புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரு பகவான் வாசம் செய்யும் பீமா நதி!

தீர்த்தங்களைத் தெய்வமாகப் பாவித்து "நதிகள் விழா' நடத்தி, புனித நீராடி வருகின்றோம். இதனை "கும்பமேளா', "புஷ்கரம்' என இருவகையாகப் பிரிக்கலாம். 

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 11:00 am

எஸ். வெட்கட்ராமன்

தீர்த்தங்களைத் தெய்வமாகப் பாவித்து "நதிகள் விழா' நடத்தி, புனித நீராடி வருகின்றோம். இதனை "கும்பமேளா', "புஷ்கரம்' என இருவகையாகப் பிரிக்கலாம். 

கும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு காலகட்டத்தில் வடநாட்டில் உள்ள நதி தீரங்களில் ஹரித்வார் (கங்கை), பிரயாகை (திரிவேணிசங்கமம்), உஜ்ஜயினி (ருத்ரசாகர்), நாசிக் (கோதாவரி) போன்ற இடங்களில் நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை "மஹா கும்பமேளா' கொண்டாடப்படுகிறது. 

"புஷ்கரத் திருவிழா' ஒவ்வோர் ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது, குறிப்பிட்ட அந்த ராசிக்குரிய நதி தீரத்தில் "புஷ்கர விழா' நடைபெறுவது வழக்கம். 

குரு பகவான் ஒரு ராசியில் பிரவேசித்து அந்நதியில் வாசம் செய்யும் முதல் 12 நாள்கள் "ஆதி புஷ்கரம்' எனவும், ராசியிலிருந்து மாறுவதற்கு முந்தைய 12 நாள்கள் "அந்திம புஷ்கரம்' எனவும் அழைக்கப்படுகிறது. 

இந்த ஆதி புஷ்கர புண்ணிய காலத்தில், அனைத்து நதி தீர்த்தங்களுக்கும் அதிபதியான பிரம்மா உட்பட மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் வந்து நதிகளில் நீராடி மகிழ்வதாக ஐதீகம். எனவே புஷ்கர காலங்களில் குறிப்பிட்ட நதி தீர்த்தில் நாம் நீராடுவதால், பாரதத்தில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இக்காலங்களில் செய்யப்படும் பல்வேறு தானங்களுக்கும், தர்ப்பணம் முதலிய பித்ரு வழிபாட்டிற்கும், காம்யார்த்த ஹோமங்களுக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

குரு பெயர்ச்சி: இவ்வாண்டு (பிலவ வருடம்) திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நவம்பர் 20-ஆம் தேதி இரவு 11.31-க்கு பெயர்ச்சியடைவதாக ஜோதிட வல்லுநர்கள் கூறியுள்ளனர். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கும்ப ராசிக்கு உரிய நதி "சிந்து நதி' ஆகும். ஆனால் சிந்து நதியின் ஒரு பகுதிதான் இன்றைக்கு நம் நாட்டில் தென்படுகிறது; பெரும்பகுதி அந்நிய நாட்டில் பாய்கிறது. 

எனவே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பல்வேறு மடாதிபதிகள், குரு மகா சந்நிதானங்கள், ஆதீனகர்த்தர்களின் அறிவுரை மற்றும் அருளாசியின்படி, இவ்வாண்டு புஷ்கர விழா பீமா நதியில் நடைபெறும் என்றும், அதற்கான இடமாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள "பண்டர்பூர்' எனப்படும் "பண்டரிபுரம்' தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பீமா நதியின் சிறப்பு: பீமா நதியைப் பற்றி மகாபாரதத்தில் பல இடங்களில் சிலாகித்துக் கூறப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலுள்ள பீமா சங்கர் மலைத் தொடரிலிருந்து பீமா நதி பிரவாகமெடுக்கிறது. இந்நதிக்கரையில் உள்ள பீமாசங்கர் கோயில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. 

பண்டரிபுரத்தில் பாயும் இந்நதியின் ஓட்டம் மூன்றாம் பிறைச் சந்திரனைப் போல அமைந்துவிட்டதால் "சந்திர பாகா' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்த சந்திர பாகா நதிக்கரையில்தான் ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் திருக்கோயில் அமைந்துள்ளது. "பாப விநாசினி' என்று போற்றப்படும் இந்நதியில் நீராடுபவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்ற நம்பிக்கை காலம் காலமாக உள்ளது. 

பாண்டுரங்கன் மகிமை: ஸ்ரீ பாண்டுரங்கன் 28 யுகங்களாக இந்தத் தலத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு செங்கல்லின் மேல் நின்று, கைகளை இடுப்பில் வைத்தவாறு, புன்சிரிப்புடன் பக்தர்களை அருகில் வந்து தன்னைத் தொடும்படி அழைக்கும் வண்ணம் "சம்சாரக் கடலின் ஆழம் இடுப்பளவுதான், பயப்படாதே!' என்று அபயம் அளிக்கும் அதியற்புதக் கோலம். 

ஆதி சங்கரர் இப்பெருமானைப் போற்றிய "பாண்டுரங்காஷ்டகம்' என்னும் தோத்திரப்பாடலில் விட்டலனின் அருட் தன்மையை வர்ணித்துள்ளார். புண்டரீகன் என்னும் பக்தனுக்கு அருளியதன் மூலம், "பெற்றோரைப் பேணுவதுதான் முதல் கடமை' என்று உலகிற்கு உணர்த்தியவன் இந்த விட்டலன். 

காஞ்சி மஹா பெரியவர் 1981-ஆம் ஆண்டு புனித யாத்திரையாக இத்தலத்திற்கு வந்து 168 நாள்கள் தங்கியிருந்தார்.

புஷ்கர விழா: குரு பெயர்ச்சியின் போது கும்ப ராசிக்கு உரிய நதியான பீமா நதியில் 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 02.12.2021 (வியாழக்கிழமை) வரை குரு பகவான் வாசம் செய்வார். அச்சமயம் தனது சாந்நித்யத்தை அவர் அதிகம் வெளிப்படுத்துவதாக ஐதீகம். ஏற்கெனவே கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்ம புத்ரா, துங்கபத்திரா போன்ற புஷ்கர விழாக்களை நடத்திய ஆன்மிக அன்பர்கள் குழுவினரே இவ்வாண்டு பீமா சங்கர் புஷ்கர விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். 

தொடர்புக்கு: மகாலட்சுமி சுப்பிரமணியம் - 9840053289; வளசை கே.ஜெயராமன் - 9444279696.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.