இழந்ததை பெறுவது எப்படி?

ஓர் ஊரில் பணக்கார மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு அநேக செல்வங்கள் இருந்தன. ஆனால், அத்தனையும் அவரது செல்வங்கள். அவர் தனது தந்தையின் ஆஸ்தியை விரும்பியபடியெல்லாம் அனுபவித்துக்கொண்டிருந்தார். 
இழந்ததை பெறுவது எப்படி?
Published on
Updated on
1 min read

ஓர் ஊரில் பணக்கார மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு அநேக செல்வங்கள் இருந்தன. ஆனால், அத்தனையும் அவரது செல்வங்கள். அவர் தனது தந்தையின் ஆஸ்தியை விரும்பியபடியெல்லாம் அனுபவித்துக்கொண்டிருந்தார். 

அவர் சோம்பேறித்தனமாக இருந்ததால், நாளடைவில் அவரது ஆஸ்தி அனைத்தையும் இழந்தார். மேலும்,  அவருக்கு  அநேக வியாதிகள் வந்து வாட்டின. இதனால், அவர், தன் வீட்டுக்கு ஒரு வைத்தியரை வரவழைத்தார். 

இவரைப் பற்றி நன்கு அறிந்த அந்த வைத்தியர், அந்த மனிதருக்கு ஒரு மருந்தைக் கொடுத்துவிட்டு, ""இந்த மருந்தை, உடலில் வியர்வை வந்த பின்னர்தான் சாப்பிடவேண்டும்!'' என கூறிச்சென்றுவிட்டார்.

"வியர்வையா, எனக்கு வியர்வையே வராதே! என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். 

அப்பொழுது அவரின் மனைவி ""நீங்கள் ஏதாவது வேலை செய்தால்தான் வியர்வை வரும்! எனவே, சிறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள்'' என்றார்.

முதலில், வீட்டில் உள்ள சிறிய வேலைகளைச் செய்யத் தொடங்கிய அவர், தொடர்ந்து சுறுசுறுப்பாக நிலத்திலும் இறங்கி வேலை செய்யத் தொடங்கினார். வியர்வை வரும்போதெல்லாம் வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்தார்.

விரைவிலேயே அவருடைய நோயெல்லாம் குணமானது. இழந்த ஆஸ்தியையும் திரும்பப் பெற்றார். உடனே அவர் வேகமாக வைத்தியரின் வீட்டுக்குச் சென்று ""நீங்கள் கொடுத்த மருந்தால் நான் விரைவில் குணமானேன். தற்போது என்னால் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடிகிறது. என்னிடமிருந்து சென்ற அனைத்துச் செல்வங்களும் மீண்டும் எனக்குக் கிடைத்து விட்டது!'' என மகிழ்வுடன் கூறினார்.

அதற்கு அந்த வைத்தியர், ""நான் உன் வியாதிக்கு மருந்து தரவில்லை; உன் சோம்பேறித்தனம் குணமாகவே மருந்து தந்தேன். இது மருத்து அல்ல. சாதாரண பருப்புப் பொடிதான். சுறுசுறுப்பாக வாழ்ந்தாலே நோய் நம்மை அணுகாது. நலமுடன் வாழலாம்!'' எனக் கூறினார்.

பரிசுத்த வேதாகமத்தில், நீதிமொழிகள் 13:4-இல் "சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்!' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீதிமொழிகள் 20:4-இல் "சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே, நாமும் நம்முடைய வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்போம்; தேவன் நமக்கு நன்மையான ஈவுகளை பரத்திலிருந்து கட்டளையிடுவார். இழந்ததைத் திரும்பப் பெறுவோம். வளமுடன் வாழ்வோம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com