அகத்தியரே! நான் இங்கிருக்கிறேன்!

தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலைக்குச் சென்றதால் பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது. அதை ஈடு செய்ய ஈசன் அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார்.
அகத்தியரே! நான் இங்கிருக்கிறேன்!


தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலைக்குச் சென்றதால் பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது. அதை ஈடு செய்ய ஈசன் அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார்.

அப்பொழுது அகத்தியர் ""நான் நினைக்கின்ற பொழுதெல்லாம் ஈசனின் திருமணக்கோலத்தைக் காண வேண்டும்!'' என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார். அகத்தியர் செல்லும் வழிகளில், கோயில் இல்லாத இடங்களில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து கொண்டே வந்தார். தென் திசையில் மொத்தம் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென்பது அவரின் விருப்பமாக இருந்தது.

அவ்வாறு வரும் வழியில் ஓரிடத்தில், துளசிச் செடிகள் நிறைந்த வனம் காணப்பட்டது. அங்கு கோயில் ஏதும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கும் கோயில் காணப்படவில்லை.

அப்போது, ""அகத்தியரே! என்னைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகளுக்கிடையே இருக்கிறேன்!'' என்று அசரீரி ஒலித்தது. ஒலி வந்த வடதிசையை நோக்கிச் சென்றார்.

அங்கே சுயம்பு லிங்கமாக சிவபெருமான் காட்சி தந்தார். ஆனால், அருகிலே குளம் எதுவும் இல்லாததால் அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கினார். தடாகத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

வேறு மலர்களோ, இலைகளோ கிடைக்காததால் துளசி மாலையையே இறைவனுக்குச் சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை செய்தார். சற்று உயரமாய் இருந்த ஈசன், தலையைச் சற்று சாய்த்து அவரது பூஜையை ஏற்றார். சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் உருவில் அவருக்கு காட்சி அளித்தார்.

துளசி வனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வழிபடும் வகையில் நிரந்தரமாய் இங்கு நிலைகொள்ள வேண்டுமென ஈசனை வேண்டி அவருக்கு "துளசீஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டினார்.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 சிவலிங்கங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றும் ஈஸ்வரனை துளசியால் அர்ச்சித்து, துளசியையும், துளசி தீர்த்தத்தையும் பெருமாள் கோயில்களில் கொடுப்பதைப் போன்றே இங்கும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இந்தப் பிரசாதம் ஜுரம், இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளையும் நீக்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

நந்தியை அடுத்து கருவறையில் கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியராக இறைவன் எழுந்தருளியுள்ளார். துளசியை விரும்பி ஏற்றுக் கொண்ட இறைவன் துளசீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அருகிலேயே தெற்கு நோக்கி அம்பாள் ஆனந்தவல்லி என்கிற வில்வநாயகி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.

மகா சிவராத்திரி அன்று இரவு நான்கு கால பூஜை, அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறுகிறது. மூன்றாம் காலபூஜையின் போது மகா விஷ்ணு வழிபாடு செய்வதாக ஐதீகம். அவ்வமயம் சிவபெருமானுக்கு இதரமாலைகளுடன் துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது. துளசியில் அர்ச்சனையும் செய்யப்படும்.

அமைவிடம்: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோயிலிலிருந்து ஒரகடம் வழியாக வல்லக்கோட்டை செல்லும் சாலையில் திருக்கச்சூரை அடுத்து 6 கி.மீ. தூரத்தில் கொளத்தூர் கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 9444022133 / 9940206679.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com