நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பார்த்த நவாப்... பசி தீர்த்த பெருமாள்!

விஜயநகர மன்னர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சிறு, குறு மன்னர்களின் வளர்ச்சி தலை தூக்கத் தொடங்கியது.

News image
Updated On :25 ஜூன் 2021, 10:50 am

இரா. இரகுநாதன்


விஜயநகர மன்னர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சிறு, குறு மன்னர்களின் வளர்ச்சி தலை தூக்கத் தொடங்கியது. தமிழகத்தில் வட ஆற்காடு மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நவாப்புகள் தங்களது எல்லைகளை விரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, சென்னை மாகாணத்தின் ஒரு பகுதிக்கு வந்த ஆற்காடு நவாப், பசியும் களைப்பும் மிகவே துவண்டு போனார். திரும்பிப் பார்த்தால் படைவீரர்கள் பசியால் மயங்கி விழும் நிலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

ஓய்வு கொடுப்பதே உகந்ததென எண்ணி அனைவரையும் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, சிலரை அழைத்து ""அருகில் அனைவரும் உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து வாருங்கள்!'' என அனுப்பினார்.

அவர்களும் தேடியலைந்து விட்டு வந்து, ""மன்னா ! இவ்விடத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. எங்கும் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. பலர் ஊரையே காலி செய்து நீர்வளம் மிக்க இடங்களை நாடிச் சென்று விட்டனர். இப்போது நாம் மட்டுமே இங்கிருக்கிறோம். எதிரில் ஒரு கோயில் இருக்கிறது. அதன் முன்பு இருக்கும் குடிசையில் கோயில் குருக்கள் இருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.

""கோயில் என்றால் ஏதேனும் உண்பதற்கு இருக்கும். குருக்களிடம் கேட்டு வாங்கி வாருங்கள். அனைவரும் பகிர்ந்து உண்ணலாம்!'' என்றார் நவாப்.

கோயிலுக்குச் சென்ற வீரர்கள் ஐயரிடம் ""உண்பதற்கு என்ன இருக்கிறது?'' எனக் கேட்டனர். அவர் ""பெருமாள் நிவேதனத்திற்கு என இரண்டு மூட்டை வரகரிசி வைத்துள்ளேன். அதனை தினமும் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பிறகு நானும் என் குடும்பத்தினரும் பகிர்ந்துண்போம்'' எனத் தெரிவித்தார். ""இருந்தாலும் பரவாயில்லை; மன்னர் பசியாக இருக்கிறார். தற்போது இருப்பதைக் கொடுங்கள்'' எனக் கேட்டனர்.

""ஐயா! இன்னும் சாமிக்குப் படைக்கவில்லை. கொஞ்சம் இருங்கள் தருகிறேன்!'' எனக் கூறி பெருமாளுக்கு படைத்த பிறகு அந்த வரகரிசி சாதத்தை அவர்களிடம் பானையோடு கொடுத்தனுப்பினார் குருக்கள். காவலர்கள் விஷயத்தைக் கூறி பானை வரகரிசி சாதத்தை மன்னர் முன்வைத்தார்கள்.

அதைப் பார்த்து திடுக்கிட்ட நவாப் ""இது என்ன கருமை நிறத்தில் இருக்கிறது?'' எனக் குழம்பி, தன் வளர்ப்புப் பறவைக்கு அதை வைத்தார். அதனை அப்பறவை கூட உண்ணாமல் விலகியது.

நவாப்புக்கு சந்தேகம் வந்தது.

ஆலய குருக்களை அழைத்து வரச்செய்து விவரம் கேட்டார். ""பஞ்சம் காரணமாக வரகு தானியத்தை சமைத்து பெருமாளுக்கு படைப்பதாகவும், அதுவே நவாப்பிற்கு அளிக்கப்பட்டது!'' என்றும் சொன்னார். நவாப் பசியை மறந்து கோயிலுக்குச் சென்று பார்த்தார்.

கோயில் சுவர் இடிந்து விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற நவாப், அதிகாரிகளை அழைத்து, ஆலயத் திருப்பணிக்கும், நித்திய பூஜைக்கும் வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கட்டளையிட்டு விட்டு, கூடாரம் திரும்பினார்.

அந்நேரம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திருமாலின் திருவருளால் நவாப்பிற்கு அளிக்கப்பட்டிருந்த வரகரிசி சாதம், நவாப் உண்ணக்கூடிய வகையில் உயர்ரக அரிசியுணவாக மாறியது. கண்ணெதிரே நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட நவாப், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்தார்.

தன் இருப்பிடம் தேடி வந்தோர் பசி போக்கி உணவளிக்கும் பரந்தாமனின் கருணையைப் போற்றினார். அனைவரும் பசியாற உண்டு மகிழ்ந்தனர்.

"தீவினையை நீக்கி வாழ்விற்கு ஒளி வழங்கும் மாணிக்கமாக பிரகாசிக்கக் கூடியவர்' என்ற பொருளில் "கரியமாணிக்கப் பெருமாள்' என்ற திருநாமத்தோடு கோயில் கொண்ட இறைவன், தமக்கு வேண்டியதை விண்ணிலிருந்து ஆசியாக வழங்கியதாக உணர்ந்த நவாப், திருமாலுக்கு "விண்ணவராயப் பெருமாள்' என்ற திருநாமம் சூட்டி திருப்பணிகள் செய்து மகிழ்ந்தான்.

அன்று முதல் இன்று வரை தன்னைத்தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் வகையில் வேண்டியதை அருள்கிறார் விண்ணவராயப் பெருமாள்.

கோயில் அமைப்பு: கருவறையில் கரியமாணிக்கப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருட்காட்சி தருகிறார். கனகவல்லித் தாயார் தனி சந்நிதியில் அமர்ந்திருக்கிறார்.

நம்மாழ்வார், கருடாழ்வார், ராமாநுஜருக்கு என தனித் தனியே சந்நிதிகள் உள்ளன. திருவோணத்தன்று பெருமாளை வணங்க நினைத்தவை கைகூடும். சர்ப்ப தோஷம் நீங்க இக்கோயிலில் உள்ள கல்யாணம் கூட்டி வைக்கும் கருடாழ்வாரை வழிபடுவது சிறந்தது. சனிக்கிழமைகளில் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

பஞ்சத்தில் இருந்து செழிப்பாக மாறிய தலமாதலால் இக்கோயிலில் பிரார்த்தனை செய்வதன் மூலம் வீட்டில் செல்வமும் அருளும் கூடுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு விழா, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜைகள், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

நேரம்: இத்திருக்கோயிலில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமியை தரிசிக்கலாம்.

அமைவிடம்: சென்னை பாடி - ஆவடி சாலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்துள்ள தொலைபேசி நிலைய பேருந்து நிறுத்தம் அருகே (வெள்ளாளர் தெரு வழி) இக்கோயில்அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 9444462610.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.