தலைநகரில் திருமால் தரிசனம்!

மகாபாரத காலத்தில் புகழ்பெற்றிருந்த "இந்திரப் பிரஸ்தம்'தான் இன்றைக்கு "தில்லி' என வழங்கப்படுகிறது.  
தலைநகரில் திருமால் தரிசனம்!
தலைநகரில் திருமால் தரிசனம்!

மகாபாரத காலத்தில் புகழ்பெற்றிருந்த "இந்திரப் பிரஸ்தம்'தான் இன்றைக்கு "தில்லி' என வழங்கப்படுகிறது.  

இங்கு 1940-ஆம் வருட வாக்கில் மத்திய அரசுப் பணிகளுக்காக தென்னிந்தியாவிலிருந்து வந்த பலர் குடியேறினார்கள். அவர்கள் தங்களுக்குள் ஓர் அமைப்பைத் துவங்கி, கலை, கலாசார மற்றும் ஆன்மிக விழாக்களை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். 

அவர்களில் வைஷ்ணவத்தைப் பின்பற்றியவர்கள் 1943-இல் ஒன்றுகூடி, ஸ்ரீ சித்தாந்த சபை என்ற ஓர் அமைப்பைத் துவங்கி நடத்தி வந்தனர் (இந்த அமைப்பு 1968-69 -இல் முறைப்படி பதிவு செய்யப்பட்டது). 
இந்த அமைப்பின் சார்பில் பத்து நாள்கள் ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி, ஸ்ரீ தேசிக உற்சவம், ஆழ்வார்கள் அவதார நட்சத்திர தினங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, 1964 பிப்ரவரி 26-இல் ஸ்ரீவெங்கடேஸ்வரா மந்திர் சொசைட்டி என்ற அமைப்பைத் துவங்கி ஏப்ரல் 12-இல் பதிவு செய்து, கோயிலுக்கும், வேத பாடசாலை அமைப்பதற்கும் தனித்தனியாக  நிலம் ஒதுக்குமாறு அரசு உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். 

இதையடுத்து, 1965 ஜூன் மாதத்தில் 1,200 சதுர கஜ நிலம் கோயில் கட்டவும், 1966 மார்ச் மாதம் ஒரு ஏக்கர் நிலம் வேத பாடசாலை அமைப்பதற்கும் என ஒதுக்கித் தரப்பட்டது.

1965-இல் ஆடிப்பூரத்தன்று, ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டு, பாலாஜி ஸ்ரீ வெங்கடேஸ்வரர், பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ தேசிகர் படங்கள் வைத்து  பூஜை செய்து வேத பாடசாலை துவக்கப்பட்டது. தினமும் பூஜைகளும், விஷ்ணு சகஸ்ரநாமமும், ஸ்லோகங்களும், பல்வேறு பருவத்தினருக்கும் சொல்லித்தரப்பட்டது.

இக்கோயில் கட்டட நிதிக்காக 1967 நவம்பர் 12-ஆம் தேதி எம்.எஸ். சுப்புலட்சுமி இசைக் கச்சேரி நடத்தி உதவினார்.

மகாபலிபுரத்தில் இருந்த கோயில் சிற்பக்கலைக் கல்லூரி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி, கோயில் வடிவமைக்கப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் தோன்சே ஆனந்த் பை (டி.ஏ.பை) என்பவரால் 11.9.1975 -இல் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளில் மாலவன் மகிமையால் மக்கள் நிதி கொண்டு 1979 -இல் ஆனந்த நிலைய விமானம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிக பாடசாலையும் கட்டி முடிக்கப்பட்டது. 

மூலவர், உற்சவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ராமர் சீதா லக்ஷ்மண ஹனும மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1980 -இல் சுதர்சனர் மூலவரும், உற்சவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராஜ கோபுரமும், லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீகிருஷ்ணர், லஷ்மி நரசிம்மர் சன்னதிகளும் கட்டப்பட்டு 1991 ஜூன் 21-இல் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. 

இத்திருக்கோயிலில் பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம், அன்னக் கூடை உற்சவம், அத்யாயன உற்சவம் , தனுர் மாதம், திரு ஆடிப்பூரம், பங்குனி உத்திர விழா,  உகாதியன்றும், தமிழ் வருடப்பிறப்பன்றும் பஞ்சாங்கம் படித்தல் ஆகியவை நடைபெறுகின்றன . 

இக்கோயிலில், திருக்குடந்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் வேதாந்த ராமாநுஜ மகா தேசிகன், 45-ஆவது அஹோபில மட ஜீயர்,  ஸ்ரீசடகோப ரங்கநாத யதீந்திர மகா தேசிகன், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ரங்கராமாநுஜ மகாதேசிகன் சுவாமிகள், வானமாமலை பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சுவாமிகள், மதுரமங்கலம் ஜீயர் சுவாமிகள், திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகள் ஆகிய வைணவ மடாதிபதிகள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 
காஞ்சி காமகோடிபீடம்  ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆச்சார்யர் போன்ற அருளாளர்கள் வந்து தரிசனம் செய்துள்ளர். 

அமைவிடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் தில்லி ஆர்.கே. புரம் செக்டார் 3 -இல் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 09999476880.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com