குரு, சந்திரன் : கஜகேசரி யோகம்

குரு, சந்திர பகவான்கள் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று இருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது!
Guru Bhagawan
Guru Bhagawan
Published on
Updated on
2 min read

குரு, சந்திர பகவான்கள் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று இருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது! இதில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருந்தால் நற்பலன்கள் இரட்டிப்பாகும். எதிரிகளை வெல்லும் திறமை, வாழ்க்கைப் பாதையை இலகுவில் கடக்கும் நிலையையும் ஏற்படுத்தும். கஜம் என்றால் "யானை', கேசரி என்றால் "சிங்கம்'. யானை கூட்டத்தை ஒரு சிங்கம் துரத்துவது போல் சகல தோஷங்களும் இந்த யோகத்தால் நிவர்த்தியாகி விடும்!

மற்ற கிரகங்கள் எவ்வளவு பலம் பெற்றிருந்தாலும் குறிப்பாக, களத்திரகாரகர் சுக்கிர பகவான் (குரு பகவானுக்கு சமமாக சுபத்துவம் பெற்ற கிரகம்) வலுத்திருந்தாலும், திருமண காலங்களில் ""குரு பலம் வந்து விட்டதா?'' என்று தான் கேட்பார்கள். குரு பகவான் ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் சஞ்சரித்தால் திருமணம் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். மற்ற இடங்களில் சஞ்சாரம் செய்யும்பொழுது சுப பலன்கள் குறைகிறது. 

அதேநேரம், குரு பகவான் வக்கிரம் பெறும் சுமாராக நான்கு மாதங்கள் மற்ற ராசியினருக்கு குரு பலம் உண்டாகும். இந்த கும்ப ராசி குரு பெயர்ச்சி காலத்தில், மேஷ ராசிக்கு பதினொன்றாம் வீட்டிலும், மிதுன ராசிக்கு ஒன்பதாம் வீட்டிலும், சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டிலும், துலாம் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும், மகர ராசிக்கு இரண்டாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், இந்த ராசி அன்பர்களுக்கு குரு பலம் கூடி நற்பலன்கள் சற்று கூடுதலாக கிடைக்கும். 

""குரு பார்க்க கோடி புண்ணியம்; கோடி பாப நிவர்த்தி'' என்பார்கள். அதனடிப்படையில் குரு பகவானின் 5, 7, 9 -ஆம் பார்வைபடும் ராசிகளும், அங்கு அமர்ந்திருக்கும் அவ்வப்போது அமரும் கிரகங்களும் குரு பகவானின் பார்வையைப் பெற்று நற்பலன்கள் உண்டாகும். 

குரு பகவானின் அருட்பார்வை: அதிர்ஷ்டம் என்கிற வார்த்தைக்கு உரிய கிரகம் குரு பகவான் என்றால் மிகையாகாது.  நல்ல ஆரோக்கியம், ஆளுமை, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நல்ல மனைவி, நல்ல வாழ்க்கைத் துணை, குழந்தைகள், சிறந்த நண்பர்கள், உறவினர்கள், முறையான வாழ்க்கை, புகழ், அந்தஸ்து இவை அனைத்திற்கும் குரு பகவானே காரகர் ஆகிறார்.

குரு பகவான் தன காரகர் (பொருளாதாரம்), சந்தான காரகர் (மழலைச் செல்வம்), ராஜ கிருபா காரகர் (ஆளுபவர்களின் நன்மையைப் பெற்றுத் தருபவர்), தேவ கிருபா காரகர் (கடவுளின் அருளைக் கொண்டுவந்து சேர்ப்பவர்).

குரு பகவானின் பலம் குறைந்திருந்தால்: ஜாதகத்தில் குரு பகவானின் பலம் குறைந்து இருந்தால் உண்டாகும் தீய பலன்களைக் கீழே காண்போம்:

தீவிரவாதத்தில் மனம்  செலுத்துதல், பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தல், சூதாட்டங்களில் ஈடுபடுதல், கடன் தொல்லைகளில் மாட்டிக் கொள்ளுதல் (குறிப்பாக மற்றவர்களுக்கு தங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதாலோ  அல்லது முன் ஜாமீன் போடுவதாலோ சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுதல்), சமுதாயத்தில் பெயர் கெடுதல், கல்லீரல், வயிறு, குடல் நோய்கள், தோல்நோய்கள் போன்ற உபாதைகளும் உண்டாகுதல், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைகளால் பிரச்னைகள் உண்டாகுதல் போன்ற கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள்.  

இத்தகையோர் பிரதி வியாழக்கிழமைகளில் ஒரு பொழுதாவது விரதமிருந்து, குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வர, கஷ்ட நஷ்டங்கள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.