபசாரர் அல்லது இந்த ஆயக்காரன் போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பு இருந்து, வருவாயில் பத்திலொரு பகுதியை காணிக்கை தருகிறேன்!'' என தனக்குள்ளே பேசி மன்றாடினான்.

ஆதாயம் தேடி வாழ்ந்த ஆயக்காரனோ தொலைவிலேயே நின்று ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கவும் அஞசி, ""இறைவா! பாவி என் மேல் இரக்கமாயிரும்!'' என்றுரைத்து மார்பில் அறைந்தபடி மன்றாடினான். 

"இருவரில் இறைவனுக்கு ஏற்புடையவனாய் இல்லம் மீண்டவன் பரிசேயன் அல்லன், ஆயக்காரனே!' என்றார் இயேசு (லூக்.18:9-14) ஆம்! தன் தவறினை தயங்காது ஒப்புக்கொள்கிறவன் முதல் வகை நீதிமான்.

அதைப்போலவே வலுவுள்ளோர் முன்னிலையில் நியாயம் மறுக்கப்பட்டோருக்காக வாதிடுவோரே நீதியை நிலைநாட்டும் வேட்கையுடையோர். "இத்தகையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்' என்கிறார் தேவமைந்தன். இவ்வகையோரே இரண்டாம் வகை நீதிமான்கள். இவர்கள் இன்னலை ஏந்தும் இறைவனின் பிள்ளைகள்.

எனவேதான் "நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது' என்றார் இயேசு (மத்.5:10).  

மனிதன் வடித்து வைக்கும் சட்டத்தின் நீட்சியல்ல நீதி. ஏனெனில் சட்டம் வளைக்கத் தக்கது. ஆம்! சட்டம் என்பது காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம், தேசத்திற்கு தேசம் மாறுபடக்கூடியது. ஆனால் நீதி மட்டுமே நித்தியமானது. அது வளைக்க இயலாதது. சட்டம் மனிதனின் சரீரத்தை காக்கிறது. நீதியே ஆன்மாவை ஆள்கிறது. 

எனவேதான் "ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்' என்றார் இயேசு. அநீதியான யூதர்களின் சட்டங்களைச் சாடினார். ஆன்மாவிற்கு உகந்த அருள் மொழி பகர்ந்தார். அவரும் அவ்வழியே நின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com