சுகமான வாழ்வருளும் சுகர்!

"சுகர்' என்று இங்கு குறிப்பிடப்படுபவர் "சுகப்பிரம்ம மகரிஷி' ஆவார். வியாச மகரிஷிக்கும், கந்தர்வ கன்னிகைக்கும் புதல்வராக அவதரித்தார் சுகர்.
சுகமான வாழ்வருளும் சுகர்!

"சுகர்' என்று இங்கு குறிப்பிடப்படுபவர் "சுகப்பிரம்ம மகரிஷி' ஆவார். வியாச மகரிஷிக்கும், கந்தர்வ கன்னிகைக்கும் புதல்வராக அவதரித்தார் சுகர். அவர் இந்த உலகில் முதன் முதலில் தோன்றியதே 12 வயது பாலகனாகத்தான் என்று கூறப்படுகிறது. தாயைப் போலவே கிளி (சுக) முகம் கொண்டவராக விளங்கியதால் "சுகர்' என அழைக்கப்பட்டார்.

மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப்பெருமான் எழுதியவுடன், வியாசர் தன் மகன் சுகரை அழைத்து முழு மகாபாரதத்தையும் கற்றுக் கொடுத்தார். வியாசரின் போதனைகள் அவருக்கு வைராக்கியத்தை அளித்தது. இளம் வயதிலேயே அனைத்தும் உணர்ந்த ஞானியாக விளங்கினார். பிரம்மச்சாரியான சுகர் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் தேசாந்திரம் சென்றபடி இருப்பார். அது அவரது இயல்பு. 

ஒருமுறை வியாசர் அவரைத் தேடி வந்தார். "புத்ரா, புத்ரா' என்று அழைத்தவாறு வனத்தில் நடந்து செல்கையில் அங்கிருந்த மிருகங்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் "இதோ நான் இருக்கிறேன்!' என்று பதில் அளித்ததாம். அப்பேர்பட்ட எங்கும் வியாபித்துள்ள பிரம்மஞானி "சுகர்' ஆவார். பாரபட்சமற்ற மனப்பான்மை உடையவர்.

முனிவர் ஒருவரது சாபத்தினால் "பரீக்ஷித் மகாராஜாவுக்கு (அபிமன்யுவின் மகன்) பாம்பினால் ஏழு நாள்களில் மரணம் சம்பவிக்கும்' என்ற நிலை ஏற்பட்டபோது சுகர், தானே வலியச் சென்று பார்த்து ஸ்ரீமத் பாகவத புராணம் முழுவதையும் அந்த ஏழுநாள்களுக்குள் பிரசங்கம் செய்து, பரீக்ஷித் மகாராஜா நற்கதி அடையும்படி செய்தார். அதன் மூலம் நமக்கும் பாகவத புராணம் கிடைத்தது.

அதன்படியே இன்றும் உபன்யாசகர்கள் "ஸப்தாஹம்' - அதாவது ஏழு நாள்களில் பாகவதம் பிரவசனம் - செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பர்.

ஸ்ரீநிவாசன், பத்மாவதி தெய்வீகத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர் சுகப்பிரம்ம ரிஷி. மேலும் குபேரனிடம் கல்யாணத்திற்காக கடன் வாங்க ஸ்ரீநிவாசனுக்கு ஜாமீன் கொடுத்தாராம். திருப்பதியில் இவர் வாசம் செய்ததாகக் கூறப்படுவதற்கு இணங்க, "திருச்சுகனூர்' என்று அழைக்கப்பட்ட இடமே தற்போது மருவி "திருச்சானூர்' ஆனதாகக்  கூறப்படுகிறது.

தமிழகத்தில் சேலத்தில் உள்ள சிவன் கோயில் மூலவர் இவரால் வழிபடப்பட்டவர். அதனால் அந்த இறைவனின் திருநாமம் சுகவனேஸ்வரர் ஆனது. 

இக்கோயிலில் சுகப்பிரம்ம ரிஷிக்கு தனி சந்நிதி உண்டு. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் தெத்திகிரிப்பட்டி கிராமத்தில் உள்ள அபய ஆஞ்சநேயர் ஆலயத்திலும் சுகருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.  

சென்னை தியாகராய நகரில் சுகப்பிரம்ம மகரிஷி ஆசிரமமும், அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் தனி சந்நிதியும் உள்ளது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அருகில் பில்லாலி தொட்டி என்ற கிராமத்தில் சுகருக்கு அருட்பீடம் உள்ளது. இங்கு பிரதான மூர்த்தியாக தனது சீடர் மார்க்கண்டேயருடன் சுகர் காட்சியளிக்கின்றார். 

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற வேண்டி இக்கோயிலுக்கு வருகை புரிகிறார்கள். பலன் அடைகிறார்கள்.

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அவதரித்தது ஓர் ஆனி மாதம், திருவோணம் நட்சத்திர தினமாகும். அந்த நாளில் அவரது ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு ஜூன் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆனி, திருவோணம் அமைகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com